Friday, 17 January 2014

விடாமல் தொடர்ந்து வருகிறது
ஒரு கன்றுக்குட்டி..

மொழிபெயர்க்கவியலாத
சப்தங்களைப் பேசுகிறது மழை..

கொடுத்த அன்புக்கு
பதில் சொல்ல முடியாமல்
அணைக்கவும் தெரியாமல்
புன்னகையால் 
அணைத்துவிட்டுப் போகிறார்
மேல் வீட்டுக்காரர்..

கையிலிருந்து 
சிந்திவிட்ட ரேகைகளை
எடுத்திருந்தால் கொடுத்துவிடும்படி
ஜோசியக்காரரை
கெஞ்சியபடி தொடர்கிறாள் 
அந்த பைத்தியக்காரி..

காற்றின் முத்தத்துக்கு
மரம் புன்னகைக்கிறது..

குண்டும் குழியுமான
தெருவை
இட்டு நிரப்புகிறது
காய்கறிக்காரரின் குரல்..

பேச்சுகளே இன்றி
மூச்சுகள் மட்டும்
கேள்வியாகவும் பதிலாகவும்
துவங்கி முயங்கி
முடிந்துவிடுகிறது
அந்த
ஓரிரவு தொடர்பு..

எங்கு திரும்பினாலும்
பேச்சுகளால் நிரம்பியிருக்கிறது
இவ்வுலகு..

அனைத்துக்கும்
காதை அடைத்துக் கொண்டு
ஒரே ஒரு வார்த்தையை
உன்னிடம்
இறைஞ்சியபடி இருக்கிறேன்
நான்..

No comments:

Post a Comment