Thursday 28 November 2013

புதையல் படலம்..


எங்கள் சிறுவர் பிராயம் கதைகளால் நிறைந்திருந்தது.. ஒவ்வொரு நண்பர்களைப் பற்றியும், தெருவில் தென்படும் ஒவ்வொரு மனிதர்களைப் பற்றியும், தெருக்கள் பற்றியும், வீடுகள் பற்றியும், பெண்கள் பற்றியும், மரங்கள் பற்றியும், மரத்தில் பூத்துதிரும் பூக்கள் பற்றியும் கூட கதைகள் குவிந்து கிடந்தன. வாழ்வின் மகிழ்வையும் துயரங்களையும் அப்போது மனிதர்கள் கதை சொல்லியே கடந்து போனார்கள் என்று தோன்றுகிறது. ஒரு வேளை அப்போது மனிதர்கள் மனிதர்களோடு பேசுதல் என்பது பேசுதலாகவே இருந்தது காரணமாக இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் பேச்சென்பது கதைதானே..

தேவதைக் கதைகளையும் பேய்க்கதைகளையும் விடுங்கள்.. என்னை அப்போது ரொம்ப சுவாரசியப்படுத்தியது புதையல் பற்றிய கதைகள்தான்.. எங்கள் ஊரின் முக்கியமான பணக்காரர் ஒருவர் அவரது வயலில் தோண்டியபோது ஒரு குடம் நிறைய தங்கம் புதையலாக கிடைத்துதான் பணக்காரர் ஆனார் என்றொரு கதை இருந்தது. படித்த பல கதைகளில் கதை மாந்தர்களுக்கு புதையல்கள் கிடைத்தபடி இருந்தன. எதோ விஷயத்துக்காக தோண்டும்போது புதையல் பானையில் கடப்பாரை பட்டு 'ணங்' கென்ற ஒலி கேட்பது என்பது கதையின் சுவாரசியமான கட்டமாகும். எங்காவது யாராவது எதாவது ஒரு காரணத்துக்காக நிலத்தை தோண்டுவதைப் பார்த்தால் கூட அங்கே நான் நின்று கவனிக்கத் துவங்கி விடுவேன். கடப்பாரை நிலத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் அந்த ணங் சத்தத்தை எதிர்பார்த்தபடியே நிற்பேன்..

அடல்ட்ஸ் ஒன்லி மாதிரி சிறுவர் ஒன்லியான கதைகளும் நம்பிக்கைகளும் அப்போது அதிகம். கொக்கு கூட்டம் வானில் பறப்பதைக் கண்டால் விரல்களை மடக்கி நகங்களை ஒன்றோடொன்று உரசியபடி 'கொக்கே கொக்கே பூப்போடு.. கொக்கே கொக்கே பூப்போடு..' என்று மொத்தமாக கத்துவோம். அப்படி கத்தினால் நகங்களில் வெள்ளை வெள்ளையாக புள்ளியனைய பூக்கள் விழும் என்பது நம்பிக்கை.. (அட பக்கிகளா.. நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் விழுந்தால் அது கால்ஷியம் குறைபாடுடா என்று சொல்லித் திருத்த அப்போதுயாரும் இலலை..) அது மட்டுமல்ல புதுத்துணியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நம்ம அதிஷா வினோ பரப்பிய ஏழுசெக்கண்ட் ஏழுமலையான் படம் மாதிரி கொக்கு நம் நகங்களில் பூவும் போட்டு புதுத்துணியும் வழங்கிய நண்பர்கள் பற்றிய கதைகள் அப்போது ஏராளம் உண்டு..

கழுதை கத்துவதை கேட்டால் தலைமுடியை பிடித்துக் கொள்ள வேண்டும்..(எப்படி யோசித்தாலும் இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை) அதே மாதிரி ஆயி இருந்துவிட்டு இன்னமும் கால் கழுவாதவன் நம்மை தொட வரும்போது தலைமுடியை பிடித்துக் கொள்ள வேண்டும்.. (இதுவும் என்ன லாஜிக்..?) ஒரே கலர் சட்டை போட்டுக் கொண்டு வந்தால் ஒருவரை ஒருவர் கிள்ளிக் கொள்ளவேண்டும்.. என்பது மாதிரியான நான்சென்ஸ் லாஜிக்குகள் அப்போது ஏராளமாக உண்டு.

இதில் ஒன்றுதான் செம்போத்து பற்றிய நம்பிக்கையும் கதையும். முதலில் செம்போத்து என்பது என்ன என்று சொல்லிவிடுகிறேன். அப்படியே காகத்தை ஜெராக்ஸ் பண்ணி வைத்த மாதிரி இருக்கும் பறவை அது. ஆனால் வால் மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜகாக இருக்கும். அதே மாதிரி நம்ம இளவட்டங்கள் தலையை கலரிங் செய்து முன்முடியை மட்டும் பிரவுன் அடித்துக கொள்கிறாரகளே.. அதே மாதிரி இரண்டு இறக்கைகளிலும் கொஞ்சம் பிரவுன் வண்ணம் தீற்றி இருக்கும்.. ரொம்ப தூரம் எல்லாம் பறக்காது. கொஞ்ச தூரம் பறத்தலும் பின்னர் தரையோட்டமுமாக இருக்கும். அதற்காக flightless bird கிடையாது.. முக்கியமாக உஹு உஹு என்ற அதனுடடைய கூவல் அல்லது சத்தம் தனித்தன்மை உடையது.. பழைய படங்களில் இரவில் நடக்கும் திகில் காட்சிகளில் திகிலைக் கூட்ட இந்த சத்தத்தைத்தான் ஸ்பெஷல் சவுண்டு எஃபெக்ட்டாக பயன்படுத்தி இருப்பார்கள்..

செம்போத்து ரொம்ப கூச்சமுள்ள பறவை.. அரிதினும் அரிதாகத்தான் கண்ணில் படும்.. அந்த அரிதுதன்மை காரணமாகவே அதைப் பற்றிய ஒரு நம்பிக்கை எங்களை மாதிரி சிறுவர்களுக்கிடையில் இருந்தது..

செம்போத்தின் கூட்டில் ஒரு சஞ்சீவி வேரை வைத்திருக்கும். அந்த வேரை வைத்திருப்பதனால்தான் அது யார் கண்ணிலும் படாமல் அந்த கூட்டை மறைத்து வைத்து வாழ்கிறது. அந்த கூட்டை கண்டுபிடித்து அந்த சஞ்சீவி வேரை கண்டு பிடித்தால் அது புதையல் இருக்கும் இடத்தை நமக்கு காட்டிக் கொடுக்கும். அது மட்டுமல்ல. அந்த வேர் கையில் இருந்தால் நாம் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து போகமுடியும்.. இதுதான் அந்த நம்பிக்கை..

எனக்கு இந்த இரண்டுமே ஏற்கத் தக்கதாகத்தான் இருந்தது. புதையல் கிடைத்தாலும் சந்தோஷமே.. இன்விசிபிள் மேனாக மாறினால் டபுள் சந்தோஷமே.. இன்விசிபிள் மேனாக கையில் சஞ்சீவி வேருடன் புதையலைத் தேடி நான் அலைவது மாதிரியான கற்பனைகள் எனது ஆர்வத்தை அதிகப்படுத்தியபடியே இருந்தன.

எப்போதாவது கண்ணில் படும் செம்போத்தை துரத்தி அதன் கூட்டை எப்படியாவது கண்டு பிடித்து விடுவதற்காக நாங்கள் பட்ட பாடு ஒரு நாவலைத் தாண்டும்.  சுருளியாறு மின்நிலையத்தில் எங்க அப்பா வேலைபார்த்த காலத்தில் செம்போத்து கூட்டைத் தேடி காடெல்லாம் அலைந்திருக்கிறோம்.  அப்பாவிடம் அடி வாங்கும் பொழுதிலெல்லாம் என்னுடைய ஒரே ஆசை : ஒரே ஒரு சஞ்சீவி வேர். அது மட்டும் இருந்தால் போதும் இந்த மனுஷன் அடிக்க வரும்போது அப்படியே மாயமாய் மறைந்து விடலாம்..

கடைசி வரை எங்கள் கண்ணில் படும் செம்போத்து தன் கூட்டை காட்டவே இல்லை..

பின்னர் இன்னொரு செய்தி எங்கள் வீட்டில் உலா வந்தது. எங்கள் பூர்வீக வீட்டில் ஒரு புதையல் உள்ளது.. அந்த புதையலை ஹரி என்ற பெயருளள ஒருவன்தான் எடுப்பான் என்று எங்கள் கொள்ளுத்தாத்தா ஜோசியம் பார்த்து சொன்னதாக ஒரு தகவல் உண்டு.. அதை கேட்டதில் இருந்து சிறு வயதிலிருந்தே எனக்குள் ஒரு நமநமப்பு உண்டு. எங்கள் குடும்பத்தில் மொத்தம் ரெண்டு ஹரி உண்டு.. ஒருவன் எனது அத்தை மகன் ஹரி என்ற ஹரிகிருஷ்ணன்.. இன்னொன்று ஶ்ரீதரன் என்று அழைக்கப்படும் ஹரிஹரனாகிய நான்..

இந்த இரண்டு ஹரிகளில் எந்த ஹரி அந்த புதையலை எடுக்கப் போகிறானோ என்று பெரியவர்கள் கொளுத்திப் போட்ட திரி ரொம்ப நாட்களாக என் மனதுக்குள் எரிந்து கொண்டிருந்தது.. (மச்சான் ஹரி மனதிலும்தான்).. கடைசியில் எங்க அப்பாதான் பங்காளிகளுக்கு பணம் கொடுத்து அந்த வீட்டை வாங்கினார்..

அப்படியும் எங்கள் வீட்டு பாவுள்ளை இடித்துக கட்டும்போது எதாவது ணங் சத்தம் கேட்கிறதா என்று நான் கொஞ்ச நாள் முன்னால் கூட எதிர்பார்த்தேன் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்..

ஒரு வேளை பின்னாளில் அந்த வீட்டை நான் வாங்கி இடித்து ரீமாடல் செய்து கட்டினால் கட்டாயம் அங்கே புதையல் இருக்கிறதா என்று தேடுவேனாகத்தான் இருக்கும்..

இன்று இதை எழுதும்போது கூட புன்னகைக்கும் என் மனதின் ஒரு ஓரத்தில் பூ வேலைப்பாடுகள் செய்த புதையல் பானை ஒன்று உள் நிறைந்த தங்கக் காசுகளுடன் என்னைப் பார்த்தை கையசைத்தபடிதான் உள்ளது--

சென்ற முறை பைக்கில் கீழே விழுந்து கை எலும்பு முறிந்து அலைந்து கொண்டிருந்த போது கைக்கட்டைப் பார்த்த ஒரு நண்பர் கேட்டார் : என்ன சார் புதையல் எடுத்தீங்களா..? என்று

கொஞ்சம் யோசனைக்குப் பின் நான் சொன்னேன்.. ' இன்னும் இல்ல சார்.. ' என்று..


நீங்க என்ன சொல்றீங்க..? இன்னும் இல்லதானே..?

Saturday 23 November 2013

முதலிலேயே எல்லோரையும் எச்சரித்து விடுகிறேன்.. இந்த கதையில் சரிபாதி புனைவுதான்.. அல்லது இந்தக் கதையில் சரிபாதி நிஜம்தான்.. அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்..

நான் எழுத நினைத்த 13 காதல் கதைகளில் இரண்டாவது இதுதான்.. இதுவும் காதல் கதைதான்.

அப்போது நான் டவுசர் போட்டு பள்ளி சென்று கொண்டிருந்த காலம். மீசை அரும்பத் துவங்கி ஊரெல்லாம் நடக்கும் காதல் விவகாரங்கள் மட்டும் கண்ணில் பட்டபடி இருக்கும் பருவம். (உடனே ஊரெல்லாம் எல்லோரும் காதலித்துத் திரிந்தார்கள் என்று உங்கள் கற்பனைக் குதிரையை ராங் ரூட்டில் அலைய விட வேண்டாம். காதல் அப்போது மிக மிக அபூர்வம். ஒரே ஒரு செய்திதான் என்றாலும் அது மாதக்கணக்கில் பலர் வாயில் விழுந்து வெளிவந்தபடி இருக்கும்)  அந்த அண்ணன் அந்த அக்காவை காதலிக்கிறானாம்.. அந்த அண்ணனும் அந்த அக்காவும் கோவில்ல பகல் 12 மணிக்கு மீட் பண்ணிக்கிறாங்களாம் என்ற செய்திகள் விடலைக் காதுகள் நுழைந்து வாய்கள் வழியாக விரைவாகப் பரவும் ஸ்டேட்டஸ்கள்.. லைக்கும் அதிகம்.  ஷேரிங் மிக மிக அதிகம்.. இவை தவிர அந்தப் பொண்ணு உன்னை அடிக்கடி பாக்குறா. அவன் அந்த பொண்ணு தெருப்பக்கம் சுத்துறான் என்ற  அப்டேட்டுகள் தனியாக அலையும்..

நான் படித்தது பக்கத்து ஊர் பள்ளியில். அந்த பள்ளியில் ப்ளஸ் டூ உண்டு. கோ எஜுகேஷன். பள்ளிப் பருவத்து காதல்கள் கொஞ்சம் என்ன ரொம்ப ரொம்ப அபூர்வம்தான். எவனாவது அந்த பொண்ணை லவ் பண்றேன்னு தனியாக மூத்திர சந்துக்குள் நின்று தனக்கு தானே சொல்லிப் பார்த்தால் கூட விஷயம் வெளியே தெரிந்து விவகாரமாகி பெண்வழி சொந்தக்காரர்கள் எல்லாரும் குறைந்தபட்ச ஆயுதங்களோடு வந்து அதிகபட்ச சேதாரங்களை உண்டு பண்ணிவிட்டுப் போவதற்கான சாத்தியக்கூறுகள்தான் மிக அதிகம்..

இந்த காரணத்தினாலேயே அப்போது தத்தம் உயிருக்கு துணிந்து காதலித்தவர்கள் எல்லோருமே புரட்சியாளர்களாக கருதப்பட்டார்கள். (எங்களால் என்பதை இங்கு அழுத்திச் சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி பெரியவர்களால் அவர்கள் சமுதாயத்தின் விஷ ஜந்துக்களாக கருதப்பட்டார்கள் என்பதை சொல்லித் தெரியணுமா என்ன..?)

சரி. நம்ம கதைக்கு வருவோம். இப்படி காதல் அபூர்வமான, வசீகரமான, விஷ ஜந்துவாக சமூகத்துக்குள் வளர்ந்து வந்த காலகட்டத்தில் புஷ்பாக்கா என்றொரு அக்கா ப்ளஸ் டூவில் படித்து வந்தாள். அவளைப் பற்றி முதலில் உங்களுக்கு தெளிவாக வர்ணித்து விட வேண்டும்.

தலைவி சராசரியை விட உயரம். திணுக்கென்ற உடற்கட்டுடன் நடையே கெ◌ாஞ்சம் ஆம்பிளை மாதிரிதான் இருக்கும். அகலமான முகம். அப்போதைய பிரபல வில்லன் நடிகரான ராதாரவிக்கு பெண் வேஷம் போட்டு கறுப்பு கலர் அடித்து விட்ட மாதிரிதான் இருப்பாள். குரல் கூட கொஞ்சம் அந்த சாயலில்தான் இருக்கும். தலைவி அதிரடிக்கு பெயர் போனவள். சும்மா விளையாட்டுக்கு நம்மகூட படிக்கிற பிள்ளைதானே என்று பையன்கள் எதாவது கமெண்ட் அடித்தாலே தலைவி அடிதடியில் இறங்கி விடுவாள். ஆக்சுவலாக அதை அடிதடிஎன்று சொல்ல முடியாது. ஒன் வே டிராஃபிக் மாதிரிதான். தலைவி அடிப்பாள். தடிமாடு அடி வாங்கும். அவ்வளவுதான்.

புஷ்பாக்கா இவ்வளவு கோபக்காரியாக இருந்த போதிலும் அவளை தட்டிக் கேட்க அந்த வகுப்பில் படித்த ஒரு தடியனுக்கும் துப்பில்லையா என்று நீங்கள் நினைத்தால். சத்தியமாக இல்லை. அந்த கோழைத்தனத்துக்கு பின்னணியில் ஒரு டெர்ரரான ரகசியம் இருந்தது..

புஷ்பாக்காவின் அப்பா பெயர் செல்லையன். அப்படி சொன்னால் அந்த ஊரின் வங்கிழவனென்ன, போஸ்ட் மேனுக் கே கூட தெரியாது. கேஸ் செல்லையன் என்றால்தான் எல்லாருக்கும் தெரியும். (இங்கு சொல்லப்படும் கேஸ் என்பது gas அல்ல.. case.. கோர்ட்டில் போடுவார்களே. அந்த கேஸ். நீங்கள் பாட்டுக்கு gas செல்லையன் என்று தப்பர்த்தம் பண்ணிக் கொண்டு அவரது வயிற்றைப் பற்றிய கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்).

விஷயம் என்னவென்றால் கேஸ் செல்லையன் அடிதடியில் இறங்குகிற டைப் கிடையாது. அந்த பாடியும் அவ்வளவு வொர்த் இல்லை. ஆனாலும் ஊரையே தனது கேஸ் போடும் திறமையால் திணறடித்தவர் அந்த மாமனிதர். (டிராஃபிக் ராமசாமிக்கு எல்லாம் இவர் ரொம்ப ரொம்ப முன்னோடி). கோவிலுக்கு தலைவன் போகிறார். அங்கே அர்ச்சனை சீட்டு வழங்கும்போது தேவஸ்தான ஊழியர் பாக்கி 25 பைசா சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டால் போதும்.உடனே கேஸ் போட்டு ஊழிரை திணறடிப்பார். கிட்டத்தட்ட கோவிலில் பூஜையே நின்று போகுமளவுக்கு பெரிய பிரச்சினையாகிப் போகும்.

ஒரு தனியார் பள்ளியில் இவரது தம்பி மகனை சேர்க்கப் போகும்போது தலைமையாசிரியர் மதிக்கவில்லை என்பதற்காக கேஸ் போட்டு அந்த ஸ்கூல் கமிட்டிக்கு தடை வாங்கியவர் அவர். யூனியன் தேர்தலில் முறைகேடு என கேஸ் போட்டு தலைவரை பதவியேற்க முடியாத அளவு டார்ச்சர் கொடுத்தவர் அவர். இத்தனைக்கும் காரணம் ரொம்ப சிம்பிள்தான். சொத்து வரி கட்டியதற்கு ரசீது தருவதற்கோ இல்லை எதோ சர்ட்டிபி கேட்டுக்கோ தலைவர் கையெழுத்து வேண்டும் என்று இரண்டு நாள் அலைய விட்டுவிட்டார்கள். சட்ட ஞானம் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில் செல்லையா வந்து விட்டால் ஜட்ஜே வந்தமாதிரிதான் ஊர் பெரியமனிதர்கள் உள்ளுக்குள் நடுங்கியபடி இருப்பார்கள். ஊர்ப் பெரிய மனிதர்களே நடுங்குகிறார்கள் என்றால் அவர்களுடைய வாரிசுகள் எம்மாத்திரம். அந்த பயத்தினாலேயே தலைவி புஷ்பாக்காவின் அடியையும் இம்சையையும் தாங்கியபடி இந்த ஒரே வருஷம் பொறுத்துக்கிட்டா போதும் இந்த ஸ்கூலை விட்டும் இவளோட டார்ச்சரை விட்டும் வெகு தூரம் ஓடி விடலாம் என்று பல்லைக் கடித்துக் கொண்டுதான் இருந்தார்கள் அந்த அண்ணன்கள்.

இப்போது புஷ்பா அக்காவைப் பற்றிய ஒரு தெளிவான பிம்பம் உங்களுக்கு வந்திருக்கும் என நம்புகிறேன். உரத்த குரலில் தலைவி பேசும் பேச்சு கூட இப்போது உங்கள் காதுக்கு கேட்கக் கூடும்..

இந்த நிலையில்தான் அவளுக்கு அந்த பீதியூட்டும் ஆசை வந்தது. (அவளுக்கு பீதியூட்டும் ஆசை இல்லை. யாருக்கு பீதியூட்டும் என்பதை மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்) அப்போது பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்த பாரதிராஜா படங்களைப் பார்த்து தொலைத்தாளா இல்லை அக்கம்பக்கத்தில் எதாவது எழவெடுத்த ஜோடி ஒன்று காதலிப்பதை பார்த்து இன்ஸ்பையர் ஆனாளா என்று தெரியவில்லை..

செந்தட்டிக்கு சனி திசை ஆரம்பிக்கும் ஒரு கெட்ட நாளில் தலைவி தானும் யாரையாவது காதலிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்..

இங்கே திடீரென எதற்காக செந்தட்டி வருகிறான் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. அதற்கு முன்னாடி செந்தட்டி யார் என்பதை நான் சொல்லி விடுகிறேன். தலைவன் கறுப்பாக நெடுநெடுவென இருப்பான். பெரும்பாலும் வேட்டி கட்டிதான் பள்ளிக்கு வருவான். படிப்பிலும் பெரிய ஆள் கிடையாது. விளையாட்டு என்றால் என்ன விலை என்பான். ஜோக் அடித்து நண்பர்களை கவர்பவனும் கிடையாது. எதோ அவங்கப்பா அவனை ஒரு டிகிரியாவது வாங்கியாகணும் என்று கட்டாயப் படுத்தியதால்தான் பள்ளிக்கே வந்து கொண்டு இருந்தான். பெரிய லட்சியங்கள் ஏதும் இல்லாத சராசரி எண்பதுகளின் தமிழ் இளைஞன்தான் அவன்.

முக்கியமாக இந்த காதல் கீதல் எல்லாம் அவனுக்கு தெரியாது. தேவையும் இல்லை. அடிதடிக்கு பேர் போன சாதியில் இருந்து வருபவன். அவங்க அப்பாவுக்கு பெரும் சொத்து உண்டு. படிப்பு முடித்ததும் அவனுக்கு கட்டி வைப்பதற்கென்று இரண்டு அத்தைகளும், இரண்டு அக்காக்களும் பெண்களைப் பெற்று வைத்துக கொண்டு ஒருவரை ஒருவர் முறைத்தபடி அலைந்து கொண்டிருந்தார்கள். மகளுக்கு கொடுத்து விடுவதற்காக 50 பவுன் 75 பவுன் என்று தங்கமும் அவரவர் வீட்டு பீரோக்களில் உறங்கிக் கொண்டு இருந்தது. இது தவிர அவனுடைய அம்மா மகனுக்கு திருமணத்தின்போது புல்லட் வாங்கித் தரச் சொல்லலாமா இல்லை கார் வாங்கித் தரச் சொல்லலாமா என்ற யோசனையில் வேறு இருந்தாள். படிப்பு முடிந்ததும் மகனுக்கு ஒரு ஃபைனான்ஸ் வைத்துத் தருவதற்காக ஊரின் மெயின் ரோட்டில் இருந்த கடையை இடித்துக கட்டிக் கொண்டிருந்தார் அவனது அப்பா. இத்தனை சிறப்பையும் மீறி காதலிக்க அவன் பைத்தியக்காரனுமல்ல. காதல் தேசத்தின் தியாகத் தலைவனுமல்ல.. அவனது எண்ணமெல்லாம் ஒரேயொரு பி.ஏ. அம்புட்டுதான்..

சரி. சனி அவன் திசையில் திரும்பி பெரும் மையலோடு அவனைப் பார்த்த நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம். (அநேகமாக எல்லோரும் இப்பவே யூகித்து இருப்பீர்கள்.) ஆம். அதுதான் நடந்தது. காதல் வருவதற்கு காரணமே தேவை இல்லை என்பார்கள். புஷ்பாக்காவுக்கு காரணமே தேவைப்படவில்லை. கிளாசில் இருப்பவர்களிலேயே பணக்காரன் அவன் மட்டும்தான் என்ற காரணம் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கலாம. தலைவி எந்த சிந்தனையும் இல்லாமல் செந்தட்டிக்கே தன்னை  காதலியாகவும், மனைவியாககவும்  கொடுக்கும் அதிர்ஷ்டத்தை வழங்கிவிடலாம் என்ற முடிவு செய்து ஒரு இண்டர்வெல்லில் நேராக செந்தட்டியிடம் சென்று, 'டேய் செந்தட்டி. நான் உன்னை லவ் பண்றேன். நீ என்னை எப்பருந்து லவ் பண்ணப் போறன்னு சாயந்திரம் ஸ்கூல் விடுறதுக்கு முன்னாடி சொல்லிடு'  என்று சொல்லிவிட்டு அவளது காதலின் அடையாளமாக வீட்டிலிருந்து வரும் வழியில் வாங்கி வந்திருந்த கமர்கட்டு மிட்டாய்களை அவன் டெஸ்கில் வைத்து விட்டு போய்விட்டாள்.

வகுப்பே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. அனைவரும் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவனைப் பார்ப்பது போல செந்தட்டியை பெரும் துயரத்தோடு பார்த்தார்கள். செந்தட்டியோ கிறுகிறுத்துப் போய் உட்கார்ந்திருந்தான். அவனது டெஸ்க்கில் உட்கார்ந்திருந்த கமர்கட் மிட்டாய்கள் அவனைப் பார்த்து வில்லத்தனமாக புன்னகைத்துக கொண்டு இருந்தன. இண்டர்வெல் முடிந்து அடுத்த வகுப்புக்கு வேதியல் ஆசிரியர் வந்ததும் பாத் ரூம் வருகிறது என்று சொல்லிவிட்டு அவர் திட்டத் துவங்கும் முன் வெளியே போனவன் அப்படியே ஸ்கூலை விட்டு வீட்டுக்கு ஓடிவிட்டான்.

