Monday, 6 January 2014

வெகு நாட்களுக்குப் பின்
என்னோடு பேசத்துவங்கிய
நண்பன் 
சந்தேகம் கேட்டான்

கிழட்டு மாடுகளில்
பால்கறப்பது எப்படி..

அடப் பதறே..

அதைப் போன்ற சுலபம்
வேறேதும் இல்லையடா..

கிழட்டு மாடுகள்
அன்பின்பாற்பட்டவை
ஒரு புன்னகையில்
அல்லது 
ஒரு சோகப்பார்வையில்
அவற்றை வசப்படுத்த முடியும்..

ஒரு முறை 
உனக்கு அடிமையானதென்றால்
அதன்பின்னான
சொற்ப வாழ்நாளில்
உனக்கு அடிமையாகவே
தன்னை எழுதிக் கொள்ளும்
அவை..

முதல் புன்னகைக்குப் பின்
உனக்கு 
புன்னகைக்க வேண்டிய
அவசியம் கூட இல்லை..

பசிக்கிறது என்று சொன்னபின்
பால் வர
தாமதமானால்
நீ
சந்தோஷமாக கோபப்படலாம்..

மீயன்பினால்
உன்னிடம் பேச முற்பட்டாலும்
ஒரு பார்வையில்
அவற்றை
ஊமையாக்கிவிடலாம்..

அன்பைத் தந்தாலும்
எந்நாளும் அவை
அடிமை என்பதால்
குறைந்தபட்சஅன்பைக்கூட
திருப்பியளிக்க வேண்டிய
அவசியமில்லாதவை அவை..

முக்கியமாக
நீ அழைக்கும்போது
வரவில்லை எனில்
என்னவென்றாலும் பேசலாம்..

அவற்றை 
மாடினம்அல்ல 
என்று கூட
கவிதை எழுதலாம்..

மொத்தத்தில்
அந்திம காலத்து மாடுகளை
பயன்படுத்துவதும்
தூற்றுவதும்
அவ்வளவு எளிது..

அறிந்தாலும் சகித்துக் கொள்ளும்
கிழட்டு மாடுகள்..

No comments:

Post a Comment