Saturday 24 December 2011

நேற்றுப் பெய்த மழை 
ஸ்ருதியினுடையது.
தண்ணி நூல் என்று 
பெயர் வைத்திருந்தாள்.

இன்றைய மழை 
அமுதாவினது.
டம் டம் என்பது 
அதன் பெயர்.

நாளைய மழைக்கு 
ரெயின் என்று பெயர் வைத்து 
காத்திருக்கிறான் 
டிச்சாங்கா எனப்படும் 
த்ரிஷாங்கன்.

கால காலமாக 
கனகோடி நூறாண்டாக 
பெய்யெனப் பெய்து 
வையத்தை வாழ்வித்தபடி 
பொழிந்தபடி இருக்கும் 
இந்தப் பெருமழை 
புன்னகையோடு 
பிள்ளைகள் வைக்கும் 
பெயருக்காகவும் 
பெய்தபடி இருக்கிறது.

Saturday 10 December 2011

பூ வைத்தல்

அங்கே இங்கே ஓடாதே
மாடிப் படிகள் ஏறாதே 
அடுக்களை வேலைகள் 
அளவாய் செய்.
அதிகம் சுமைகள் 
தூக்காதே.
ஹார்லிக்ஸ் பூஸ்ட் 
குடித்துக்கொள்.
குங்குமப் பூவும்
சேர்த்துக் கொள்.
பையன் பிறந்தால் 
சொல்லி விடு.
என் அப்பா பேர் வைக்கலாம்.
பெண் பிறந்தால் 
கொன்று விடு.

அவள் கல்லறையில் 
பூ வைக்கலாம்.
(எனது நண்பர் லிசாவின் கவிதை இது. எனக்குப் பிடித்த கவிதை என்பதால் போஸ்ட் செய்து இருக்கிறேன்.)

Friday 9 December 2011

மழை கேட்கக் கடவது...

தர்மம் செய்த 
ஐய்யாமார்களுக்கு 
அருகில் நிற்க கூச்சப்பட்டு 
நனைந்தபடி நிற்கும் 
பிச்சைக்காரக் கிழவிக்காகவும்...

ஊறிய ஈரத்துணியாக 
குப்பையில் செத்துக்கிடந்த 
ஐந்து பூனைக்குட்டிகளுக்காகவும்..

தெர்மாகோல் படகில் 
பள்ளி செல்வதாக 
பேப்பர் புகைப்படத்தில் 
வருடந்தோறும் புன்னகைக்கும் 
அறியா சிறுவர்களுக்காகவும்...

வீட்டுக்குள் தேங்கிய 
கழிவு நீருக்கு நேர்மேலே 
தொட்டிலில் தூங்கும்
சின்ன குழந்தைக்காகவும்...

இன்ன பிற 
பாவப்பட்ட சீவாத்திகளுக்காகவும்..

இந்த சென்னை மாநகரிலே
எப்போது பெய்தாலும் 
கொஞ்சமாய் பெய்யட்டும் 
மழை... 

Saturday 3 December 2011

நீ பார்க்காதவை

நள்ளிரவில் பெய்த மழை

ஆளில்லாத் தெருவில் 
கண்ணாமூச்சி ஆடிய 
நாய்க் குட்டிகள்.

உச்சி வெயிலின் 
உக்கிரத்தை தப்பிக்க
ஓரடி நிழலில் 
தூங்கும் தாயின் 
முலையுறிஞ்சும்
குழந்தை.

அழுது கொண்டிருந்த 
சிறுமிக்கு கிடைத்த 
ஐந்து ரூபாய் நாணயம்.

மற்றும் 

என் காதல்.

Saturday 12 November 2011

பெயர்ச் சொல், வினைச் சொல்


வலியைப் பற்றிய
ஒரு சிறுவனின் பாடலில் 
இருந்தது
ஒரு நல்ல
அப்பாவைப் பற்றிய கனவு.

வலியைப் பற்றிய 
அம்மாவின் பாடலில் 
இருந்தது
முழுக்க முழுக்க 
அப்பாவின் வசைச் சொற்கள்.

வலியைப் பற்றிய 
ஓர் உதவி இயக்குனனின்
பாடலில் இருந்தது
ஓர் அப்பாவைப் பற்றிய கதை.

தயவு செய்து சொல்லுங்கள்..
வலி 
மற்றும் 
அப்பா
இரண்டும் 
வேறு வேறு சொற்கள்தானே?

மழை


மழைத் துளிகள் விடாமல்
நிலத்தோடு பேசுகின்றன 
மழைப் பேச்சு.

நாம் சந்தித்தபோது 
பெய்த மழை 
அல்ல இது.

நாம் பிரிந்தபோது
பெய்த மழையும் அல்ல.

ஒரு வேளை 
யாரோ இன்று 
சந்திக்கிறார்கள் போலும்.

அல்லது 
பிரியவும் கூடும்.

பிரிவெனில் ஒரு வசதி
மழையில் அழுதால் 
தெரியாது.