Sunday, 23 March 2014

நூல் பிரிந்து தொங்கும்
அரைப்பாவாடையும்
துளை மாறி பட்டன் போட்ட
ஆம்பிளைச் சட்டையும்
போட்டவள்தான்
அக்கா குட்டி
அழும் ஆடையில்லாத
தம்பி குட்டிக்கு
கண்துடைத்துவிட்டு
அவளது பிஸ்கெட்டில்
பாதியை பிய்த்துத் தருகிறாள்
கூடவே தன் புன்னகையையும்..
உங்களுக்கு நிறைய கவலைகள்
உங்கள் பர்சுகளில்
பணம் குறைந்திருக்கலாம்
உங்களது கேர்ள் ஃபிரண்ட்
சண்டையிட்டிருக்கலாம்
உங்களது இருசக்கர வாகனம்
கிளம்ப மறுத்திருக்கலாம்
இன்னும் இன்னும் சில பல காரணங்கள்
இருந்ததனால்
ஒரு ஓரத்தில் கிடக்கும்
என் விண்ணப்பத்தை
நீங்கள்
கவனிக்காமல் இருந்திருக்கலாம்.
உண்ட கையைக்
கழுவ நேரமில்லாமல்
பேப்பரில் துடைக்க விழையும் நீங்கள்
என் விண்ணப்பத்தில்
கைதுடைக்கும் முன்பாக
அதன்
கடைசி வரியை மட்டுமாவது
படியுங்கள் அய்யா..
அது சொல்கிறது :
எனக்கு
ரொம்பப் பசிக்கிறது சாமி..
நேற்று முதல்நாள்
வீடு திரும்பும் இரவில்
மிதமிஞ்சிய போதையால்
நிலைபிறழ்ந்த நண்பனை
எழுப்பவோ அல்லது
எழும்பாமல் படுக்கவைக்கவோ
போராடிய நண்பனைப் பார்த்தேன்.
கெட்ட வார்த்தைகளால்
அந்த போதை நண்பன்
உதவும் நண்பனை
செதுக்கி எடுத்ததைக்
கேட்டபடிதான் கடந்து போனேன்..
நேற்று காலையில்
பேப்பர் வாங்கப் போகையில்
அந்த குடிகார நண்பன் எழுந்து
அரக்கப் பரக்க
தன் சட்டைப் பை
பணத்தை தேடியபடி இருந்தான்.
எதுக்கு அவ்வளவு குடிக்கணும்
எதுக்கு இப்ப தவிக்கணும்
என்று நான் கேட்டபோது
ரொம்ப குடிக்கல சார்
யாவகம் எல்லாம்
நல்லாத்தான் இருந்திச்சு.
எவனோ ஒரு பரதேசி
ஃபிரண்டுன்ற மாதிரி
என்னை கொள்ளையடிச்சான்
அத்தனை போதையில
அதை தடுக்கமுடியாம
அவனை திட்டிக்கிட்டே இருந்தேன்
என்றான் அவன்..
களவும் கருணையும்
ஒருவடிவம் கொண்டது
எதற்காக என திகைத்து
அடுத்த சொல் பேசாது
வீடு திரும்பினேன்
நான் என்ற அயோக்கியன்..
ஆடும் ஊஞ்சலில்
ஒரு வயது போகிறது
ஒரு துக்கம் வருகிறது
குழிந்து ஏந்திய கைகளில் பெய்யாமல்
மழை
எல்லா இடத்திலும் பெய்கிறது
விரித்த கைகளுடன்
கனவில் பறக்கும் குழந்தை
விழித்தபின் அழக்கூடும்
இல்லாத பொற்காசுகளை
இல்லாத பைகளில் இருந்து
இல்லாத பிச்சைக்காரனுக்கு
அள்ளியள்ளி வழங்கிப் போகிறான்
மனம் பிறழ்ந்த பிச்சைக் காரன்
இருக்கிறதென்றோ இல்லையென்றோ
உறுதியாகச் சொல்ல முடியாது
அன்பை
எப்போதும் என் துழாவும் கரங்களுக்கு
சிக்கியே விடுகிறது ஒரு செடியோ மரமோ
பள்ளத்தில் வீழும் முன்பு
இந்த இக்கரையிலிருந்து
பள்ளத்தில் வீழாமல்
தினந்தோறும் பயந்தபடி இருக்கிறேன்
ஆயிரம் கரங்கள்
என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும்போதும்
பிள்ளைக்கறி
@@@@@
தெருக்களில் கூவிக் கூவி
விற்கிறான் சிறு வியாபாரி
அவனது கூடையில்
24 கனவுகள் இருக்கின்றன
வாங்குவோர் இல்லையெனினும்
தினந்தோறும் அவற்றை
துடைத்து முத்தமிட்டு
கூடைக்குள் வைக்கிறான் அவன்.
விலை எப்படி
என்று கேட்பவர்களிடம்
ஒரே ஒரு தடவை
இந்த கனவுகளை கையில் வைத்து
அவற்றின் களங்கமற்ற கண்களை
பார்த்து விலைகேளுங்கள் என்றே
கெஞ்சுகிறான் அவன்..
பேச நேரமில்லாது
அதிவர்ண விளக்குகள் மின்னும்
கடைகளில் சென்று
பொம்மைகள் வாங்குவோரிடம்
இவன் சொல்ல விரும்புவதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
இவையெல்லாம்
வெறும் கனவுகள் அல்ல
என் பிள்ளைகள்..
இப்படியாகக் கழிகின்றன
என்
எல்லாப் பொழுதுகளும்..
வைத்துவிட்டுப் போன புன்னகைகள்
திரும்பி வரும்முன்னே
நசுங்கிக் கிடக்கின்றன..
