Saturday, 4 January 2014

எளிய மனிதர்களின்
கண்ணீர்
அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போதே
அறுவடைக்கு
தயார் செய்யப்பட்டு விடுகிறது..

துக்கங்கள் தினந்தோறும்
பல்வேறு வடிவங்களில்
அவர்களுக்கு வழங்கப் படுகின்றன -
மாத்திரை வடிவிலோ
டானிக் வடிவிலோ
அல்லது
ஒரு பிரம்பின் வடிவிலோ..

சில நேரம்
அதிக கண்ணீர்
தேவைப்படும்போது
எளியவர்களின் 
சொந்தங்கள் கொல்லப்பட்டு
அறுவடை முடிக்கப்படுகிறது..

எந்நேரமும் 
பசித்திருக்க வைக்கப்பட்டு
அவர்கள் 
கண்ணீருக்காக 
தயார் செய்யப் படுகிறார்கள்..

கண்ணீர் தடைப்படக் கூடாது
என்பதற்காக
தடையின்றி
தண்ணீர் மட்டும் வழங்கப்படும்..

எந்நாளும்
எளியவர்கள் நம்புவதற்காக
எளியவர்களின் சிநேகிதனாகவே
அறுவடையாளர்கள்
சித்தரிக்கப்படுகிறார்கள்..

உண்மையில் சொல்லப் போனால்
எளியவர்களின்
நம்பிக்கையைப் பெறுவதற்காகவே
அந்த
கண்ணீர் பயன்படுத்தப்படுகிறது..

கசிந்துருகிக் காணப்படும்
கண்ணீர்த்துளி எல்லாம்
தன்னிடம் இருந்தே வந்தது
என்பதை அறியாமல்
தன் முன் தோற்றப்படும்
ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும்
தன் 
துயரத்தை எல்லாம் 
முத்தமாக இட்டு அனுப்புகிறான்
எளியவன்..

எளியவனின் கண்ணீர்த்துளிக்கு
விமோசனமே இல்லை சாமிகளா..

3 comments: