Sunday, 26 January 2014

நான் ஏன்
அழுதுகொண்டிருக்கிறேன்..

வழக்கம் போல்தான்
குழந்தைகளைக் 
கொன்று கொண்டிருக்கிறார்கள்
அவர்கள்..

அக்கிரமங்கள் செய்தவர்கள்
வழமை போலதான்
நீதி கேட்டு
சிலம்புகளோடும்
பெருங்கூட்டத்தோடும்
நீதி மன்றங்களுக்கு வருகிறார்கள்..

காற்றில் பறந்து வந்தவொரு சொல்
என் கண்களைக் குத்தியிருக்கக் கூடும்..

நீங்கள் அறியாது
என் வயிற்றினுள்
பசியெனும் நோய்
பரவியிருக்கக் கூடும்..

என்னை அடித்த செருப்பு
எனது
கனவில் வந்திருக்கக் கூடும்..

சுருண்டு ஒரு மூலையில்
படுத்திருக்கும் என்னிடம்
ஒரே ஒரு முத்தம் மட்டும்
மிச்சமிருக்கக் கூடும்..

அம்மா அம்மாவென 
அரற்றிய சிறுமியொருத்திக்கு..
.................
.................

என்ன வேண்டுமானால்
இருக்கட்டுமே..

எந்த மதிப்பும் இல்லாத ஒருவன்
சாலையோரத்திலோ
மதுச் சாலையிலோ
அழுதபடி இருக்கட்டுமே..

நாசமாய்ப் போகிற
ஒரு கண்ணீர்த் துளியைப் பற்றி
யாருக்கு என்ன கவலை..>

நான் ஏன் 
அழுதுகொண்டிருக்கிறேன் என்பதை
உங்களிடம் சொல்லவேண்டிய
அவசியமே
எனக்கு இல்லை..

புத்தம் சரணம் கச்சாமி..

(மரியாதையாக ஓடிப் போய்விடுங்கள்..)

No comments:

Post a Comment