வந்து பார்க்கையில்
செடிரோஜாப் பூக்கள்
பாதிதான் இருக்கின்றன.
பொக்கிஷமான கண்ணீர்த்துளியை
யாரேனும்
சாக்கடையில் வீசிவிட்டுப்
போயிருக்கிறார்கள்.
தேடிச் சேர்த்த
கூழாங்கற்களை
கட்டிடம் கட்டப்
பயன்படுத்தி விட்டார்கள்.
என்ன மயிரு புன்னகை
இன்னொருக்க சிரிச்சிட்டாப் போச்சு
என்ன மயிரு ரோசாப்பூ
நாளைக்கு பூக்காமலா போகும்
என்ன மயிரு கல்லு
அதென்ன வைரமா
என்று சொல்லும் உங்களிடம்
என்ன பதில் சொல்ல
அந்தப் புன்னகை
இறந்தவனின் கடைசிப் புன்னகையென்றும்
அந்த ரோஜா
அச்செடி எனக்காகப் பூத்ததென்றும்
அந்த கூழாங்கற்களை
இறக்குமுன் அந்நதி
எனக்குத் தந்ததென்றும்
எப்படி விளக்க முடியும் உங்களிடம்
உங்கள் கேள்விகள் எளிமையானவை
என் பதில்களால் உங்களைக் கொல்ல
நான் விரும்பவில்லை.
நேற்று ஒரு பெரும் தொழிலதிபர் வீட்டுத் திருமண வரவேற்புக்கு எங்கள் இயக்குநருடன் போயிருந்தேன். உடன் போயிருந்தேனென்றாலும் எனக்கும் தனியாக அழைப்பு வைத்திருந்தார்கள்தான். எங்கள் இயக்குநரின் நண்பரின் காரில் போனோம். ITC சோழா என்று மிகப்பெரிய ஹோட்டலில் வரவேற்பு. பல முறை கிண்டி வழி சென்றிருந்தாலும் அந்த ஹோட்டலை நான் கவனித்ததே இல்லை. முக்கிய காரணம் அதைக் கடக்கும் பகுதியில் சிக்னலைக் கடந்து செல்லும் டிராஃபிக் பதற்றம் என்றே நினைக்கிறேன். எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய ஹோட்டல்.. எழு நட்சத்திர ஹோட்டல் என்றார்கள். மும்பை தாஜ்ஜைவிட பெரியது என்றார்கள். சந்தன வண்ண மார்பிள் கற்களால் இழைத்து இழைத்து கட்டி இருக்கிறார்கள். அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளில் ஒன்றைக் கட்டும் செலவிலேயே ஒரு சிறு குடும்பம் வாழ போதுமான ஒரு சிறு வீட்டை கட்டிவிடலாம் போல.. அத்தனை பணம்.
நகரும் படிக்கட்டுகள். ஆங்காங்கே நாம் தொலைந்து விடாமல் வழிகாட்ட கோட் சூட் அணிந்த பணியாளர்கள். இதைத்தவிர கூட்டமான கூட்டம். ஹோட்டலுக்குள் நுழைவதற்கு முன் வெளியிலேயே கார்களின் வரிசை துவங்கிவிட்டது. சரியாக உள்ளே நுழைந்து நாங்கள் காரை வாலட்டிடம் கொடுத்துவிட்டு இறங்க நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆனது. வரிசை முழுக்க ஃபேன்சி நம்பர் கொண்ட விலையுயர்ந்த கார்கள்தான். மணமகனின் தந்தை அத்தனை விஐபி. உள்ளே நுழைந்ததுமே எங்களை நாங்கள் பணிபுரிந்த முந்நாள் நிறுவனத்தின் சிஇஓ காத்திருக்க விடாமல் பத்தே நிமிடத்தில் மணமக்களருகில் அழைத்துச் சென்றுவிட்டார். அத்தொழிலதிபரின் பல்வேறு தொழில்களில் சீரியல் தயாரிக்கும் பிரிவின் சிஇஓ அவர். அந்தப் பிரிவின் முன்னாள் தொழிலாளன் நான்.
வரவேற்பு அரங்கம் அத்தனை பெரியது. எங்க ஊர் வெங்கடேஸ்வரா தியேட்டரை ரெண்டு தரம் உள்ளே வைக்கலாம். அத்தனை பெரியது. அந்த அரங்கம் நிறைய மனிதர்கள். அத்தனை பேரும் விஐபிக்கள். ஸ்டாலின், கமல், கனிமொழி, ஜிகே வாசன், அதர்வா என்று நான் அங்கிருந்த வரை வந்து போனார்கள். ஒரு ஓரமாக பெரும்பாலானோரால் கவனிக்கப்படாமல் ஆர்க்கெஸ்ட்ராவில் வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி அமரன், சுசித்ரா, மனோ என்று அவர்கள் பாட்டுக்கு நின்று பாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கமாக பஃபே சாப்பாட்டுக்கடை. வெரைட்டியான வெரைட்டி. எனக்கா பெரிய்ய ஏமாற்றம். அத்தனையும் சைவம். அசைவத்துக்கு இடமே இல்லை. அடப் பாவிகளா. இத்தனை செலவு செய்து கல்யாணம் வைப்பவர்கள் அசைவச் சாப்பாடு போட்டால் குறைந்தா போவார்கள் என்ற கடுப்பில் ஒரே ஒரு நானுக்கு என்னத்தையோ போட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வீடு வந்துதான் தோசை சாப்பிட்டேன். சாப்பிட்டு முடிந்து தொலைந்து போன மற்றவர்களை கண்டு பிடித்து ஒன்று சேர்த்து ஒரு வழியாக கீழே இறங்கினோம்.