இரண்டு நாட்கள் தலைவனுக்கு தொடர் காய்ச்சல். விஷயத்தை வீட்டில் சொன்னால் பெரும் பிரச்சினை ஆகும். அந்த காலகட்டத்தில் ஒரு பெண் ஆணிடம் காதலை சொன்னாலும் ஆண் பெண்ணிடம் காதலைச் சொன்னாலும் ஆண்தான் குற்றவாளி. அடியெல்லாம் அவனுக்குதான் விழுகும். பெத்த அப்பனாத்தாள் கூட அவனை நம்ப மாட்டார்கள். தலைவன் எரிதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கத் துவங்கிவிட்டான். டாக்டர் சாதாரண காய்ச்சல்தான் என்று மருந்து மாத்திரைகள் கொடுத்து விட கடும் யோசனையோடும் கடும் காய்ச்சலோடும் வீட்டுக்குள் படுத்திருந்தவன் மீது மேலும் மையல் கொண்ட சனி புஷ்பாக்காவை அவன் வீட்டுக்கே அழைத்து வந்தான்.

'ரெண்டு நாளா செந்தட்டி எதுக்கு ஸ்கூலுக்கு வரலைன்னு வாத்தியார் கேட்டுட்டு வரச் சொன்னாரு..' என்றபடி அவள் வீட்டுக்குள் வந்தபோது காய்ச்சலால் ஏற்கெனவே உலர்ந்து போயிருந்த செந்தட்டியின் தொண்டை தீப்பிடித்து எரிதல் போலாயிற்று. சக்தி இருந்திருந்தால் அவன் அப்படியே கட்டில் பிளந்து பூமாதா தன்னை உள்ளே இழுத்துக் கொண்டிருக்கக் கூடாதா என்றெல்லாம் கூட வேண்டி இருக்கக் கூடும். காய்ச்சலின் பலவீனத்தாலும் சொந்த வீட்டிலிருந்து தப்பியோட வேறு இடமில்லாததாலும் அவன் திகிலோடு படுத்துக் கிடக்க வேண்டியதாகிப் போனது.

அவனுடைய அம்மாவுக்கு 'கூடப் படிக்கும் பிள்ளை'களின் இந்தப் பரிவைப் பார்த்ததும் நெகிழ்வாகிவிட்டது. காப்பித் தண்ணி கொடுத்துதான் அவளை அனுப்பி வைத்தாள். அவள் போன பின் அவனது கட்டிலில் உட்கார்ந்திருந்த பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டும் அதே மர்மப் புன்னகையோடு அவனை பார்த்தபடியே இருந்தது..

சொல்லவும் முடியாமல் வாந்தியெடுக்கவும்முடியாமல் செந்தட்டியின் தவிப்பு பெரிதாகிக் கொண்டே போனது. தலைவி மிரட்டல்களின் அளவையும் கூட்டிக் கொண்டே போனாள். தலைவன் பித்து நிலைக்கு போய் கோவிலுக்கு எல்லாம் போகத் துவங்கி விட்டான்.

பள்ளியிலும் அவன் மீதான இரக்கப் பார்வைகள் பல்கிப் பெருகத் துவங்கி விட்டன. புஷ்பாக்ககாவோ அனைத்து நண்பர்களிடமும் செந்தட்டிதான் தனது வருங்கால கணவன் என்று அறிவித்தபடியே இருந்தாள். அவனுக்காக மதிய உணவு சேர்த்து கொண்டு வருவது. அவனுக்காக இலந்தைவடை வாங்கி வருவது, அவனுக்காக பொட்டானிக்கல் கலெக்‌ஷனுக்கு போகும் டூருக்கு பணம் கட்டுவது என்று பல தீவிர வாத நடவடிக்கைகளையும் மேற்கொண்டபடி இருந்தாள்.  (இதில் பொட்டானிக்கல் டூருக்கு அவள் பணம் கட்டியதை மட்டும் தலைவன் ஏற்றுக் கொண்டான்). அப்போது இன்றைய நிலைமை போல டாஸ்மாக்குகள் சகஜமாக இருந்திருந்தால் அந்த ஊர் இன்னொரு குடிகாரனை சுவீகரித்திருக்கும். ஒரே ஒரு ஒயின் ஷாப்பும், குடிப்பது குற்றம் என்ற பொது மனநிலையும் இருந்ததால் தலைவன் குடியிலிருந்து தப்பி இருந்தான். ஆனால் புஷ்பாக்காவிடமிருநது தப்பிக்கும் வகை தெரியாமல் தவித்தபடி இருந்தான்..

அந்த ஊரின் காதலர் திருத்தலமே கோவில்தான். பழம் நழுவி பாலில் விழுந்து அப்படியே குதித்து வாய்க்குள்ளும் விழுந்தது மாதிரி செந்தட்டி கோவிலுக்குப் போகத் துவங்கியிருப்பதை கேள்விப் பட்டதும் புஷப்பாக்கா குஷியாகி விட்டாள். அவன் கோவிலுக்குப் போகும் நேரத்தை அறிந்து தானும் பட்டுப் பாவாடை தாவணி எல்லாம் அணிந்து கொண்டு கோவிலுக்குப் போகத் துவங்கினாள். தலைவனுக்கு இருந்த ஒரே புகலிடமும் இப்படியாக பறிபோனது..

புஷ்பாக்கா துரத்துவதும், செந்தட்டி ஒளிவதுமான இந்த விளையாடடு போகப் போக எங்களுக்கு ஒரு இன்ட்டரஸ்ட்டிங்கான போட்டியைப் பார்ப்பது போல ஆகிவிட்டது. செந்தட்டியிடம் உன்னைப் பற்றி நல்லபடியாக சொல்கிறேன் என்று ப்க்கத்து வீட்டு கைக் குழந்தை சொன்னால் கூட அதற்கு காசு கொடுத்துவிடும் பரவச மனநிலையில் புஷ்பாக்கா இருந்ததால் அவளது காதலை வைத்து வாழும் கூட்டம் ஒன்றும் உருவாகி சைடு வாக்கில் பில்லைப் போட்டு தின்று கொழுத்து வளர்ந்தபடி இருந்தது. மற்றொரு புறம் செந்தட்டியை பயமுறுத்த புஷ்பா வர்றாடா என்று சொன்னாலே அவன் விழுந்து அடித்துக் கொண்டு ஓடி விடுவான் என்பதும் நண்பர்களுக்கு விளையாட்டாக மாறிவிட்டது..

இப்படியான ஒரு நாளில்தான் புஷ்பாக்கா பொறுமையை இழந்தாள்.

செந்தட்டியை ஒரு சுபயோக சுப தினத்தில் பள்ளியின் ஆண்கள் பாத்ரூம் சந்தில் வழி மறித்தாள் புஷ்பாக்கா. தப்பியோட வழியில்லாமல் பொறியில் அகப்பட்ட புள்ளிமானைப் போல செந்தட்டி திகைத்து நிற்க புஷ்பாக்கா, 'பார்றா செந்தட்டி. நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன். நீ என்னாடான்னா என்னோட லவ்வை இப்ப வரைக்கும் ஏத்துக்கவே மாட்டேங்குற.. மரியாதையா சொல்லு என்னை லவ் பண்ணப் போறியா இல்லையா..?' என்று மிரட்டினாள்.

செந்தட்டியோ, 'இந்தா பாரு புஷ்பா. எனக்கு ரெண்டு வருஷத்துல எங்க அத்த மகள கட்டி வைக்கப் போறாங்ய. என்னால உன்னை லவ் பண்ண முடியாது. ஆளை விடு..' என்று அவனது முதல் காதல் வசனத்தைப் பேசினான்..

'இந்தா பார்றா. நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். இனி நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன் கூடதான். நாளைக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்குள்ள என்னை நீ லவ் பண்ணலன்னா முனித் தோப்பு கெணத்துல செத்து நான் பொணமாத்தான் மிதப்பேன். அது மட்டுமில்ல. என்னை நீ லவ் பண்ணி ஏமாததிட்டன்னு லெட்டர் எழுதி வச்சிட்டுதான் சாவேன். பாத்துக்க..' என்று மிரட்டிவிட்டு புஷ்பாக்கா போன போது அத்தனை நேரமும் அவள் பின்னால் நின்று (பாத்ரூம் போகும் வழியை அவள் மறித்து நின்றிருந்தாள்) மூத்திரம் முட்ட காத்திருந்த பையன்களே அதிர்ச்சியாகி விட்டார்கள்.

செந்தட்டி அழுதான், அரற்றினான், அய்யோவெனப் புலம்பினான். ஆனால் இதிலிருந்து வெளிவரும் வழி மட்டும் அவனுக்குத் தெரியமல் தவித்தான். சக நண்பர்களோ 'அந்தப் புள்ள சும்மா அப்புடித்தாண்டா சொல்லும. சூசைடு எல்லாம் பண்ணிக்கிறாது. நீ தைரியமா இருடா..' என்று தைரியம் சொன்னார்கள். ஆனாலும் செந்தட்டியால் தைரியமாக இருக்க முடியவில்லை..

அந்த 'நாளை' வந்தே விட்டது. செந்தட்டிக்கு அள்ளு இல்லை. அடிவயிற்றில் பெருங்கனல் ஒன்று பற்றியெறிந்து பய அமிலத்தைப் பொங்கவிட்டபடி இருந்தது. பையன் உண்ணாமல் உறங்காமல் பித்துப பிடித்தமாதிரி இருப்பதைப் பார்த்த அவனது அம்மா பேயோட்டிக்கு சொல்லிவிடலாமா என்று யோசித்தபடி இருந்தாள்.

விடிகாலை முன் மதியமானது. முன்மதியம் நண்பகலானது. நண்பகல் பின் மதியமானது. செந்தட்டிக்கு கை கால்கள் எல்லாம் நடுங்கத் துவங்கின.நண்பர்கள் அவ்வப்போது முனித்தோப்பு கிணத்தடிப் பக்கம் போய் வந்து போய்வந்து அவள் வரவில்லை என்று தகவல் சொல்லி அவனுடைய பீதியை இன்னும் அதிகப்படுத்தியபடி இருந்தார்கள்..

அழுதாலும் புலம்பினாலும் சாயந்திரம் அஞ்சு மணியை வரவிடாமல் யாரால் தடுக்க முடியும். அந்த அஞ்சு மணி வந்தே விட்டது. செந்தட்டி பயத்தோடு காத்திருக்க ஒருவன் ஓடி வந்தான்..

'எலேய் செந்தட்டி. புஷ்பா கெணத்துக்குள்ள குதிச்சிட்டாடா. முனித்தோப்பு வாசல் வழியா வருவான்னு வெய்ட் பண்ணுனோம். அவ எங்கிட்டே சைடு வழியா உள்ள வநதிருக்கா அவ கெணத்துக் கிட்ட போறதை தூரத்துல இருந்து பாத்து அவ கிட்ட ஓடுறதுக்குள்ள கிணத்துக்குள்ள குதிச்சிட்டா. கெணத்து மேட்டுல செருப்பை அவுத்து வச்சிட்டு ஒரு லெட்டரை எழுதி வச்சிருக்காடா..' என்றதும் செந்தட்டி விரக்தி மனநிலைக்குப் போய்விட்டான்..

உலகில் முதன் முதலாக காதல் வேண்டாம் என்ற கொள்கைக்காக அவள் விழுந்த கிணற்றிலேயே கல்லைக் கட்டிக் கொண்டு தானும் விழுந்து விடலாம் (எழவு அவனுக்கு நீச்சல் வேறு தெரியும்) கிணற்றை நோக்கி ஓடினான். கூடவே நண்பர்களும்.

இவர்கள் போவதற்குள் கிணற்றடியில் பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது. உள்ளே குதித்து நீச்சல் வீரர்கள் புஷ்பாக்காவை தேடியபடி இருந்தார்கள். உடனடியாக உள்ளே குதித்து உயிரை விட முடியாத துக்கமும் சேர்ந்து கொள்ள செந்தட்டி முதல் முறையாக அழத் துவங்கினான். நண்பர்கள் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திகைத்து அவனைப் பார்த்தபடி இருந்தார்கள்..

அது வரைக்கும் மறைந்திருந்த புஷ்பாக்கா செந்தட்டிஅழுவதை தாங்க முடியாமல் வெளியே வந்து அவனிடம் 'பாத்தியா.. நான் செத்துடடேன்னு தெரிஞ்சதும நீயே அழுவுற பாத்தியா.. இப்பவாவது என்னை லவ் பண்றேன்னு ஒத்துக்கோ' என்றது..

அனைவரும் திடுக்கிட்டு புஷ்பாக்காவைப் பார்த்தார்க்ள். செந்தட்டிக்கு வந்ததே ஒரு கோபம். அங்கே இருந்த பட்டைக் கம்பை எடுத்து அவளை விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்து விட்டான். அவள் அடி தாங்காமல் கதறியபடி ஓடிவிட்டாள்.

மறு நாள் இப்படி அடிப்பவனை எல்லாம் புருஷனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிக்கையும் விடுத்து விட்டாள்.

இப்படியாக செந்தட்டி அந்த அக்காவின் மரணப் பிடியில் இருந்து வெளியே வந்தான்..

இது இப்படி இருக்க, சென்ற முறை ஊருக்குப் போன போது நான் படித்த ஊருக்கும் போகும்படி ஆனது. பஸ்ஸ்டாண்டில் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் அருகில் புன்னகையோடு வந்தார். அட. நம்ம செந்தட்டி அண்ணன். அவனது பையனுக்கு எஞ்சினியரிங் கிடைத்துள்ளதாம. அவனைப் பார்க்க மதுரைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இடது காது கொஞ்சம் அவுட்டாகி இருந்தது. வலது காதுப் பக்கம் பேசும்படி சொல்லி கொஞ்ச நேரம் பேசிவிட்டு பஸ் வந்ததும் புறப்பட்டுப் போனார்..

அதே நாளில் அந்த ஊரில் வேலை முடிந்து திரும்பும் வழியில் ஒரு பெட்டி கடையில் நின்று சிகரெட் புகைத்தபடி இருந்தேன். ஒரு பெரிய பெண்மணி தன் மகள் போல ஒருத்தி உடன் நடந்து வர, கையில் சின்னப் பொதி போன்ற மூட்டையில் பச்சைக் குழந்தையை சுமந்தபடி சென்றார். அவள்தான் புஷ்பாக்கா என்று நான் சொல்லவும் வேண்டுமா.. நான் ஏற்கெனவே சீரியலில் நடித்திருந்ததால் அவரது மகள் என்னை அடையாளம் கண்டு அவளது அம்மாவின் காதில் ஏதோ சொன்னது. புஷ்பாக்கா முகம் மலர வேக வேகமாக என்னிடம் வந்து 'நீதானய்யா கோலங்கள்ல அங்குச்சாமியா நடிச்ச..? நீ சின்னமனூருதான்னு சொல்லி இருக்காங்க. இப்ப எந்த சீரியல்ல நடிக்கிற..' என்று ஆர்வமாக பேச ஆரம்பித்து விட்டார். மகள் பிரசவத்துக்காக வந்திருக்கிறாளாம். சந்தோஷமாக அதே தடித்த குரலில் உரக்கப் பேசி சொன்னாள். நீ படித்த பள்ளியில்தான் நானும் படித்தேன் என்று சொல்ல எனக்குத் தோன்றவில்லை..

அவள் கையில் இருக்கும்அந்தக் குழந்தை அவளுக்கும் செந்தட்டிக்குமான பேத்தியாக இல்லாமல் போனதைப் பற்றி எனக்கு அப்போது சின்ன வருத்தம் மட்டும் தோன்றிது உண்மை..

அனைவருக்கும் எனது பிரியங்கள்..

Friday 15 November 2013

பிரிவு..

*****

அணைந்த 
மெழுகுவர்த்தி ஒன்றின்
திரியைப் பிரியும்
புகையைப் போலதான் 
நீ முயல்கிறாய்..

அதே திரியின்
சிறு புள்ளி 
கனலைப் போலத்தான்
நானும் முயல்கிறேன்..

Thursday 14 November 2013

இன்று காலை அவசர வேலையாக எனது ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தேன்.. சாலையோரம் ஒரு பெண், தனது பதின் வயதுகளைக் கடந்து கொண்டிருப்பவள், ஒரு வெடியைப் பற்ற வைத்துக் கொண்டிருப்பதை சற்று தொலைவிலேயே பார்த்துவிட்டேன்.. பெண் என்பதாலும் கிட்டத்தட்ட சிறுமி என்பதாலும் அது சிறு வெடியாகத்தான் இருக்கும் என்ற தைரியத்தில் வண்டியை நிறுத்தாமல் முன்னேறினேன்.. சரியாக கடக்கும்போது வெடி வெடித்தது.. எனது இடது காதில் ஙொய்யென்ற ஒரு ரீங்காரம்.. அந்த வெடியின் ஒலியளவு ஆயிரக்கணக்கான டெசிபல்களாக இருந்திருக்கக் கூடும்.. வண்டி தடுமாறிவிட்டது.. அந்த சிறு பெண் என்னைப் பார்த்து எள்ளலாகச் சிரித்தாள்.. எனக்கு காதில் ரத்தம் வருகிறதோ என்ற அச்சம். வண்டியை சற்று தள்ளி நிறுத்தி காதில் விரல் விட்டுப் பார்த்தேன்.. நல்ல வேளை ரத்தம் வரவில்லை.. பன்னிரெண்டு மணிநேரம் ஆகியும் இன்னும் காது மதமதவென்றுதான் இருக்கிறது..

இது இப்படி இருக்க, எங்கள் செல்ல நாய் சின்னா சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. நடு நடுங்கியபடி பீரோவுக்குப் பின்னால் உள்ள இடைவெளியில் புகுந்து கொண்டு வெளியே வர மறுக்கிறான். நாய்களுக்கு மனிதர்களைப் போல பத்துமடங்கு கேட்கும்திறன் உண்டு.. ஒரு சிறு வெடியே அவர்களுக்கு ஆட்டம் பாம் போல கேட்கும்.. காலையில் என் காதைப் பதம் பார்த்த வெடியென்றால்..? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. சுற்றிச் சுற்றி இடைவிடாமல் வெடி போட்டு வெடித்தபடி இருக்கிறார்கள் மனிதர்கள். சின்னாவால் தனது காதைப் பொத்திக் கொள்ள முடியவில்லை.. எப்படி பைத்தியம் பிடிக்காமல் 38 மணி நேர வெடிச்சத்தத்தைத் தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்று தெரியவில்லை..

ஒவ்வொரு தீபாவளிக்கும், கார்த்திகைக்கும் அவனுக்கு இதே பாடுதான்..

நாளை மறுநாளோடு இந்த சத்தங்கள் ஓய்ந்துவிடும். சின்னாவின் துயரங்களும் முடிந்துவிடும்.. மனிதர்களின் சந்தோஷங்களுக்காக அவன் நான்குநாள் சாப்பாட்டைத் தியாகம் செய்தது பெரிய விஷயமில்லை.. இந்த நான்கு நாளும் அவன் அனுபவித்த பயங்கரத்தை எப்படி ஈடு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.. நாளை மறுநாளிலிருந்து நடந்தவற்றை மறந்துவிட்டு வழக்கம் போல வாலாட்டிக் கொண்டு எங்களை சந்தோஷப்படுத்தப் போகிறான் சின்னா.. ஆனால் எனது குற்றவுணர்வைத்தான் என்ன செய்வது என தெரியவில்லை.. இத்தனைக்கும் நான் ஒரு வெடி கூட வெடிக்கவில்லை..
ஒரு பொழுதில்
நான் தந்த புன்னகைகளை
என்றென்றும்
நான் திருப்பிக் கோரப் போவதில்லை..

கல்லில் பதிந்துவிட்ட
சில பனித்துளிகள் போதும்
என் பசிக்கு..

என்னை அழைத்துச் செல்லும் பாதைகள்
என்றென்றும் உறங்குவதில்லை..

உனக்குத் தெரியாத
சில கொலுசொலிகளும்
அறியாமல்
நீ சிந்திச் சென்ற முத்தங்களும்
உன் சுருக்குப் பையிலிருந்து
நழுவி விழுந்த வருடல்களும்
என்னிடமிருக்கின்றன..

உனக்கு நம்பிக்கை இல்லையெனினும்
எனக்குத் தெரியும்
நான் வாழ்ந்துவிடுவேனென்று..
கறுப்பு அல்லது வெள்ளை
இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச்
சொல்கிறீர்கள் நீங்கள்..
ஆனால்
சாம்பல் வண்ணத்தில்தான் 
வசிக்கிறேன் நான்.

ஆம் அல்லது இல்லை
இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள்
நீங்கள்..
ஆனால்
இரண்டுக்கும் இடையில் உள்ள
காரணங்களில்தான் வாழ்கிறேன் நான்..

பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை
இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச்
சொல்கிறீர்கள் நீங்கள்
ஆனால்
தெரியவில்லை என்ற
மடமையில்தான் வாழ்கிறேன் நான்..

ஒருவேளை என்றேனும்
உங்களுக்கு நேரம் கிடைக்குமெனில்
உங்கள் கேள்விகளுக்கெல்லாம்
என்னால் ஏன் பதிலளிக்க முடியவில்லை
என விளக்க
நான் தயாராய்த்தான் இருக்கிறேன்..

ஒருவேளை என்றேனும்
உங்களுக்கு நேரமிருந்தால்
எனது பதில்களை
காது கொடுத்துக் கேளுங்கள்..
உங்களால் உற்றுக் கேட்க முடிந்தால் கேளுங்கள்
உடல் சிதைத்து கொல்லப்பட்ட
ஒவ்வொரு குழந்தையின் 
தகப்பன்களுடைய 
மௌன அழுகையை..

பூமி 
புரண்டு படுத்தாற்போல
பிள்ளைகளுக்கு ஆதரவாய்
பெருங்கூட்டமொன்று நிற்கிறது அங்கே..

இவர்களில் எத்தனைபேர்
சிதைக்கப்பட்ட என் பிள்ளையை
பெரு மனத்தோடு தம்
குடும்பங்களில் சேர்த்துக் கொள்வார்கள்?

பச்சைக் குழந்தை..
சுடு நீர் பட்டால் அழுவாள்..
இரும்புக் கம்பிகளால்
அடித்துச் சிதைக்கப்பட்டபோது
அப்பா என்றழைத்து
அழுதிருப்பாளோ..

கழுத்து நெறிபட்டபோது
காப்பாற்ற வா அப்பா
என்று கதறி இருப்பாளோ..

ஒன்பது பிராயத்தினள்.
ஒரு வேளை
இருபதின் பிராயத்தினளாக
இருக்கவும் கூடும்..

பெண்ணாய்ப் பெற்றதால்
பெருங்குற்றவாளியாய் நிற்கிறான் அவன்..

அய்யன்களிடமும் அம்மைகளிடமும்
அவன் கேட்கும்
வரம் ஒன்றுதான்..

என் பிள்ளையை
சீக்கிரம்
சாக விடுங்கள்..

அந்தகாரம் சூழும்
இரவின் அழுத்தத்தில்
அவன் நம்பும் கடவுளடத்தில்
அவன் கேட்கும் வரமெல்லாம் ஒன்றுதான்..

தயை கூர்ந்து
என்னை
அவளது
அப்பனாக அன்றி
அம்மையாகச் செய்திடும் அய்யா..

என் பிள்ளையின்
வலியை நான்
ஏற்றுக் கொள்வேன் அய்யா..
அதிகபட்சம் எங்கள் ஊரில் இருந்து 40 கிலோமீட்டர்தான் இருக்கும்.. மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள், படு மோசமான சாலை, எந்நேரமும் உதடுகளில் புன்னகை சுமந்திருக்கும் மனிதர்கள் (பெரும்பாலும் தேயிலைத் தோட்டக் கூலித் தொழிலாளர்கள்).. நகரத்தின் கசகசப்பில் இருந்து விலகி சொர்க்கத்துக்கு போன மாதிரி இருக்கும் மேகமலை.. (சொர்க்கத்துக்குப் போகும் வழி எப்போதுமே கரடுமுரடாகத்தான் இருக்கும் போல) குளிர் உறையும் தனிமைக்கு எங்களுக்கெல்லாம் புகலிடம் அதுதான். எந்நேரமும் மேகம் வந்து தொட்டுவிட்டுப் போகும்.. சிந்நாட்களில் கடைசி பஸ்சை விட்டுவிட்டு பஸ்ஸ்டாப்பின் தனிமையில் இரவின் மொழியைக் கேட்டபடி, மேலே தெரியும் நிலவின் புன்னகைச் சத்தத்தையும் கேட்டபடி இரவில் கரைந்து போய் அங்கு நின்றிருக்கிறேன்.. இரவின் மணத்தைக் கூட அங்குதான் நீங்கள் உணர முடியும்.. பெருவலி கொண்ட ஒரு துக்கநாளில் அங்கு செல்ல வேண்டி வந்தபோது என் மனத்தின் ரணத்தை ஆற்றியது அந்தப் பிரதேசத்தின் மௌனந்தான் என்பதை ஒரு நாளும் வார்த்தைகளால் என்னால் விளக்கவே முடியாது.. தடுக்கி விழுந்தால் மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலார் என்று நினைத்தபோது சொர்க்கத்துக்கு சென்று வந்த நாட்கள் அவை.. இப்போது அனைத்திலிருந்தும் வெகுதூரத்தில், தகிக்கும் சென்னையின் கோடையில் எலும்பும் உருகும் வெம்மையில் அனலைப் பொழியும் ஃபேனின் கீழ் உட்கார்ந்து முகநூல் பார்க்கும்போது சட்டென Gnanasekar Vijayan என்ற முகமறியா முகநூல் தோழமை பதிவிட்டிருந்த மேகமலையின் படத்தைப் பார்த்ததும் வெகுநாள் பார்க்காத ஒரு நண்பனை எதிர்பாராமல் சந்தித்தது போல இருந்தது.. குறைந்தபட்சம் நினைவுகளின் ஊடாகவேனும் குளிர் மலைக்குள் பயணித்து வந்தேன்.. வேறென்ன சொல்ல முடியும்.. நன்றிதான்..
இயக்குனர் மணிவண்ணன் மீதான எனது பார்வை ஒரு எளிய உதவி இயக்குனரின் பார்வையாகவே இருக்கிறது.. அவரை சந்தித்தது மிக சில தடவைகள்தான் இருக்கும்.. முதன் முதலில் நான் வசனம் எழுதிய ராமேஸ்வரம் படத்தில் அவர் நடிக்கையில்தான் அவரை மிக அருகிருந்து பார்க்க முடிந்தது. பல வெள்ளி விழா படங்களை இயக்கிய இயக்குனர்.. மிகவும் சீனியர் என்பது போன்ற எந்த பிம்பங்களையும் தலையில் சுமந்ததே இல்லை அவர்.. முதன் முதலில்அவரை நான் அருகில் பார்த்ததே வித்தியாசமாகத்தான்.. ராமேஸ்வரம் படத்தில் வசனகர்த்தாவாக மட்டும் இல்லாமல் உதவி இயக்குனராகவும் நான் வேலை பார்த்தேன்.. எல்லாரும் எடுத்துக் கொண்ட வேலை போக எனக்கு கொடுக்கப்பட்ட வேலை என்பது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் எனப்படும் துணை நடிகர்களை மேய்க்கும் வேலை.. அது தவிர அனைவருமே ஃபீல்டு கிளியர் செய்வது எனப்படும் படப்பிடிப்பு எல்லைக்குள் யாரும் வராமல் பார்த்துக் கொள்ளும் வேலையையும் பார்த்தபடி இருப்போம்.

அன்று படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. மதியத்துக்கு மேல் மணிவண்ணன் வருவார் என்பது எங்களுக்கு சொல்லப் பட்ட செய்தி. காலை படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம். பட எல்லைக்குள் யாரும் வந்து விடாமல் நான் கவனமாக ஒரு ஓரமாக நின்று ஃபீல்டு கிளியர் பண்ணிக் கொண்டு இருந்தேன். அப்போது திடீரென யாரோ ஒருவர் என் தோள் மீது தன் கையை வைத்து தாங்கி நின்று கொண்டார். நம்ம மேலயே கை வைக்கிறது யாருப்பா என்பது மாதிரிதிரும்பிப் பார்த்தால் அது இயக்குனர் மணிவண்ணன். அந்த கணம் அது எனக்கு அவர் அளித்த கௌரவம் மாதிரியே பட்டது.. திரும்பிப் பார்த்த என்னிடம் 'ஷாட் முடிஞ்சதும் டைரக்டரை போய் பாத்துக்குறேன். நீ வேலையப் பாரு..' என்று சொல்லிவிட்டு நின்று கொண்டார்.

அதன் பின்னும் படப்பிடிப்பில் நடிக்கும்போதெல்லாம் வசனத்தை அவர் சற்றே மாற்றிக் கொள்ளும் போதெல்லாம் என்னை நேராகவோ குறைந்த பட்சம் கண்களாலேயோ மாற்றிக் கொள்வது சரிதானே என்று கேட்டுக் கொள்வார். முதல் படத்தில் வசனம் எழுதும ஒருவசனகர்த்தாவுக்கு இதெல்லாம் மிகப் பெரிய கௌரவம். இடைப் பொழுதுகளில் ஈழம் பற்றி அவர் சொன்ன பல விஷயங்கள் நான் அது வரை நம்பி இருந்த பல பிம்பங்களை உடைத்து எறிந்தன. ஈழ சம்பந்தப்பட்ட போராட்டங்களின் போதெல்லாம் தவறாது எங்களை உற்சாகப் படுத்தும் ஒற்றை தகப்பனாகவே அவர் இருந்தார்.. அவர் இருக்கும் மேடைகளில் ஈழம் பற்றிய தவறான அரசியலை யாரும் பேசினால் நாசூக்காகவேனும் அதை கண்டிக்காமல் விடவே மாடடார்..

பல எல்லைகளைத் தொட்டிருந்த போதும் எந்த உதவி இயக்குனரும் எளிதில் தொடர்பு கொள்ளக் கூடிய எல்லைக்குள்ளேயே இருந்த எளிய பேரன்பு வாதியாகவே அவர் இருந்தார்.. ஒரு தகப்பனை இழந்தது போலவோ ஒரு அண்ணனை இழந்தது போலவோ நான் இன்று உணரவில்லை.. மனதுக்கு பக்கத்தில்இருந்த ஒருமூத்த நண்பனை இழந்தது போலவே உணர்கிறேன்.. இன்னும் அவர் அருகில் சென்று பல விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டதே என்ற மனத்தாங்கல் மனதுள் கனத்த மழை நீர் போல தேங்கியே இருக்கிறது.

எனது இழப்பிற்கான அஞ்சலியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
அதோ அந்த மூலையில்தான்
கறுப்புக் கிடாய் 
கட்டிக் கிடக்கும்..

அந்த மரமிருந்த இடத்தில்தான்
அப்பத்தா
எந்நேரமும் இருந்தபடி
புளிதட்டிக் கொண்டோ..
அரிசி புடைத்துக கொண்டோ
எள்ளில் கல் நீக்கியபடியோ
எங்கள் எல்லாரையும்
கண் வழியும்
அன்பினால்
ஆண்டு கொண்டு இருந்தாள்..

அஞ்சாப்புக்கு முதல் ஐந்து நாள்
பள்ளிக்குப் போகாதபோது
அதோ அந்த கல்தூணில் கட்டி வைத்துதான்
அப்பா அண்ணனை அடித்தார்..

அதோ அந்த வடக்கு சுவரோரம்தான்
அப்பாவின் அனுமதியின்றி
மாமா மறைந்து வந்து நின்று
அம்மாவுக்கு
பணமும் பண்டமும்
கொடுத்துவிட்டு
கொஞ்சம் கண்ணீரையும்
கவலையையும் வாங்கிப் போகும்..

இதோ கிடக்கிறதே
இந்த மண்..
இதில் விழுந்துதான்
நாங்கள் முளைத்ததும் வளர்ந்ததும்..

ஏழு கடல்
ஏழு மலை
ஏழு அக்கினி குண்டம்
எல்லாம் தாண்டி இருக்கும்
ராச்சசனின் உயிர் போல
நகரக் காட்டின் நடுவில்
எங்கோ கிடக்கிறோம் நாங்கள்..
இடிந்த வீட்டை
காணச் சகியாமல்
ஊருக்குள் ஏதோ ஒரு
காரை வீட்டின் தனிமையில் உழன்றபடி
தன் உயிர் இருக்கும் திசையை
நாள் தோறும்
பார்த்தபடியே இருக்கிறாள்
என்
அம்மா என்னும் ராச்சசி..
ஒரு சம்பவம்.. நான் வழக்கம் போல வீட்டில் இருந்து எழுதிக் கொண்டு இருந்தேன். மதியம் ஒன்றரை இருக்கும்.. காலிங் பெல் அடிக்க திறந்து பார்த்தேன். இரண்டு பேர் நின்று கொண்டு இருந்தார்கள். உங்க வீட்டு கேஸ் ஸ்டவ்வை க்ளீன் பண்ணித் தருவோம். வெறும் 20 ரூபாய்தான். க்ளீன் பண்ணி முடித்தால் எரிபொருள் மிச்சமாகும் என்றார்கள்.. இது மாதிரி ஃபிராடுகளை நான் முன் கூட்டியே அறிந்திருந்ததால் வேண்டாம் என்று மறுத்துவிட்டு அவர்கள் எங்கள் காம்பௌண்டை விட்டு போகும் வரை காத்திருந்துவிட்டு கதவை மூடினேன். அவர்கள் மாடியில் உள்ள குடித்தனங்களுக்கு எல்லாம் போகாமல் வேகமாக வெளியேறியதன் காரணம் எங்க சின்னா.. அவர்கள் காலிங் பெல் அடித்தததில் இருந்து வெளியேறும் வரை குரைத்துக் கொண்டே இருந்தான்..

மறுநாள் தந்தி பேப்பரில்தான் வந்தது செய்தி: எங்களுக்கு நாலு வீடு தள்ளி இருந்த இயக்குநர் ஒருவரின் வீட்டில் உறவுக்காரப் பெண் மட்டும் தனியாக இருந்தாளாம். இவர்களின் பேச்சை நம்பி உள்ளே அழைத்திருக்கிறாள். அவளை கட்டிப் போட்டுவிட்டு இருவரும் வீட்டில் இருந்த 13 சவரனோ 15 சவரனோ நகையை கொள்ளையடித்துகொண்டு போய்விட்டார்கள்..

என் மனைவி பக்கத்து போர்ஷன் காரர்களிடம் எல்லாம் இவர் இருக்குறப்பதான் நம்ம காம்பௌண்டுக்கு வந்தாங்களாம். நம்ம வீடுகளை எல்லாம் நோட்டம் விட்டாங்களாம் என்று காந்தி வந்து போன இடங்களை ஒரு தேச பக்தன் காட்டுவது போல அவர்கள் நின்ற இடம் நடந்த இடத்தை எல்லாம் அனைவருக்கும் காட்டிக் கொண்டு இருந்தாள்..

சாயந்திரமாக மேல் வீட்டு பையன் வந்தான். அப்போது அவன் கல்லூரி ஃபைனல் இயர் படித்துககொண்டு இருந்தான். என்ன அங்கிள்.. நேத்து திருடங்க வந்தாங்களா என்ன.. என்று கேட்டான். நான் பெருமையாக தந்தி பேப்பரில் செய்தி வந்திருந்த பக்க்த்தை அவனிடம் காட்டி நீயே நியூசை படித்துப் பாரு என்றேன். பேப்பரை திருப்பிக் கொடுத்து எந்த குற்றவுணர்வும் இல்லாமல் எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது அங்கிள். நான் செக்கண்ட் லாங்குவேஜா ஃபிரெஞ்சுதான் படிச்சேன்.. என்றான்.எனக்கு அந்த திருடர்கள் மேல் கோபமே வரவில்லை..
முகநூல் நண்பர் Selva Kumar ஒரு முறை பதிவிட்டிருந்தார் : சைக்கிளில் வந்தவன் அவன். பரபரப்பான சாலை அது. (சேத்துப்பட்டு அருகில்) நடுச்சாலையில் அவனால் சைக்கிளை அதற்கு மேல் ஓட்ட முடியவில்லை. தள்ளாடுகிறான். வண்டியின் கேரியரில் இருந்த குழந்தைகள் இரண்டும் அலறி அழுதபடி இருந்தன. அவன் சாலையை கடப்பது இருக்கட்டும். அவன் வீடு எங்கேயோ.. அங்கே அவன் போய் சேர்ந்தானா..? அந்தக் குழந்தைகள் உயிரோடு வீடு சேர்ந்தனவா..? குறைந்தபட்சம் அவன் அந்தச் சாலையைக் கடந்தானா என்பதான கேள்விகள் என்னைச் சுட்டுப் போட்டன..

மது.. இது நிச்சயம் விஷமல்ல.. கிருமி.. தொற்றிக் கொண்டபின் என்ன மருந்து எடுத்தாலும் உங்களை விடாத கிருமிதான் அது..

நான் திரைத்துறையில் இருக்கிறேன். எனக்கும் ஆதர்சம் என்று இயக்குனர்கள் உண்டு. தமிழிலேயே உலகத் தரத்தில் படம் எடுத்த ஒரே இயக்குநரை ஒரு டாஸ்மாக் பாரில் சட்டை அவிழ்ந்து தொங்க பார்த்து நான் பட்ட வேதனையை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.. இன்னொருவன்.. இயக்குனன்.. தமிழின் ஆகச்சிறந்த பொழுதுபோக்குப் படங்களிலொன்றை இயக்கியவன். அவன் காதலித்தது ஆயிரக்கணக்கான பெண்களை.. ஆனாலும் அவனைக் காதலித்த மூன்று பெண்களை மணந்து கொண்டவன்.. உங்களில் நம்பவே முடியாத அளவுக்கு வெற்றிகரமான இயக்குநரொருவருக்கு அவரது வெற்றிப் படங்களின் விவாதத்தில் கலந்து கொண்டு படத்தின் வெற்றியில் பங்கு வகித்தவன். நீங்கள் பார்த்து வியந்த அவரது இரண்டு படங்களுக்கு வசனமும் கூட அவனே.. குடியினால் சீரழிந்து தெருவில் கிடந்தான். எப்போது புத்தி வந்தது என தெரியவில்லை.. திடுமென திருந்தி இப்போது ஒரு படத்தை இயக்கி இருக்கிறான். படத்தின் வெற்றி தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை. அவன் குடியை நிறுத்தி ஒரு படத்தை இயக்கியதே பெரிய வெற்றிதான் என்பது என் எண்ணம்..

முன்பெல்லாம் அடுத்த தெருவில்.. அடுத்த குடும்பத்தில் ஒருவர்தான் குடிகாரராக இருந்தார்கள். அந்த குடிகாரர்கள் பற்றி நாம் வதந்திகளாகத்தான் பேசிக் கொண்டிருந்தோம்.. இப்போதோ தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குடிகாரர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களைப் பற்றிப் பேசாமலிருக்கவே நாம் முயல்கிறோம்..

பதின் வயதுப் பையன்கள் பார்களில் உட்கார்நதபடி அவர்களின் தந்தையார் வயதையொத்த பணியாளர்களிடம் விருப்ப மதுவை வாங்கிவர ஆர்டர் கொடுப்பது இயல்பானதொரு அன்றாட நிகழ்வாகிவிட்டது..

குடியினால் நடக்கும் கொலைகளும்.. குடிப்பதற்காக நடைபெறும் கொள்ளைகளும் நாம் படித்துக கடந்து போகும் தினசரி செய்திகளாகிவிட்டன..

குடி நம் ஒவ்வொருவரது குடும்பத்துககுள்ளும் புகுந்து குடிகெடுக்கும் முதல் காரணியாகிவிட்டது.. எனக்குத் தெரிந்து பெரிய போதை காதலும் காமமும்தான்.. அந்த இரண்டையுமே புறந்தள்ளிவிட்டு மூளையை மரத்துப போக வைத்திருக்கிறது குடி..

இதை எதிர்த்து இன்று நாம் போராடத் துவங்கவில்லை எனில் என்று போராடினாலும் பயன் இல்லை என்றே எண்ணுகிறேன்.. நாம் குடிப்பவரோ இல்லை குடிகாரர்களால் பாதிக்கப் பட்டவரோ.. எதிர்கால சமூகம் குடித்து அழிய கூடாது என்ற சமுதாய நோக்கு கொண்டவரெனின் இன்னமும் சந்தோஷம்.. குடிக்கு எதிராக நாம் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது நண்பர்களே.. இன்று போராடவில்லை என்றால் நாளை நம் பிள்ளைகளை யாராலும் காப்பாற்ற முடியாது. வாருங்கள்..
அன்பினை உனக்குத் தெரியும்
துன்பத்தை எனக்குத் தெரியும்
என
நீ நம்பிக் கொண்டிருக்கிறாய்..
உன்னை விட
எனக் கொன்று
அதிகமாய் தெரியும்..
ஆம்..
அன்பினையும்
எனக்குத் தெரியும்..
அவன்
சொந்தமாக நிலம் வைத்திருந்ததில்லை..

ஐந்து வயதில்
விடிந்தும் விடியாத காலையில்
அப்பன் அடித்து இழுத்துப்
போனபோது
பரிச்சயப்பட்ட நிலம் அது..


அதன் பசி இவனுக்குத் தெரியும்..
அதன் மொழி இவனுக்குப் புரியும்..

எப்போது புணர்ந்தால்
நல்ல பலன் கிடைக்கும் என்றும்
அது விரும்பாத பொழுதுகளில்
விதைத்தும் விளையாத
தானியங்களையும்
இவனுக்குத் தெரியும்..

மழை பொய்த்த போதுகளில்
கண்ணீரின்றி அது அழுததும்
இவனுக்குத் தெரியும்..

இதோ இந்த
கட்டிடப் பாலையில்
அவன் வேலை செய்யும்
மதுச்சாலை செல்லும் வழியில்
காம்பவுண்டுகளுக்குள்
அழுதபடி இருக்கும்
பழுதுபார்க்கப்படாத தென்னைகளும்
உரம் வைக்கப்படாத மாக்களும்
உகுக்கும் கண்ணீர்
இவன் மேல் மட்டுமே தெறிக்கிறது..

யோவ் பெரிசு
என விளித்து சிறுவன் ஒருவன்
கொடுக்கும் பணத்தில்
விஸ்கியோ பிராந்தியோ
வாங்கிவந்து கொடுக்கிறான் இவன்..

ஆங்கிலத்தில் பேசும் கனவான்கள்
இவனது கணக்கில்
பிழை கண்டு பிடித்து
பத்தோ இருபதோ குறைத்துக்
கொடுக்கும் பொழுதில்தான்
கணக்கில் ஏமாற்றினால்
தப்பில்லை என்பதை
ஒப்புக் கொண்டான் இவன்..

துயர் நெடும் வாழ்வின்
மோட்டார் சத்தம் நிரம்பிய
தனிமை இரவுகளில்
தாவரங்கள் விடும் பெருமூச்சை
உறங்காமல் இசையென கேட்டபடி
இருக்கிறான் இவன்..

கடைசியில் இவனிடம் மிஞ்சியது
பாடல்கள் கூட இல்லை..
பாடல்கள் இருந்த தடங்கள் மட்டுமே..
நண்பன் ஃப்ராங்க் Franklin Kumar) எடுத்த பார்வையற்றோரின் இசைக்குழு புகைப்படத்தைப் பார்த்ததும் எழுதியது இது..

மோட்டார் சத்தங்களுக்கு நடுவே
தனித்தலைகிறது அந்தப் பாடல்..

ஏதோ ஒரு கவிஞனின்
கண்ணீர்ப் பாடலையும்
ஏதோ ஒரு தாயின்
தாலாட்டுப் பாடலையும்
காற்றெங்கும் அலையவிட்டு
காதுகளைத் தட்டுகிறது
அந்தப் பாடல்..

தத்தம் பாக்கெட்டுகளின் கதவை
அந்தப் பாடல்கள் தட்டுவதாக எண்ணி
கைகளால் பாக்கெட் மூடி
அவசரமாக நகர்கிறோம் நாம்..
ஆனால் யாருக்குக் கொடுக்கிறோம்
என்பதை அறியாமலே
இசையைக் கொடுத்தபடிதான் இருக்கிறான்
அந்தப் பாடகன்..

உணவுதேடும் ஒரு
நாய்க்குட்டியின் வாலாட்டலைப் போல
அல்ல அந்தப் பாடல்..
உழைத்தவன் ஒருவனின்
வியர்வை வாசத்தைப் போலத்தான்
அது பரவுகிறது..

பாடியவனுக்கு கண் இல்லை
என அறிந்த பலருக்கும்
அந்தப் பாடலுக்கு கண் இருந்தது
தெரியாமலேயே போய்விட்டது..
கதை சொல்றது எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம்.. 

நாம டைரக்டர் ஆகாத வரைக்கும் நாந்தான் உன்னோடஅசிஸ்டண்ட் என்று சொன்னபடி வரும் எந்த அசிஸ்டண்ட்டும் நிரந்தரமில்லை

இன்றைக்கு திருவண்ணாமலையில் நடந்த திருமணத்துக்குப் போனபோது எப்போதோ ஒரு காலத்தில் என்னிடம் கூட அசிஸ்டண்ட் ஆவதற்காக முயன்ற ரெண்டு தம்பிகள் வந்திருந்தார்கள்.. சமீபத்தில் செய்த கதையான 'தீவிரவாதி' என்ற கருவை சொன்னேன்.. திரும்பும் வழியில் என்னுடன் பயணம்செய்த சந்திரனுக்கு குட்டிப் பேச்சியும் எம். சிவகுமாரும் என்ற கதையையும் சொன்னேன்.. I don't care how they react.. all I care is I told the story to some one after a long long time..
எல்லோரது வாழ்விலும் இந்த 'முதல்' என்ற வியாதி இருந்துதான் தீரும்.. அப்ப என் வாழ்வில் மட்டும் இருக்காதா என்ன..? முதல் காதல், முதல் முத்தம், முதல் அணைப்பு என்று எல்லாருக்கும் இருப்பது போல்தான் எனக்கும் பல 'முதல்'கள்.. 

இந்த எல்லா முதல்களோடும் முதல் ஜட்டி (எவ்வளவு போராட்டம்..), முதல் செருப்பு (ஹவாய் செருபபுதான். ஆனாலும்..), முதல் பேண்ட் (அந்த பேண்ட்டை அணிந்த பரவசக் கணம்..), முதல் ஃபேன், முதல் ஓட்டல் உணவு, முதல் நான்-வெஜ் உணவு, முதல் பாம்பே டைப் லெட்ரீன்(என்னத்துக்கு இந்த டார்ச்சரை எல்லாம் சொல்லணும்..), முதல் முதல்-ரேங்க், முதல் ஏசி அனுபவம், முதல் ரயில் பயணம், முதல் முதலாக கடல் பார்த்தது(பார்த்ததும் என்ன செய்தோம் என சொல்ல முடியாது), முதல் முதலாக தமிழ்நாடு தாண்டிப் போனது, முதல் எலக்ட்ரிக் ட்ரெயின் பயணம், முதல்முதலாக சொந்த சம்பளத்தில் வாங்கிய சட்டை, முதல் முதலாக சொந்த சம்பளத்தை தொலைத்தது, முதல் முதலாக ஒருவர் என்னை சார் என்றது, முதல் முதலாக என் கதையை பிரிண்ட்டில் பார்த்தது, முதல்முதலாக என் கவிதை கணையாழியில் வந்தது, முதல் முதலாக நான் எழுதியது கவிதையோ கதையோ அல்ல என என் நண்பன் நிறுவியது, முதல் பெண் சிநேகிதி, முதல் கைத்தட்டல், முதல் முகமறியா வாசகனின் கடிதம், நண்பனின் முதல் துரோகம் (இது எனக்கு தெளிவாக நினைவில்லை என்றாலும் நினைவிருக்கும் துரோகங்களை மன்னிக்க முடியாது), நான் செய்த முதல் துரோகம், முதல் பலான படம், முதல் மரண பயம், முதல் தற்கொலை முயற்சி (நம்ம கணக்கில் மூணு இருக்குதுங்கோவ்..), முதல் நாய்க்கடி, முதல் கழுதை உதை, முதல் முதல் முதல் என்று ஆயிரமாயிரம் முட்டி மோதுகிறது..

இருந்தாலும் தினந்தோறும் முதல்முதலாக எதையாவது செய்தபடிதான் இருக்கிறேன் நான்..
முடித்தும் முடிக்காமலுமாக சினிமாவுக்காக தயார் செய்த கதைகள் என்று 20 க்கும் மேலே மனசுக்குள் கிடக்கின்றன.. கதைகள் தயார் செய்வது வாதை என்றால் அவை நிராகரிக்கப்படுவது பெரும் துயர்.. பதினைந்து வருடத்துக்கு மேலான சினிமா வாழ்வு துயரினை தாங்கும்மனவலிமை தந்தது மட்டுமன்றி துயரினை காட்சிக்குள் புன்னகையோடு விதைத்து வைக்கும் ரசவாதத்தையும் கற்றுக் கொடுத்துள்ளது.

எத்தனை தயாரிப்பாளர்கள்.. எத்தனை கதை சொல்லல்கள்.. எல்லாம் நமது அனுபவ அடுக்குக்குள் அடுக்கி வைத்த புத்தகங்களின் அத்தியாயங்களாக உறைந்து போய்தான் உள்ளார்கள் அல்லது உள்ளன..

என் கதைகளில் எனக்கு மிகப் பிடித்த கதை என்றால் அது குட்டிப் பேச்சியும் M. சிவகுமாரும் என்ற கதைதான்.. அதில் குட்டிப் பேச்சி என்பவள் 8 வயது ரவுடி.. M.சிவகுமார் அவளது தோழனான நாய்.. இவர்களது கதை காட்சிக்கு காட்சி புன்னகையை முகங்களில் வரவைத்தபடி விரியும். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர் அசந்து போய் கொஞ்ச நேரம் பேசவே இல்லை.. என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ், யாரிடம் வேலை பார்த்தேன் என்பதை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டவர் மிக நம்பிக்கையாக ஒரு வார்த்தை சொன்னார்.. கூடிய விரைவில் படம் துவங்குவோம் என்று..

படபடக்கும் மனதோடு எனது டீமை ரெடி செய்தேன். படப்பிடிப்புக்கு முன்னோட்டமாக இருக்கட்டுமே என்று அதே வயதுள்ள ஒரு சிறுமியையும் அதே போன்ற ஒரு நாயையும் வைத்து மூன்று நாள் ஃபோட்டோசெஷன் தேனியில் வைத்து செய்தோம்.. அன்றைக்கு அப்படத்துக்கு கேமராமேனாக முடிவு செய்திருந்த என் பிரிய நண்பன் தேனி ஈஸ்வர்தான் அந்த காலத்துககும் அழியாத புகைப்படங்களை எடுத்தான்.. மூன்று நாள் கடும் உழைப்பு.. கிட்டத்தட்ட 750 புகைப்படங்கள் என்று திருப்தியாக வந்தது அந்த போட்டோ செஷன்..

அதற்கப்புறம் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கள் யூகிக்கக் கூட வேண்டாம்.. வழக்கம் போல கை நழுவிப் போனது ஒருபடம் - ஒரு கனவு..

அன்று எல்லாம் சரியாக நடந்திருந்தால் அழகர்சாமியின் குதிரைக்கு முன்பாக ஈஸ்வர் எனது படத்தில் அறிமுகமாகி இருப்பான்..

எடுத்த படங்கள் அப்படியேதான் இருக்கின்றன. இணையத்தில் அவற்றை வெளியிட சிறு தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் அதில் சில படங்களை வைத்து எனது உதவியாளன் ஒருவன் செய்திருந்த டிசைன்களில் ஒன்றை எனது ஓட்டை மொபைலில் படமெடுத்து இணைத்திருக்கிறேன்.. இந்த போட்டோவை விட ஒரிஜினலில் அவை மாயங்கள் நிகழ்த்தும் போட்டோக்கள்..

அதில் இன்னொன்றுதான் இது..
யாரையோ நினைவுபடுத்துகிறது
ஒரு மஞ்சள் பூவோ
அல்லது 
ஒரு பட்டாம்பூச்சியோ..

யாரோ கடந்து போகிறார்கள்
ஒரு புன்னகையில்
அல்லது
ஒரு கன்னச்சுழிப்பில்
யாரையோ நினைவுபடுத்தி..

முகமறியா
டெலிபோன் பெண்
யாருடையவோ தயக்கங்களை
நினைவுறுத்தி
வாங்கிக்கங்க சார் என்கிறாள் –
அவளறிய மாட்டாள்
அவள் குரல்
எனக்கு இருபதாண்டு பழமையானதென்று..

