Sunday, 26 January 2014

காற்று புகுந்தும்
அசையாததொரு
திரைச்சீலை என்னிடம் இருக்கிறது..

திருகியதும் தண்ணீர் தரும்
குமிழ்களை 
நான் வாங்க முடியும்,
விற்க முடியாது..

முகத்தில் தெறிக்கும்
சிவப்பு வண்ணத்தை
நீங்கள் பார்க்க 
விரும்ப மாட்டீர்கள்
- சிவப்பு வண்ணம்
பெயிண்ட் அல்ல

தலைகோதும் விரல்களுக்கு
கொலை செய்யத் தெரிவது
யாருடைய பிழையும் அல்ல..

அரற்றியபடி 
முத்தத்தினால் உயிரை உறிஞ்சும்
பாடல்கள் எல்லோரிடமும்
உள்ளன..

பிஞ்சு மாங்காய்களை
மலராத மலர்களை
இன்னும் முதுகு நிமிராத தாவரங்களை
உங்களால்
வெட்டி உணவு சமைக்க முடியும்..

அய்யோ என்பது 
பாடல் என்றும் நீங்கள் சொல்வீர்கள்..

ஒரே கவிதையை
மறுபடி மறுபடி
நான் எழுதியபடி இருப்பேன்..

இதோ என்னை உகுக்கிறேன்..
பசித்தவர்கள் அனைவரும்
என்னைத் தின்று
பசியாறுவீர்களாக..

தன் மாமிசத்தை 
உணவாகக் கொடுத்தவன்
கற்பிதம் அல்ல...

ஆண்டாண்டு காலமாக..
நூற்றாண்டு காலமாக
அவன்
அவர்கள்
நாம்
எல்லோரும்
அவனை உண்டபடிதான் வாழ்ந்திருக்கிறோம்..

இந்த நாளின் உணவை
எனக்கு அருளியதற்காக
யாரின் பெயராலும்
நான்
நன்றி சொல்லப் போவதில்லை..

தேவனாகிய சக மனிதனே
உண்மையின் பெயரால்
உன் வயிறு
பசியினைக் கொல்வதாக 
இருக்கட்டும்..

யாரேனும் உனக்கு இரு
பட்டாணிக் கடலைகளை அளிப்பார்கள்
காத்திரு..

No comments:

Post a Comment