வேலட்டிடம் வண்டி எண்ணைக் கொடுத்துவிட்டு நின்றதிலிருந்து வண்டி வெளியேறுவது வரை முப்பது நிமிடம் ஆனது. வீடு வந்து சேர பத்தரை..
அந்த அரங்கத்துக்கான வாடகை ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்றார்கள். யோவ் என்னோட படத்துக்கே பட்ஜெட் ஒரு கோடி ரூவாதான்ய்யா என சொல்லத் தோன்றியது..
வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் முதலில் தோன்றிய எண்ணம் நம்ம வீடு அந்த ஹோட்டல் பாத்ரூமை விட சின்னது என்பதுதான். என்ன செய்ய. வீரதீர சாகசமெல்லாம் செய்து காட்டி பெரும் புகழ் பெற்றாலும் கடைசியில் நாய் நக்கித்தானே குடிச்சாகணும்.. 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினமாக அறிவிக்கப்பட்டபடி இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை எல்லா நாட்களும் கொண்டாடப்பட வேண்டியவையே.. வாழ்வையே கொண்டாட்டமாக வாழத்தானே இத்தனை சம்பாத்தியங்களைத் தேடி ஓடுகின்றோம்.. ஆக பெயரிட்டோ பெயரிடாமலோ எந்த நாளென்றாலும் அதை நான் கொண்டாட ரெடியோ ரெடி..
இன்று சிட்டுக்குருவிகளின் தினம் என்கிறார்கள். பறவைகளின் பிரியரான குஷ்வந்த் சிங்கும் இன்றே இறந்து பட்டிருக்கிறார். இயற்கையின் பல்வேறு விநோதங்களில் இதுவும் ஒன்று. (குயில்களின் வாழ்வு குறித்து அவர் தன்னுடைய ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். அற்புதமான கட்டுரை அது. எந்த பத்திரிக்கை, என்ன தலைப்பு என்பதெல்லாம் தெரியாது. தேடி படித்துக் கொள்ளுங்கள்.)
சரி. நம்ம சிட்டுக்குருக்கு வருவோம். சிட்டுக்குருவிக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் அறிமுகம் பற்றிஎனக்கு நினைவில் இல்லை. நான் பிறந்ததிலிருந்து நான் பாட்டுக்கு நானும் அது பாட்டுக்கு அதுவுமாக தனித் தனியாக வாழ்ந்துதான் வந்தோம். முதன் முதலில் அது தன்னைக் கவனிக்க வைத்தது எப்படியென்றால் சிறு வயதில் அம்மா சில்வர் பாத்திரங்களை (எங்க ஊர்ப்பக்கம் எவர்சில்வர் பாத்திரத்தை சில்வர் பாத்திரம் என்றே அழைக்கிறோம்) நன்கு கழுவி உலரட்டும் என்று வெயிலில் கவிழ்த்தி இருப்பாள். இந்த சிட்டுக்குருவி என்ன செய்யும் என்றால் அது பாட்டுக்கு திரும்பத் திரும்ப வந்து பாத்திரத்தில் விகாரமாகத் தெரியும் தன் பிம்பத்தை விடாமல் கொத்திக் கொண்டே இருக்கும். எங்களுக்கு அதன் மூக்கு உடைந்துவிடாதோ என்று ஆச்சரியமாக இருக்கும. குருவியின் மேல் பாவப்பட்டு அம்மா பாத்திரத்தை எடுத்து உள்ளே வைக்கும் வரை அந்த பிரச்சினை தொடர்ந்தபடி இருக்கும்.
என் சின்னத் தம்பிக்கு குழந்தையிலிருந்தே மூச்சிழைப்புப் பிரச்சினை உண்டு. ஆஸ்த்துமா என்றில்லை. பிரைமரி காம்ப்ளெக்ஸ் என்றோ வேறெதுவோ டாக்டர்கள் சொன்னதாக நினைவு. அதுதான் எல்லா வியாதிக்கும் ஊரில் கைவைத்தியம் இருக்குமில்லையா.. (சில நேரம் கேன்சருக்கு கூட கைவைத்தியம் சொல்லி அதிர வைப்பார்கள் அந்த நேரத்து கிழவிகள்) அப்படி என் அம்மாவுக்கு ரெக்கமெண்ட் செய்ப்பட்டதுதான் சூட்டாங்குருவி. ஒன்றுமில்லை. சிட்டுக்குருவியைப் பிடித்து உரித்து உப்புத்தடவி நெருப்பிலே வேகவைத்து தின்பதுதான் சூட்டாங்குருவி. பார்ப்பன வீடு என்பதாலும், குழந்தை என்பதாலும் என் தம்பிக்கு அந்த கைவைத்தியம் மறுக்கப்பட்டது என்பது வேறு விஷயம். பின்னர் பலமுறை தீயில் வாட்டப்படும் சிட்டுக்குருவிகளையும் பார்த்து ரசித்திருக்கிறேன். பின்னர் கறி வகையறா தின்னப் பழகியபின் சூட்டாங்குருவிகளை பார்க்கும் அனுபவமோ உண்ணும் அனுபவமோ கிடைக்கவில்லை. ஒரு வேளை அப்படி வாய்த்திருந்தாலும் உண்டிருப்பேனா என்பது சந்தேகம்தான்.
பின்னர் வாசிப்பு அனுபவங்கள் பெருகப் பெருக விட்டுவிடுதலையாவதை அவன் சிட்டுக் குருவியோடு associate செய்து விட்டுப் போனதால் சிட்டுக்குருவி மீது தனி கவனம் வந்தது. அவ்வப்போது கிணற்று மேட்டில் கொஞ்சம் குருணை வைப்பது. வறுத்த கடலை உண்ணும்போது, அதிலிருக்கும் முக்குகளை எல்லாம் பொறுமையாக சேர்த்து வைத்து அவற்றையும் கிணற்றுக் கல்லில் வைப்பது என சிட்டுக்குருவிகளின் செஞ்சோற்றுக் கடனை கண்டபடி ஏற்றிவிட்டேன்.
இவை தவிர எங்கள் வீட்டு கிணறு குருவிகளுக்கான பெருக்க குகையாகவும் ஜல சமாதியாகவும் ஒரே நேரத்தில் விளங்கியது. இனப்பெருக்க காலத்தில் சிட்டுக் குருவிகள் எல்லாம் எங்கள் கிணற்றில் கால்வைத்து ஏறுவதற்காக வைத்திருக்கும் பிடி பொந்துகளில் பஞ்சு நார் எல்லாவற்றையும் வைத்து கூடு கட்டி முட்டைகள் இட்டுவிடும். நாங்கள் பாட்டுக்கு கிணற்றில் நீர் இறைத்து அன்றாட வாழ்வைக் கழித்தபடி இருக்க குருவிகள் பாட்டுக்கு தம் குஞ்சுகளுக்கு இரை ஊட்டி வளர்த்தபடி இருக்கும். குஞ்சுகள் பெரிதாகி பறக்கத் துவங்கும்போதுதான் சிக்கல் உண்டாகும். நிறைய குருவிகள் கிணற்றில் விழுந்து இறந்து மிதக்கும். அபூர்வமாக சில நேரம் கொல்லைப் பக்கம் வரும்போது குருவிகள் பதற்றத்துடன் கீச் கீச்சென்று கத்தி இங்குமங்கும் அலைக்கழிவதைப் பார்த்து உள்ளே எட்டிப் பார்த்தால் குஞ்சொன்று நனைந்த இறகுகளைப் படபடத்து நீருக்குள் தவிப்பதைப் பார்ப்போம். நீரிறைக்கும் வாளியை கிணற்றுக்குள் விட்டு குருவிகளின் சடலமானாலும், குருவியே ஆனாலும் மீட்பதில் நான் கில்லாடி. இறந்த குருவியென்றால் மெத்தென்றிருக்கும் அதன் நனைந்த இறகுகளை ஒரு முறை வருடிவிட்டு கொல்லையிலேயே புதைப்பதோ அல்லது தூக்கி எறிந்து விடுவதோ உண்டு. உயிரோடு மீண்டது என்றால் நடுக்குற்று மெல்லிய கால்களில் நிற்க முடியாமல் தள்ளாடும் அதை எடுத்து எடுத்து வெயில் படும் இடத்தில் வைத்து உலர வைத்து விட்டுவிடுவேன். எப்போதென்று தெரியாத ஒரு பொ ழுதில் அது பறந்து போயிருக்கும்..
ஊர்விட்டு சென்னை வந்த பொழுதுகளில் எப்போதும் அதிகாலை கேட்கும் பறவைகளின் சத்தத்தல் குருவிகளின் சத்தம் மட்டும் இல்லாமல் என்னவோ போல இருக்கும். (இப்போதோ காலைகளில் பறவைச் சத்தங்களே இல்லை. மிஞ்சி இருக்கும் காகங்கள் வேண்டுமென்றால் பேருக்கு கொஞ்ச நேரம் கத்திவிட்டு ஓய்ந்து விடுகின்றன. அவற்றுக்கும் நாகரிகம் என்று எதாவது நோய் வந்துவிட்டதோ என்னமோ)
சென்னையின் பிரம்மச்சரிய நாட்களில் பெரும்பான்மை வாழ்ந்தது கங்கப்பா தெருவின் மொட்டை மாடி அறையில்தான். சத்திரம் மாதிரி இருக்கும். என் அறையில் என்ன விசேஷம் என்றால் அறைக்கு நேராக ஒரு நெட்டிலிங்க மரம் அடர்ந்து வளர்ந்திருக்கும். அதில் வந்து உட்காருவதற்காக என்று இல்லாமல் சில மைனாக்களும், கிளிகளும், தவறாமல் காகங்களும் வந்து செல்லும். எட்டிப் பார்த்தால் பிரசாத் ஸ்டூடியோவின் குப்பைகளுக்கு நடுவே உயிர் ஓடை போல ஒரு தாயக்கீரிப்பிள்ளையும், இரண்டு குட்டிகளும் வால் நுனியைத் தொடுத்துத் தொடுத்து நீரின் நகர்ச்சி போல ஓடும்..
சிட்டுக்குருவிகளை இழந்ததன் மூலம் சூழல் வட்டத்தல் முக்கியமான கண்ணியை நாம் இழந்துவிட்டோம்தான். நாளைப் பின்ன பழந்தமிழ்ப் பாடல்களில் சிட்டுக்குருவி என்ற பதத்தைப் பார்த்துவிட்டு நம் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சிட்டுக்குருவி என்றால் என்ன என்று கேட்டால் காட்டுவதற்கு மிருகக்காட்சி சாலைகளில் கூட சிட்டுக்குருவிகள் இருக்காது என்றே நினைக்கிறேன். சிட்டுககுருவிகளின் தினத்தை கொண்டாடுகிறோம். ஆனால் சிட்டுக்குருவிகளின் நினைவுதினத்தை எந்த நாள் என எப்படிக் குறிக்கப் போகிறோம என்றே தெரியவில்லை..
மலேஷியா வாசுதேவனின் குரலில் "உன் ஜோடியெங்க அதை கூட்டிக்கிட்டு, எங்க விட்டத்திலே வந்து கூடுகட்டு.. இது பொல்லாத வீடு.. கட்டு பொன்னான கூடு.." என்ற பாடலை சிட்டுக் குருவிகளுக்காகவும், ம. வாசுதேவனுக்காகவும் நினைவு கூருகிறேன்..
மெல்ல தொலைந்து கொண்டே இருக்கின்றன குருவிகள்..
வயலினின் நாண் ஒன்றில்
வயலினின் வில் ஒன்று
இழுக்கும் ஙீ
என்ன ஸ்வரம் என்றால் எனக்கென்ன.
முகமறியாப் பாடகி
தொண்டையில் துவங்கி
உச்சி மண்டையில் முடிக்கும்
அறியா மொழிப் பாடல்
வெறும் ஒலிக்குறிப்புகளே
எல்லாப் பாடல்களிலும்
இழந்தவொன்றைத்தான்
நாமெல்லோரும் தேடுகிறோம்
ஓர் ஒலி என் காதுக்குள் நுழைந்து
கேள்வி கேட்கிறது
ஓர் ஒலி
சிரிப்பவர்களனைவரையும்
சற்று நேரம்
அமைதியாயிருக்க வைக்கிறது
ஒழுங்காக அமைந்த
அந்தவொலி
தேம்பாமலிருக்க முயற்சி செய்யும்
என்னை
கண்ணீர் சிந்த வைக்கிறது
எனக்கு இசை தெரியாது
இசைக்கு அழ வைக்கத் தெரியும்
'ஆயிரம் முடியில
ஆன்னு கத்துற முடி
எந்த முடின்னு எனக்குத் தெரியும்'
என்றே சொல்லுவேன் நான்..
ஆயிரம் சொற்களில்
ஆ என்று அலறச் செய்யும்
சொல் எதுவென்று
உனக்கு மட்டும்தான் தெரியும்..
என்னைப் பார்த்து
நீங்கள் செய்யும் புன்னகை
என்னை
எவ்வளவு நடுக்குறச் செய்கிறது
என
தெரியுமா உங்களுக்கு
ஒரு வேளை
என் தோள் மீது
நீங்கள் கை போட்டால்
நான்
குமைந்து கருகிவிடுவேனாயிருக்கும்.
கேட்டபோது உங்களது
அழைப்பெண் தராதது
எனக்கு
அவ்வளவு நிம்மதியாயிருந்தது.
இறங்குகையில்
உங்களது
கடைசிப் படிக்குப்
பின்னால் இருக்கும்
புற்களில் வசிப்பவனாக இருந்தால்
மகிழ்வே.
யாருக்கும் தெரியாமல்
ஏதோவொரு சாலையில்
எனது மலர்ச்சரத்தை
வைத்துவிட்டு ஓடி வந்துவிட்டேன்
உயர்சாதி கார்களில் வரும் நீங்கள்
எதையும் கவனிக்காமல்
சரத்தின் மீது
வண்டியோட்டிப் போனீர்களென்றால்
நன்றி நன்றி நன்றியென்றே
நாளும் பகர்ந்தபடி இருப்பேன் நான்.
தயவு செய்து
மேல் நோக்கி நடங்கள்..
ஏய் நில்லு. எங்க போற..?
அங்க..
யாரப் பாக்கப் போற?
பேயம்மா.
நான் யாரு?
பேயப்பா.
உன் பேரு என்ன?
பாப்பா.
உங்கப்பன் பேரு என்ன?
அப்பா.
உங்கம்மா பேரு?
அம்மா.
உங்கப்பனையும் அம்மாவையுமே
கொஞ்சிக்கிட்டு
இருக்க வேண்டியதுதானே..
இங்க எதுக்கு வந்த..?
............
இது என்ன?
....
சிரிக்காத. இது என்ன?
சாக்கேட்டு..
யாருக்கு?
பாபபாக்கு..
பாப்பாக்கு மட்டுமில்ல.
பாப்பாவோட அக்காவுக்கும்.
..
சிரிச்ச. கொன்னுருவேன்.
என்னடி இது? 
பிடுங்கிக்கிட்டுப் போறா..?
சாக்லேட்டை காட்டுனா 
விட்டுட்டா போவா?
இந்த மிரட்டு மிரட்டுறேன்.
பயமே இல்லையாடி அவளுக்கு?
பயந்துட்டாலும்...
ஏண்டி. எல்லா சாக்லேட்டையும்
ஒருத்தியா தின்னா
புழுக்கடிக்கும்டி.
இதை சாக்லேட்டை காட்டுறதுக்கு
முன்னாடி கேட்டிருக்கணும்.
அவங்க அக்காவுக்கு இல்லையேடி.
போங்க. போயி வாங்கிட்டு வாங்க.
இல்லன்னா
அந்த பஞ்சாயத்தையும் 
நீங்கதான் தீர்க்கணும்.
அடிப்பாவிங்களா..
அந்த சட்டைய எடுடி..
சொட்டும் துளிகள் எல்லாம்
ஒரு வாழ்வை
க்ளக்கென்று சொல்லிப் போகின்றன.
மறுக்கப்பட்ட தண்ணீர்த்துளி
உதிர்ந்த உதிரம்
உதிரத்தின் வழி உயிர்
கண்ணீர்
பசித்த உமிழ்நீர்
கூலிமறுக்கப்பட்ட வியர்வை
கானல் மழைத்துளி
மற்றும்
கருகும் பயிருக்கு
விவசாயியின் கனவில்
பெய்த மழை
எவ்வென்றாயெல்லாமோ
மொழியை உள்ளே வைத்திருக்கிறது
க்ளக்கென்றவொரு ஒலி..
மழைநீரை சுமந்துகொண்டோடுகிறது
சாலையோரக் கால்வாய்
கூடவே சில புன்னகைகளை
வெகுகாலம் முன்பு
நனைந்தூறிய சில காத்திருப்புகளை
ஒரு
மரத்தடி தொடுகைகளை
சில கையசைப்புகளை
இப்போது கூசவைக்கும்
சில வசவுகளை..
நீ பெண்
நான் ஆண்
பாவம்
மழைக்கு என்ன தெரியும்..
வேலைக்கு தாமதமாக வரும்
கிழவியை
அவரவர் சொற்களில் ஏசுகிறோம்.
கழுவி வைத்த பாத்திரங்களின்
சுத்தம் பற்றி
எப்போதும் பாராட்ட மறுக்கிறோம்
மீதமான உணவை
பெருமிதத்தோடு அளிக்கிறோம்
மூன்று மகன்கள்
ஏழு மகள்கள்
இறந்த பிறகும்
பிடிவாதமாக
பேரன்களுக்காக உயிர்வாழும்
அவளது உறுநம்பிக்கை பற்றி
நமக்கென்ன கவலை
பல் விளக்காத நம் காலையில்
பால் வாங்கவென தெருவிறங்கும் போதில்
தன் பால்யத்தை
வெள்ளைக் கோடுகளில்
நிரப்பிப் போயிருக்கும் அவளின்
கோலங்களை
நாம்
ஒரேயொரு கணம் வியந்து
நின்றாலும்
அந்த கோடுகள் நமக்கு
தினசரி கோலங்கள்தான் அய்யா..
எனக்கென்ன கவலை என்றே
அடுத்தடுத்த வீடுகளின்
வாயில்கள் தோறும்
தன் பால்யத்தை
நிரப்பிப் போகிறாள் கிழவி..
ஆம்
அன்பு தீர்ந்துதான் போகும் போல
ஒரு தீப்பெட்டியைப் போலவோ
ஒரு சிகரெட் பெட்டியைப் போலவோ
அல்லது
ஓர் ஊதுபத்திப் பாக்கெட்டைப் போலவோ..
உன் துயர் நிலைகளில்
உன்னை அள்ளியெடுத்து
முத்தமிட்டிருக்கக் கூடும்
நீ கைது செய்யப்பட்ட தருணத்தில்
போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் இருந்து
அழுதிருக்கக் கூடும் -
குறைந்தபட்சம் உனக்கு
மூன்று வேளை உணவை
வாங்கித் தந்திருக்கக்கூடும்
நீ பருக நினைத்த விஷத்தை
தட்டிப் பிடுங்கி
உன்னை
மரணத்திலிருந்து
காப்பாற்றியிருக்கவும் கூடும்..
அதற்குப் பிறகு என்ன..
துயரிலிருந்து வெளிப்பட்ட பிறகு
போலீஸ் ஸ்டேஷனில் இருநது
வெளியேறிய பிறகு
மரணத்திலிருந்து தப்பித்த பிறகு
பிறகென்ன நிகழும்
அன்பென்பது
பல நேரம்
பணத்தால் அளக்கப்படுவதும்தான்..
வாழ்வாதாரம் பறிபோனால் என்ன
தினந்தோறும் நாங்கள் பயன்படுத்தும்
குண்டும் குழியுமான
எங்கள் சாலையைப் புதுப்பித்தவனே
மீட்பன்..
எங்களனைவருக்கும்
விஷத்தைப் புகட்டி
இறுதிநாளைக் குறித்திருந்தால் என்ன
மரணம் வரைக்கும்
ஒவ்வொரு நாளும்
கொண்டாடும் வண்ணம்
மதுவைக் கையளித்தவனே
எங்கள் காவலன்
பக்தன் கோவிலுக்கு வரும்முன்
வழிப்பறிக்காரர்களை நியமித்து
பிரார்த்தனைகளைத்
திருடிக் கொள்பவனே
நம்மைப் பொறுத்தவரை
இறைவன்..
எல்லோரும் இன்புற்றிருங்கள்
கொண்டாடுங்கள்..
அணைப்பெல்லைக்குள் வராததுவும்
நம் சொற்களை மதிக்காததுவும்
வாழ்வியக்கத்தின் ஒழுங்குகளுக்குள்
ஆட்பதாததுவும்
நம் உறக்கங்களைக் காவு கேட்பதுவும்
நீங்கள் உறங்கப் போகையில்
உடல்நலமில்லாமல் போவதுவும்
அய்யோ போதுமென நீங்கள்
கையெடுத்துக் கும்புடுகையில்
கூப்பிய கரங்களை
பொக்கைவாயால் கடிக்க விளைவதுவும்
நாம் அழவிளையும்போது சிரிப்பதுவும்
சிரிக்க விளையும்போது பதற்றம் கொள்ள
வைப்பதுவும்
எப்போதும் நம்மை 
நெஞ்சை நிமிர்த்தி
உச்சங்கொள்ள வைப்பதுவுமான
ஒன்றுக்குப் பெயர்தான்
பெற்ற பிள்ளை..
பெருஞ்சுமையுடையோன் போல
தள்ளாடி வருபவன்
சுமந்து வருவது
ஒரேயொரு ஈர எச்சில் முத்தம்..
இருக்கிற வேலையை எல்லாம்
எறிந்துவிட்டு
அவனிடம் கிழவி பெறுவதென்னமோ
ஒரேயொரு ஈர முத்தம்
நீ யாரை முத்தமிட்டாயென
அவனிடம் கேட்டால்
அப்பத்தா என்றே
தெளிவாய் சொல்லுவான்
ஒரேயொரு முத்தத்துக்காக
அவமானங்களைப்
புறந்தள்ளிய கிழவியிடம்
கேட்டால்
அவனுக்கு
அவங்க தாத்தா பேரு
என்றே சொல்வாள்..
முத்தங்கள் தின்று வாழ்பவள்
எறியப்பட்ட கத்தியை
தயவு செய்து எடுத்துப் போ..
உன் தாகம் தணியுமளவுக்கு
அது
ரத்தம் கொண்டு வராது.
அந்த
அநாதை தெருப்பாடகனிடமிருந்து
தந்திரமாக ஒருபாடலை
திருடிவிட்டான் அவன்.
ஆசுவாசத் தனிமையில்
அப்பாடலின் வாலில்
நூலினைக்கட்டி
பறக்கவிட்டுப் பார்க்கிறான்.
அது சோர்வுற்று தரையமரும்போது
நிதானமாக
முதலில் கால்கள்
பின்னர் இறகுகள் என்று
ஒவ்வொன்றாக
ரசனையுடன் பிய்த்தெடுக்கிறான்
அவன்.
ஏனென்ற கேள்வியுடன்
பெரியகண்கள் கலங்கியிருக்க
அவனையே பார்த்தபடி இருக்கும்
பாடலின் இதயத்தில்
கடைசி குண்டூசியையும்
புன்னகையுடன் செலுத்துகிறான்.
வெடித்த இதயத்தினின்று
தூவிகளைப் போல
காற்றெங்கும் பரவி
விரைந்து விலகிச் செல்கின்றன
சின்னஞ்சிறு ஸ்வரங்கள்.
திகைத்து செயலற்று
பறந்து போகும் அவற்றைப்
பார்த்தபடி இருக்கும்
அவனுக்குத் தெரிந்துவிட்டது
இன்றிரவும் ஒருபாடல்
கங்கினைப் போல் அவனைப் பொசுக்க
நனைந்தே கருகப்போகிறது
ஒரு தலையணை..
அற்புதம் செய்பவர்களிடம்
எனக்கு
இரண்டேயிரண்டு
கேள்விகள்தாம் உள்ளன
(1)
நீங்கள் வலக்கை உயர்த்தி
அற்புதங்கள் செய்தபோது
உங்கள்
இடக்கைகள்
என்ன செய்து கொண்டிருந்தன?
(2)
ஒரு கை இல்லாதவர்களோ
இருகையும் இல்லாதவர்களோ
அற்புதங்கள் செய்ய
ஆசீர்வதிக்கப்பட மாட்டார்களா?
தேர்ந்த
கனவுக்குயவனின்
அறையிலிருந்து திருடிய
மண்
உயிரற்றே கிடந்தது..
ஒரு வேளை
அவனது
கைகளைத் திருடியிருக்க வேண்டுமோ..
இரு சக்கர வாகனத்தின்
பொருள் வைப்பிடத்தில்
எப்போதும் இருக்கும்
பிஸ்கெட்டுகள் காணாது போய்விட்டன..
பிரியமுடன் அழைப்புமணியடிக்கும்
அலைபேசியை
யோசித்தே எடுக்கிறான் அவன்..
வேப்பமரத்தடியில்
நாற்றம் மறந்து
உரையாடிய உரையாடல்கள்
கனவுகளுக்குள்
சென்று பதுங்கிக் கொண்டன..
அட ஆமாம்..
மறுபடியும்
கோடைக்காலம் வந்துவிட்டது..
சிறு வயதில்
பொம்மைகளை அள்ளி வந்தது போலவே
அள்ளி வருகிறாள் பிரச்சினைகளை
மகள்.
நெருங்குமுன் அப்பனின்
வாடல் முகம்
ஏதோ உணர்த்த
பொம்மைகளை எறிவது போலவே
பிரச்சினைகளை எறிந்துவிட்டு
ஓடி வந்து
தலைவருடுகிறாள்..
என்ன இருந்தாலும்
அவள் செல்லமகள்..
என்ன இருந்தாலும்
அவன்
செல்ல அப்பன்..
உணவுண்ணும் போதும்
ஒரு பொருளை எடுத்து வழங்கும்போதும்
எந்த விரல்களுடனும்
ஒட்டாமல் நிற்கிறது அந்த விரல்..
வழங்கும்போது
தான் உயர்வென்று
அறிவிக்காமல் அறிவிப்பதே
அதன் தனிமைதான்..
எஸ்தரக்காவை
இரு வீட்டாரும் புறக்கணிக்கையில்
அந்த சுட்டு விரல் போலதான் இருந்தாள்..
அது திரும்புவதுமில்லை
விரும்புவதுமில்லை..
திருட்டில் உடன்பாடில்லாத
உடன் திருடன் போல
கண்ணை மூடியபடி
தனித்தே இருக்கிறது..
மொத்தக் கையினின்றும்
தனியொரு விரலை தனித்தெடுத்து
வழிபடவோ, முத்தமிடவோ
முடியாதென்பதாலேயே
என் பிரார்த்தனைகளை
அவ்வப்போது கொன்றபடி இருக்கிறேன்..
சுட்டும் போதோ
மிரட்டும்போதோ
மூக்கு நோண்டும்போதோ
தன் பணியைச் செவ்வனே செய்யும் அது
உழைக்கையில் ஒரு காலும்
உடன் வந்ததில்லை..
வாணாள் முழுக்க
பிரியங்களைத் தேடுமொருவன்
அன்பர்களிடத்தெல்லாம்
சுட்டுவிரலைத் தேடித்தேடி
தோல்வியில் களைத்து
இரவோடு கரைந்துதான் போகிறான்..
ஒன்றா அவனுக்கான விரலை
கண்டுபிடித்துக கொடுங்கள்
அல்லது
சுட்டு விரலிடம்
மற்ற விரல்களோடு
அன்பு பாராட்டச் சொல்லுங்கள்..
விரல்களின் தனிமையில்
திகைத்து நிற்கிறான் அவன்..
சுமக்க முடியாமல் சுமந்துதான்
அந்த சொல்லை
வீட்டுக்கு கொணர்ந்தேன்..
தரையில் கிடந்தால்
அப்படியே கிடக்கும்..
முதுகில் சுமந்தால்
நடு முதுகில் நெளிந்து அருவெறுப்பூட்டும்
அத்தனை சிரமங்களைக் கடந்துதான்
இது என் வீடு சேர்ந்திருக்கிறது.
நான் விரும்பியதல்ல இது..
என்னைப் பற்றி
மற்றவர்கள் நினைக்க விரும்பியதுமல்ல..
நான் மறுக்க நினைத்ததையும்
மறக்க நினைத்ததையும்
ஒன்றாக்கி குற்றச்சாட்டாக சுமந்திருக்கிறது
இந்த ஒற்றைச் சொல்..
விட்டு வந்திருந்தாலும்
என்னை ஏலத்தில் விட்டிருக்கும்
வீட்டில் வைக்கும்போதில்
அமையாது துர்நாற்றத்தை
பரப்புகிறது அது..
சொற்களைச் சுமக்கச் சபிக்கப்பட்டவர்கள்
தம் சுமையை அறிவார்கள்..
சொற்களை சுமக்கச் சபிப்பவர்கள்
சொற்களாலேயே சாகக் கடவது..
தேயும்
வளராது
வெளியிலெடுக்கையில்
தேன் சொட்டும்.
பிடுங்கினால்
கண்ணீர் ஓடும்.
அது 
நிலாவல்ல
சின்னஞ்சிறு
தேன் வண்ண
லாலி பாப்..
வெண்ணுரை பொங்க
பாறைகளில் மோதி
சுழித்தோடும் சிற்றாற்றில்
மிதந்தலையும் இலை போல
இச்சாலையில் அலைக்கழிகிறது
சின்னஞ்சிறு ஒற்றைச் செருப்பு..
கடைசி தருணத்தில்
அதை நோக்கி நீண்ட
பிஞ்சு விரல்கள்
என் நினைவுக்கு வருகின்றன..
அழாதே என்று
கண்துடைத்து விடுகிறாள்
அக்கா, தங்கைக்கு
இருவரும் கொஞ்ச நேரம்
அருகிருக்கும் வீட்டு சன்னலில்
மலர்ந்திருந்த
இரும்புத் தாமரையைப் பார்க்கிறார்கள்..
போலாமா
என்கிறாள் அக்கா..
மலங்க விழிக்கிறாள்
தங்கை
போலாம் என்று
தங்கையைத் தூக்கிக் கொண்டு
நடக்கிறாள்
அக்கா..
நீங்கள் ஒரு
சன்னலைக் கடக்கிறீர்கள்
- பிண வாசம் வீசுகிறது..
தேடித் தேடிஒரு
ஆறுதல் சொல்லைக்
கண்டடைகிறீர்கள்
அது
மரண தருவாயிலிருக்கிறது..
துயரங்களை
உதிர்த்துவிட
ஓர் ஆற்றினைத் தேடுகிறீர்கள்
அது
உங்களுக்குள்தான் இருக்கிறது..
உணவு தேடி
நீங்கள்
புகும் வனத்தின்
முதல் பரிமாறலே
ஒரு தட்டு நிறைய புன்னகைதான்..
அந்த உயரத்துக்கு
மண்டியிட்டு நீங்கள்
அணைத்தீர்கள் என்றால்
பிதா, சுதன், பரிசுத்த ஆவி
இவையனைத்தையும் விட
நீங்கள்
தூய்மையானவர்தான் சகோதரா..
நாம் நினைத்த வாசமுள்ள
ரோஜாப் பூக்களோ
தாமரைப் பூக்களோ
அல்லது
நம் செவ்வந்திப் பூக்களோ
நம் தலையில் உதிர்வதில்லை..
நமக்கு வாய்த்ததெல்லாம்
எறும்புகள் ஊறும்,
தேனும் கசக்கும்
வேப்பம் பூக்கள்தான்..
யாரேனும்
யாரேனும்
வேப்பம்பூக்களுக்கும்
வாசனையைச் சேர்ப்பீர்களாக..

Friday, 7 February 2014

ஒரு நட்சத்திரம்
ஒரு வெளி
இரண்டுக்குமிடையில்
ஒப்பந்தங்களேதுமில்லை..

ஒரு பூ
ஒரு பூக்காரர்
இருவருக்குமிடையில்
பணம் தவிர
வேறெந்த பந்தமும் இல்லை..

ஓரச் சாலையில்
வெட்டப்பட்ட குழி
அதில் விழப்போகிறவர்
இவர்களுக்கிடையேயும்
எந்த தொடர்பும் இல்லை..

ஒரு முத்தம்
பதில் முத்தம்
இரண்டுக்குமிடையில் 
கட்டாயம் தொடர்பிருக்கிறது -
இரண்டும் வெவ்வேறல்ல..

ஓர் அழுகை
பெரும்பசிப் பொழுதில்
இடப்பட்ட சோறு
இரண்டுக்குமிடையில்
கட்டாயம் தொடர்பிருக்கிறது
இரண்டும் வெவ்வேறென்றாலும்..

நிபந்தனைகளின்றி
பகுதி பகுதியாகவோ
முழுமையாகவோ
என்னை உனக்குத் தருகிறேன்..

சோர்ந்த கைகளுடன்
நீந்திக் கரையேற முயன்ற
கைவிடப்பட்ட பொழுதுகளை
உனக்கு உண்ண அளிக்கிறேன்..

தா, தராதே என்று
நான் ஏதும் சொல்லவில்லை..

ஒன்றே ஒன்று மட்டும் செய்..

எப் போதெல்லாம்
ஒரு கண்ணீர்த்துளியை
சந்திக்கிறாயோ
அப்போதெல்லாம்
முடிந்தால்
ஒரு 
கண்ணீர்த்துளியை மட்டும்
பதிலுக்குத்
தா..