இருண்ட ஒரு திரையரங்கின்
தனிமூலையொன்று
யாருடையது என்று அறியாமலே
சில கண்ணீர்த்துளிகளை
கர்ப்பத்தில் சுமந்தபடி
இருக்கிறது
பத்தாண்டுக் கணக்காக..

ஒரு பூ
ஒரு பட்டாம்பூச்சி
ஒரு குரல்
ஒரு தியேட்டரின்
உடைந்த இருக்கை..

இவை ஏதையும்
அறியாமல்
குழந்தைகள்
புன்னகைத்தபடியே இருக்கிறார்கள்
நமது கண்கள்
சிரிப்பினால் கலங்குவதாக எண்ணி..
அமுதூட்டிச் சலித்த
முலைகள்
வற்றியிருக்கக் கூடும்..

எத்தனை பிள்ளைகளின்
பசியாற்றியிருப்பாள் அவள்..

ஓட்டம் குறைந்தாலும்
ஊற்றால் நீரூட்டும்
வைகை போல்
எந்நேரமும்
சாம்பிய முலை மறைத்து
சுட்டுச் சுட் டு
பசியாற இட்டிலி
சுட்டுத் தந்தபடி
இருக்கிறாள்
இந்த வைகையின் தங்கை..

உன் தளர்ந்த கைகளை
நீட்டி நீட்டி
எங்களுக்கெல்லாம்
தந்து பசியாற்றும்
இட்டிலியெல்லாம்
உன்
முலைவடிந்த
பால்த்துளிதான் அம்மா..
திரும்ப கிடைக்காத தருணங்கள் எப்போதும் வாழ்வில் கடந்து போனபடியே இருக்கின்றன. இந்த நாற்பத்து சொச்சம் வாழ்வில் முதன் முறையாக பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளவில்லாமல் வாழ்த்தியது சென்ற பிறந்த நாளில்தான். இந்த வருடமும் அப்படித்தான் நடக்கப் போகிறது என்ற முன் முடிவுடன்தான் இருந்தேன்.

முந்தாநாளில் இருந்தே வாழ்த்துகள் வர ஆரம்பித்து விட்டன. முதன் முதலில் வாழ்த்து சொன்ன நண்பனே தாமதமான வாழ்த்துகளுக்கு மன்னிப்போடு வாழ்த்துகளை துவங்கி வைத்தான்..

இவை வருமென்று அறிந்திருந்தாலும் நான் கூழாங்கற்கள் நிகழ்வில் பங்கு பெறுவதில் அனைத்தையும் மறந்திருந்தேன்.. நண்பன் கடங்கநேரியான் ஃப்ராங்க்ளின் யாழி இவர்களின் பெரு முயற்சியால் ஓர் இலக்கிய நிகழ்வு தொய்வின்றி ஏழாம் முறையாகவும் நடக்கிறது என்பது ஆச்சரியத்துக்குரிய செய்திதான்.

பெரிய எதிர்பார்ப்புகள் ஒன்றும் இல்லை. இலக்கிய நிகழ்வுகள் எப்படி நடக்கும் என்று தெரியாதா..? இலக்கிய நிகழ்வுகள் இப்படித்தான் நடக்கும் என்ற நமது எதிர்பார்ப்புகளை தாண்டிச் சென்றது கூழாங்கற்கள் நிகழ்வு..

நாணலின் நூல் விமரிசனத்தோடு துவங்கிய நிகழ்வு எனக்கானது என்பதை நாணல் பேசத் துவங்கிய இரண்டாவது நிமிடத்தில் நான் தெரிந்து கொண்டேன். தவங்கித் தவங்கி பேசத் துவங்கினாலும் அது எனக்கான பேச்சாக இருந்தது. நாணலுக்குப் பின் அமிர்தம் சூர்யா பேசினார். என்ன பேச்சு.. அது புத்தக விமரிசனம் என்பதைத் தாண்டிய பேச்சு. கணேச குமாரன் தன்யவான்தான்.

பின்தான் பேசினார் தமிழச்சி (தங்க பாண்டியன்). எனது அனைத்து நுண்ணுணர்வுகளையும் அந்த பேச்சில் குவிக்க வேண்டி இருந்து. அந்த பேச்சில் எனக்கு பல எதிர்க்கருத்துகள் இருந்தன. அவை அனைத்தையும் தாண்டி அவர் சொன்ன முதல் கருத்திலேயே என்னை வாயடைத்துப் போக வைத்தார். எனக்கு எதிர் கருத்துகள் இல்லாத நபர்களே இல்லை. தமிழச்சியின் கருத்துக்ககான எதிர் கருத்தை இங்கு பதியாததற்குக் காரணமே நமது மன நிலைதான்..

தோழர் இரா எட்வின் பேசிய பேச்சு உணர்ச்சி வசப் பட வைத்தது. அந்த அன்பின்முன் அனைத்து உணர்வுகளும் dwarfed ஆகின. அண்ணன்தானே. அந்த பேச்சு மீதான எனது விமரிசனத்தை பின்னர் வைத்துக் கொள்கிறேன்..

எல்லாம் முடிந்தது. அப்போது எங்கோ போயிருந்த நண்பன் ஃப்ராங்க் ஒரு அட்டைப் பெட்டியை நடு ஹாலில கொண்டு வந்து வைத்தான்.. அது ஒரு கேக். அதில் Happy birth day to Nandan sridaran என எழுதி இருந்தது..

இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்று சொல்லியாக வேண்டும். நான் உள்ளிட்ட என் வயதுள்ளோர் சினிமாக்கள் பார்த்து வளர்ந்தோம். அதிலும் நான் சினிமாவிலேயே இப்போது இருக்கிறேன். சினிமாவின் படாடோபங்களும் போலிமைகளும் எனக்குத் தெரியும்.

இதே நிகழ்வு சினிமாவில் நிகழ்ந்திருந்தால் அதற்கு நான் எப்படி react செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அளவான கண்ணீர் போல நடித்து கொஞ்சம் கொஞ்சம் கட்டிப்பிடித்து எனது நன்றிகளை பகிர வேண்டி இருந்திருக்கும் என்பது அங்கே அடிப்படை விதி. என் முன்னால் வைக்கப்பட்ட கேக்கை நான் வெட்டியபோது பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னவர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் முகமறியா நண்பர்கள். எனது நாற்பதைத் தாண்டிய வாழ்வில் நான் வெட்டிய முதல் பிறந்த நாள் கேக் அதுதான். அந்த கேக்கின் முதல் துண்டை நான் கணேச குமாரனுக்கு ஊட்டினேன். கடைசி துண்டை தான் உண்டதாக நாணல சொன்னான்..

நான் எதற்கு நன்றி சொல்ல முடியும்..? உண்டவர்களுகோ ஊட்டியவர்களுகோ நன்றி சொல்லல் சரிதானா..?

உடன் பிறந்தான் இல்லை. எனக்கு நன்செய்து பலன்கள் பெற்றானில்லை. எதற்காக எனது ஒரு நாளை இவ்வளவு சிறக்கச் செய்தான் கடங்கநேரி யான் மற்றும் ஃப்ராங்க்ளின் குமார்.. இந்த சைத்தான் யாழி கூட எதற்காக இத்தனை அன்பை பொழிந்தான்..?

யோவ் நந்தன் ஶ்ரீதரா.. நீ அன்பற்று தனியாய் அலையும் அநாதைச் சிறுவன் இல்லை.. வயதில் குறைந்தாலும் உன்னை அன்பு செய்து ஆசி வழங்க இங்கே சிலர் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் கடவுளர்கள் இல்லை. நிச்சயம் அவர்கள் உனக்கு அன்னையும் இல்லை. கடவுளுக்கும் அன்னைக்கும் கொஞ்ச◌ேனும் பதில் செய்யப் பாத்தியப்பட்ட பாவிகள் அவர்கள்.. யாரெனக் கேட்டால் நண்பன் என பதில் சொல்வார்கள்..

நம்ப மாட்டேனே.. ஆண் வேடம் போட்டாலும் அவன்கள் என் அன்னைக்கு அடுத்த இடம். புன்னகையோடு உன்னை கிண்டல் செய்தாலும் பிள்ளைக்கு மூத்த பிள்ளை அவர்கள்..

கடங்கு.. ஃப்ராங்க.. யாழி.. என் நாளை நீங்கள் எத்தனை மகிழ்வுறுத்தினீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது. ஆயினும் ஒரு நிறைவுற்ற மனதின் நன்றிகளை நீங்கள ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் சாமியோவ்..

புகைப்படத்தில் கேக் வெட்டுகிறார் நந்தன் ஶ்ரீதரன்..
ஒரு நிறைவான பயணம். நிறைவான நண்பர்களின் சந்திப்பு. இன்னும் வெகுநாட்களுக்கு இனிய கனமாக மனதாழத்தில் கனத்துக் கொண்டிருக்கப் போகிற ஒரு பிறந்தநாள்.. நெஞ்செஞ்கும் ஒரு பெட்டகத்தில் நிறைய புன்னகைகளையும் அடைக்க முடியாத அன்பையும் திணறத் திணற வாழ்த்துகளையும் சுமந்துதான் வீடு அடைந்திருக்கிறேன். எத்தனை பிரியங்கள்.. எத்தனை வாழ்த்துகள்.. எத்தனை நண்பர்கள்.. எண்ண முடியவில்லை. பிறந்தநாளில் இருந்து ஒவ்வொரு நண்பருக்கும் தனித்தனியாக நன்றி செய்திகளை அனுப்பி அனுப்பி இன்றுதான் கிட்டத்தட்ட அனைவருக்கும் நன்றி சொல்லி முடித்தேன். நிச்சயம் நிறைய பேருக்கு நன்றி சொல்லாமல் விட்டிருக்கக் கூடும். அந்த நண்பர்களுக்கு இந்த இடுகையின் மூலம் என் மனம் நிறைந்திருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரும் கவனிக்காமல்
உதிர்ந்து கிடக்கும்
பூ ஒன்றை
மழை நீர் சுமந்து செல்கிறது
தன் தலைமேல்..

நீங்கள் என் மழை நண்பர்களே..

அனைவருக்கும் பிரியங்கள்..

21.102013 ன் நினைவில்..
நாலு..

டூர் புறப்படும்
டாக்சியின் நான்கு கால்களிலும்
நான்கு எலுமிச்சம்பழங்களை 
வை..

மிஞ்சும்
ஒரு பழத்தை
பிய்த்து 
சரியாக
நாலு திசைகளிலும் வீசு..

நாலு வேதமும்
சூத்திரனை
சூத்திரனென்றே சொல்கின்றன..

நாலும் ரெண்டும்
சொல்லுக்குறுதி என்றால்
தமிழ் தெரியாதவனின்
சொல்லெல்லாம் குருதி..

உண்ணக் கொடுக்க
ஏதுமில்லாதபோது
வீட்டிலிருக்கும் அவலை
எடுத்து மீனாள் நீட்டுகையில்
உண்ணத் தெரியாமல்
கையை கடித்து அவல் பொறுக்கும்
சாயா மற்றும் அவளது குஞ்சு
இருவருக்கும் சேர்த்து
நாலே கால்..

எண்கள் தெரியாவிட்டாலும்
ராகுவுக்கு நாலுதான்..

ஒரு வேளை
மேலும் நான்கு நாள்
பொறுத்திருந்தால்
அந்தப் பிரிவு
நிகழாமல் இருந்திருக்கக் கூடும்..

உங்களுக்கு நாலைப் பிடிக்குமா..?

எனக்கோ எனில்
நாலு என்பது மற்றொரு எண்ணே..
சிறு பருவத்துக் கனவுகள் என்னவெல்லாமாக இருக்கக் கூடும் என்று சொல்லி விளக்கிவிட முடியாது. ஒரு கட்டத்தில் எங்கள் எல்லாரையும் அழ அழ வைத்து முடிவெட்டும் எங்கள் வீட்டு நாவிதராக நான் ஆசைப்பட்டிருக்கிறேன்..

ஒரு சமயம் எங்கள் பள்ளி ஹாஸ்டலில் முதல் வகுப்புக்கு (first class hostel students)) (அவர்களுக்கு மட்டும்தான் வாராவாரம் அசைவம்) தயாராகும் ஞாயிற்றுக் கிழமை ஆட்டுக்கறிக்கு ஆட்டை அறுத்து கூறு போடும் முஸ்லிம் பெரியவராகவும் ஆசைப்பட்டிருக்கிறேன்.. (ஒரு விதத்தில் அதன் பின் ஒரு கோழிக்கறிக் கடையில் வேலைபார்த்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்டேன் என்றும் சொல்லலாம்.)

இவை தவிர எண்ணி முடியாத அல்லது எண்ண வேண்டாத ஆசைகள் என் பால்ய பிராயத்தில் உண்டுதான். இன்றைக்கும் என்றைக்கும் அன்றைக்கும் கூட சிறுவர்களின் பிரியம் வண்டிகளின் மீதுதான். அது இரு சக்கர வண்டியாகட்டும் நான்கு சக்கர வண்டியாகட்டும்.. இரண்டாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைககிறேன். நான் அத்தை வீட்டில்படிக்கப் போடப்பட்டு பள்ளிக்கு போய்க் கொண்டு இருந்தேன்..

