Thursday, 14 November 2013

மொத்தத்தில் ஒரு நாளின் முடிவில் நாம் சந்தோஷமாக உறங்கப் போகிறோமா இல்லை துக்கவானாக உறங்கப் போகிறோமா என்பதுதான் உலகிலேயே ஆக முக்கியமான விஷயம் என்பது என்னுடைய அவதானிப்பு..

இன்றைய நாளின் சந்தோஷங்களை நான் உங்களுக்கு எப்படிப் புரியவைப்பேன் என்பது தெரியவில்லை..

ஒரு சாதாரண நாளில்தான் அந்த விபத்து நடந்தது. என்மீது மோதி என்னை விழச் செய்தவரை எனக்கு நினைவில் இல்லை. மெதுவாக அடுத்த லெஃப்ட் எது என்று தேடியபடி சென்ற நான் கீழே விழுந்தபோதுதான் தெரிந்தது யாரோ பின்னால் இருந்து மோதி என்னை விழுத்தாட்டி இருக்கிறார்கள் என்பது. எப்படியோ எழுந்து நின்று விட்டாலும் இரண்டு கைகளும் செயலிழந்து நின்றது ஒரு துயர் என்றால் விழுந்து கிடந்த ஸ்கூட்டியை தூக்கி விட ஆளில்லாமல் நின்றது அடுத்த துயர் என்றால் அந்த இடத்தில் இருந்து என்னை அழைத்துச் செல்வார்கள் என நான் நம்பி அழைக்கக் கூடிய நண்பர்களும் அசிஸ்டண்ட்டுகளும் ஊரிலில்லை என்பதுதான் பெருந்துயராக இருந்தது..

கிட்டத்தட்ட 15 வருட சென்னை வாழ்வில் யாருமற்று நின்ற கணம் அது.. சென்னை வாழ்வைப் போலவே விரிசல் விழுந்த எலும்புக் கையோடு நான் போன வேலையையும் முடித்துவிட்டு ஏழு கிலோ மீட்டர் தள்ளி இருந்த என் வீட்டுக்கு வண்டியை ஓட்டி வந்த போராட்ட தருணம் அது.. சோற்றுக்கு பஞ்சம் வந்ததுண்டு.. ஆனால் ஒரு நாளும் நம் தன்னம்பிக்கைக்கு பஞ்சம் வந்ததில்லை.. அந்த மன உறுதிதான் என்னை வலியைப் பொறுத்தபடி ஏழு கிலோ மீட்டர் வண்டியை ஓட்ட வைத்தது..

பின்னர் ஒரு பொது மருத்துவரைப் பார்த்து, வலி நிவாரணிகளை மறுத்து, நண்பன் தேவின் ஆலோசனையின் பேரில் வலி நிவாரணியை எடுத்து பின்னர் எலும்பு முறிவு நிபுணரைப் பார்த்து என வாதையுடன் கழிந்த இரண்டு நாட்கள் அவை..

இன்றைய முகநூல் ட்ரெண்டுக்குத் தக்கபடி மாவுக்கட்டோடு என் கையைப் படமெடுத்து நிலைத்தகவல் போட்டதில் மழையெனப் பொழிந்த அன்பை சேமித்து வைக்க என்னிடம் கொள்கலன்கள் இல்லாமல் போனது..

இடைப்பட்ட இந்த நாட்களில் என்னைவிட என் இடது கை பெரும் கவனிப்பைப் பெற்றுவிட்டது. நண்பரும் தம்பியுமான டி.வி.எஸ் சோமு திருப்பூரிலிருந்து இந்தக் கையைப் பார்ப்பதற்கென்றே வந்திருந்தார். என் நெகிழ்வினை வார்த்தைகளால் சொல்லமுடியாமல் புன்னகையால் கடக்க வேண்டி வந்தது. அதை விட கொடுமை கண்ணீரை மறைப்பது..

நான் இந்த சாலிகிராமம் காந்திநகருக்கு குடிவந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. பல வருடங்களுக்கு முன் குடி வந்த புதிதில் வீடு எப்படி இருக்கிறது என்று மட்டும் பார்க்க வந்த எனது சித்தப்பா இப்போது என் கையை பார்ப்பதற்காகவென்று வீட்டுக்கு வந்துவிட்டுப் போனார்..

நான் வழக்கமாக போகும் Bar ல் நான் வழக்கமாக உட்காரும் டேபிளில் எதிரே வந்து ஒரு முகம தெரியாத ஆசாமி வந்து உட்கார்ந்தார். ஏதும் பேசாமல் குடிக்கத் துவங்கியவர் முடித்து எழும்போது கையில் என்ன கட்டு என்று கேட்டார். நான் நடந்ததைச் சொன்னேன். நல்லவங்களுகுதான் இப்புடி நடக்குது என்று புலம்பியபடி எழுந்து சென்றார். (ங்கொங்ய்யால.. நான் நல்லவன்னு எப்பய்யா உஉங்ககிட்ட வந்து சொன்னேன்..?)

வழக்கமாக Bar ல் வந்து காசு வாங்கும் திருநங்கை என் கையைப் பார்த்துவிட்டு ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து என் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து என் கையில் ஐந்து ரூபாயைக் கொடுத்துச் சென்றார.

நாம் பயணம் செய்யும் பேருந்தில் திடுமென துணைக்கு பெண்கள் யாருமின்றி கைக்குழந்தையோடு ஒரு ஆண் ஏறினால் மொத்தப் பேருந்துக்கும் இரக்கம் ஊற்றெடுக்கும். அதே போலதான் கிட்டத்தட்ட எனது இடது கையை அனைவரும் அந்த அன்னையற்ற பிள்ளை போல் பார்த்துதான் பேரன்பு செலுத்தினார்கள்..

இன்று காலையில் 14 நாள் தண்ணீர் படாமல் பாதுகாத்த இடது கையில் அழுக்கும் , குளியாமையும் சேர்ந்து நாற்றம் வருவது போல உணர்வு ஏற்பட மாவுக்கட்டை சற்றே நகர்த்தி நீர் படாத இடங்களை சோப்புத் தண்ணீரால் கொஞ்சம் துடைக்கலாம் என்று முயன்றதில் மாவுக்கட்டு கழன்று கீழே விழுந்து விட்டது..

இதற்கிடையே தேவ் தனது நண்பரான இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனைக்கு போகும்படி சொல்லி இருந்தார். அலைச்சல்களுக்குப் பின் அந்த மருத்துவரை சந்தித்தால் அவரும் நமது முகநூல் நண்பர்தான்.. Ragu Pathy. பிரியம் மாறாமல் தனது சக ஆர்த்தோவிடம் என்னை அழைத்துச் சென்று ரகுபதி காட்ட அந்த ஆர்த்தோ என் எலும்பு நன்றாக கூட ஆரம்பித்துவிட்ட தகவலைச் சொல்லி ஒரே ஒரு grip bandage ஐ மட்டும் போட்டு அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைத்தார்..

எத்தனையோ கடந்து வந்துவிட்டேன்.. ஆனால் என் மீது காட்டப்படும் இத்தனை பிரியங்களை நான் என்ன செய்வது என்பது புரியவில்லை.. தாகித்தவன் இரு கை ஏந்தி மழையைப் பருகுவது போல பிரியத்தைப் பருகியபடியே இருக்கிறேன்.. ஒரு நாளும் திருப்பித் தர முடியாத அளவுக்கு எதற்காக இந்த மனிதர்கள் எனக்கு இப்பிரியங்களைப் பரிசளிக்கிறாரகள் என்பது எனக்கு எந்நாளும் புரியவே புரியாது என நினைக்கிறேன்..

அன்புள்ளவர்களைப் பற்றி சொல்லத் துவங்கும்போது கூட அய்யன் வள்ளுவன் முதலில் அன்பிலார் எல்லாம் என்றுதான் துவங்கி இருக்கிறான்.. ஆனால் இத்தனை அன்புடையாரும் சேர்ந்து என் என்பை சரி செய்ய என்ன புண்ணியம் செய்தேன் என்றுதான் தெரியவில்லை..

நெகிழ்வுகள் இருந்தபடியே இருக்க என்னிடம் வந்து சேகரமாகி இருக்கும் இந்த தாளமுடியாத பிரியங்களை யாரிடமாவது தந்தாலே போதுமென்று இருக்கிறது எனக்கு..

நிச்சயம் பிரியங்கள் பொல்லாச் சுமைதான் நண்பர்களே..
 

No comments:

Post a Comment