எங்கள் வீட்டுக்கு ஆறாவதாக ஊர்க்கிணற்றுக்கு முன் உள்ள வீட்டில் ஒரு டாக்டர் இருந்தார். அவர் ஒரு டுபுடுபு வண்டி வைத்திருந்தார். (சிறுவர்களின் பாஷையில் என்ஃபீல்டு பைக்குகள் அப்போது டுபுடுபு வண்டிதான்). ஊரின் அனைத்து சிறுவர்களின் ஒரே ஆசை அந்த வண்டியில்ஏறி உட்காருவது என்பதுதான். வண்டிக்கான பாதுகாப்பு மிக மிக அதிகம். வாசலிலேயே திண்ணையில் உட்கார்ந்து டாக்டரின் தாயார் கண் கொத்திப்பாம்பாக வண்டியை கவனித்தபடி இருப்பார். எவனாவது வண்டியைத் தொட்டாலே வசவுகளால் பஸ்பமாக வேண்டியதுதான். கிழவிக்கு பயந்தே அவர் இருந்தால் எல்லோரும் நல்லபி ள்ளையாக அந்த வீட்டைக் கடந்து விடுவோம்.

என் கெட்ட நேரம்... ஒருநாள் அந்தகிழவி அவளுக்கான இடத்தில் இல்லை. தெருவில் நான் மட்டுமே.. அந்த பளபளப்பான வண்டி என்னை கண் சிமிட்டாமலே அழைத்தது. யாரும் இல்லாத தைரியம் எனினும் வண்டியில் ஏறி உட்காரும் துணிச்சல் எனக்கு இல்லை. வெகுநாள் ஆசை சத்தம்வருகிறதோ இல்லையோ.. அந்த வண்டியின் ஹாரனை ஒரே ஒரு முறை அடிக்க வேண்டும்என்பதுதான். யாரும் இல்லாத தைரியத்தில் அந்த ஹாரனை ஒரு முறை அழுத்தினேன். என் கெட்ட நேரம். அந்த ஹாரன் ஓங்கி ஒலித்தது.. மட்டுமல்ல.. அந்த ஹாரன் சுவிட்ச் அப்படியே ஸ்டக் ஆகி விட்டது.

எட்டு மணி சங்கைப்போல ஹாரன் உய்ய்ய்யென ஒலிக்கஆரம்பித்தது. நான் உடல்பதைத்து அதை நிறுத்த என்னவென்னவோ பிரயத்தனங்கள் செய்தேன். எல்லாமே வீணானதும் அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டேன்..

எழவெடுத்த கிழவி எங்கிருந்து பார்த்தாளோ தெரியாது. எங்கள் அத்தை வீட்டில் சென்றுவத்தி வைத்து விட்டாள். எங்கள் அத்தை என் அ ப்பாவுக்கு அக்கா - அடிப்பதிலும் கூட. அன்றைக்கு அடி பின்னி எடுத்துவிட்டாள்..

அன்று துவங்கியதா என்று தெரியாது.. இரு சக்கர வண்டிகளின்மீதான பிரியம் சாஸ்வதமாக மனதாழத்தில் இருந்தபடியே இருந்தது..

பின்னர் வளரிளம் பருவத்தில் நண்பர்கள் ஒவ்வொருவராக வண்டி வாங்கினார்கள். டிவிஎஸ் 50, யமாஹா, டிவிஎஸ் சுசுகி என்று எல்லா வண்டிகளிலும் நான் பின்சீட் பயணி மட்டுமானேன். ஒரு போதும் எந்த வண்டியையும் ஓட்டியவனில்லை. ஒரு முறையாவது காலை வைத்து அழுத்தாமல் தானாக ஓடும் ஒரு வண்டியை ஓட்ட வேண்டும் என்பது ஜெனமங்களின் கனாவாகத் தொடர்ந்தது..

முப்பத்தைந்து வயது வரைக்கும் சைக்கிள் தவிர வேறெதையும் ஓட்டி அறியாத ஒருவனுக்கு நண்பன் அருள் எழிலன் தனது டிவிஎஸ் சேம்ப்பை குறைந்த விலைக்கு அருளினான்.. முதன் முதலாக ஒரு தானியங்கி வண்டியை சென்னையின் தெருக்களில் ஓட்டும்போது நேர்ந்த புல்லரிப்பை என்னால் எந்த வார்த்தை கொண்டும் விளக்க முடியாது..

பல வருடங்களுக்கு அந்த வண்டியே எனது அடையாளமாக இருந்தது..

பின்னரும் பல வண்டிகள் ஓட்டி விட்டேன். பாலாவின் (பாலமுருகன்) புண்ணியத்ததில் இப்போது ஒரு டிவிஎஸ் ஸ்கூட்டி ப்ளஸ் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்.. ஆனாலும் சொந்தகாசில் வாங்கிய அந்த டிவிஎஸ் எக்செல்லை மறக்க முடியாது. அதனால்தான் இன்றளவும் அதை எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் அதை அப்படியே வைத்திருக்கிறேன்.. என் அடையாளத்தைப் பாதுகாப்பது போலத்தான் உணர்கிறேன்..

இந்தமுறை ஊருக்குப் போயிருந்தபோது பிரியத்துடன் அதன் மீதுஉட்கார்ந்து பார்த்ததோடுசரி.ஓட்டிப் பார்க்க முடியவில்லை.. ஆனாலும் அது ஒரு யட்சிணியைப் போல மனதுக்குள் என்னைப் பின்தொடர்ந்தபடிதான் இருக்கிறது. என் வேண்டுகோளுக்கு இணங்க அதை புகைப்படம் எடுத்துகொடுத்ந தம்பி பாலாஜிக்கும் நன்றிதான். வேறென்ன சொல்ல..
அண்ணனும் தங்கையுமாக எனது மொபைலில் இருந்து பாடிக் கொல்கிறார்கள்.. உலகத்தில் சிறந்த நட்பு பற்றிய படம் எது எனக் கேட்டால் நான் சலங்கை ஒலியைத்தான் சொல்வேன். அதில்தான் சரத்பாபு, கமலின் நட்பு அப்படி இருக்கும். எல்லாப் பாடலகளும் அவ்வளவு பிடிக்கும். அதிலும் வேதம் அணுவிலும் ஒரு நாதம் என்ற பாடல் மிகவும் ப்ரீதி.. ரிபீட் போட்டு மொபைலில் அவ்வப்போது கேட்பேன். எஸ்பிபியும் ஷைலஜாவும் ரொம்ப கவனமாகவும் இயைந்தும் பாடியிருப்பார்கள்..ஒவ்வொரு முறை கேட்கும்போதும் நான் கண் கலஙகுவது கட்டாயம் நடக்கும்..

என் மொபைலில் இருப்பது அதன் தெலுங்கு வெர்ஷன். வேதம் அணுவுலனொக நாதம் என்றுதான் பாலு பாடுகிறார். ஷைலு மாத்ரு தேவோ பவ.. எனத் துவங்கி ஆச்சார்ய தேவோ பவ என முடிக்கையில் ஒவ்வொரு முறையும் கண் கலங்கிவிடுகிறது. அதற்கு காரணம் பாடல் வரிகள் அல்ல. ஆசானும் அப்பனுமான கே. விஷ்வநாத் எடுத்த காட்சிகள் மனதுக்குள் வந்து திண்மமாக நிற்பதுதான்..

கடைசியாக பாலு பாடுகிறார் :
நாஷ்திஷ்ஜரா மரணஜம் பயம்
நாஷ்திஷ்ஜரா மரணஜம் பயம்..

என்று..

என்ன அர்த்தம்..? மரண பயத்தை அழித்துவிடு இறைவா என்றா..? தெலுங்கு அறைகுறையாக தெரியும். சமஸ்கிருதம் குறைகுறையாக தெரியும்.. ஆனாலும் இசை புரியும்..

அந்த வரிகளுக்குப் பின் அந்த கேரக்டர் செத்துவிடும். ஆகவே அதை மரண பயத்தை அழித்துவிடு இறைவா என்றே கொண்டு இதுநாள் வரை ஒவ்வொரு முறையும் கண் கலங்கி வருகிறேன்..

என்ன பொருளாக இருந்தால் என்ன..? எனக்கு புரிந்ததே எனது அர்த்தம்.. ஆகவே.. நாஷ்திஷ்ஜரா மரணஜம் பயம்..
ஒரு நாள் எப்படி வேண்டுமானாலும் இருக்கக் கூடும்.. ஆனால் மனம் ஒன்றுதான்.

நண்பர்களை தொந்தரவு செய்ய மனது இடம் கொடுக்கவில்லை. வெகு தொலைவு என்றால் மட்டும் எனது அசோசியேட் டைரக்டரான செல்வேந்திரனை வண்டியெடுத்து வரச் சொல்லிப் போகிறேன். இற்றை நிலையில் அவன் மட்டும்தான் available. பின்னால் உட்கார்ந்து போகையில் மரண பீதியை உண்டு பண்ணுகிறான். இருக்கும் இன்னொரு கையையாவது காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில் மிக மிக தேவை என்றால் மட்டுமே அவனை அழைத்துப் போகிறேன்.. மற்ற எல்லா நேரமும் நடைதான்.. வெகு நாட்களுக்குப் பின் தினமும் 7 முதல் 8 கிமீ நடக்கிறேன்..

நடைத்துணை என்று ஒன்று வேண்டுமல்லவா..? அதற்கு இருக்கவே இருக்கிறது நம்ம மொபைல்.. காலையில் இருந்து ஒரே பாடலை கதற்றிக் கொண்டு இருக்கிறது..(ரிப்பீட் போட்டால் கதறாதா என்ன)

மூன்றாம் பிறையில் இருந்து ஜேசுதாஸ் பாடுகிறார்..

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..

இப்போது ஹெட்ஃபோனில் கேட்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறது. அவர் பாடும்போது பின்னணியில் மெலிதாக ஒரு டார் ஷெனாய் ஒலிப்பது ஹெட்ஃபோனில் நன்றாகக் கேட்கிறது.. அது பாடலை முக்கியமான இடங்களிலெல்லாம் தொடர்ந்தபடியே இருக்கிறது. அது பாடலில் இருந்து ஒலிக்கவில்லை. பாடலுக்கு வெளியே இருந்து நமது இடதுகாதில ஒலிக்கிறது. அந்த பாடலை நாம் எப்படி பின்னாலேயே தொடர்ந்து முணுமுணுக்கிறோமோ அதே மாதிர் அதுவும் முணுமுணுக்கிறது.. உண்மையில் அது பாடலின் ஒரு பகுதியல்ல. அதுதான் ரசிகனின் குரல்..

உனக்கே உயிரானேன் எந்நாளும்
எனை நீ மறவாதே..

என்கையில் அது எப்போதோ நம் அம்மா சொன்ன வாக்கியம் போலவும் இருக்கிறது.. டார் ஷெனாய் அதை உறுதி செய்கிறது. அம்மாக்களின் குரல்கள் டார் ஷெனாயை ஒத்துதான் இருக்கின்றன..

பாடல் காலத்தைத் தாண்டி முன் செல்கிறது. சில நேரம் அது காலமின்றி இருக்கிறது. சில நேரம் அது பலப்பல காலம் தாண்டி பின்சென்றபடியே இருக்கிறது..

ஏதோவொரு நெகிழ் இரவில் பிச்சி போலும் பிள்ளை போலுமான பேரழகுக் குழந்தைஒருத்தி நம் மடியில் எச்சில் வடியப் படுத்துறங்கும்போது அந்தப் பாடல் ஒலிப்பதாக மனச்சித்திரங்கள் புரண்டு புரண்டு ஜாலம் காட்டுகின்றன எப்போதும்.. ஶ்ரீதேவியோ கமலோ அன்றி அங்கே ஒரு மாயா ரசவாதத்தில் நாமும் நமக்குப் பிடித்த(நாம் ஶ்ரீதேவி போல அழகானவள் என்று பிம்பப்படுத்தி வைத்த) பெண்ணுமாக ஒருவரை ஒருவர் தாலாட்டிக்கிடக்கிறோம்..

ஒரு சரியான பிறழ் நொடியில் அங்கே பாடுலது ஏசுதாசா, கண்ணதாசனா, பாலுமகேந்திராவா, கமலா அல்லது நாமா என்ற விதிர்ப்பு ஏற்படுவது உண்மை..

நம் இறக்கைகளுள் பொத்தி கவர்ந்து சென்ற ஶ்ரீதேவியை காலம் இப்பவும் மெல்ல மெல்லதான் வயதாக்கி வருகிறது. கொஞ்சம்அடையாளம் மாறினாலும் அந்த தேவதை அதே புன்னகையைஇன்னமும் ஒளிர்த்தபடி இருக்கிறாள்.

இதோ என் மொபைலில் அன்றைக்கு நான் டீக்கடை டீக்கடையாகதேடிச்சென்ற நின்ற ரசித்தபாடல காலை முதல் ஒலித்தபடியே இருக்கிறது. அ து யாருடைய பாடலாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எப்போதும் சில தேவதைகளையும் சில வருடல்களையும் நினைவு படுத்தினால் போதுமில்லையா..?

அந்திப்பகல் உனைநான் பார்க்கிறேன்..
ஆண்டவனே இதைத்தான் கேட்கிறேன்..

ஆரிராரோ.. ஓ ஆரிரோ..