Sunday, 23 March 2014

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினமாக அறிவிக்கப்பட்டபடி இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை எல்லா நாட்களும் கொண்டாடப்பட வேண்டியவையே.. வாழ்வையே கொண்டாட்டமாக வாழத்தானே இத்தனை சம்பாத்தியங்களைத் தேடி ஓடுகின்றோம்.. ஆக பெயரிட்டோ பெயரிடாமலோ எந்த நாளென்றாலும் அதை நான் கொண்டாட ரெடியோ ரெடி..
இன்று சிட்டுக்குருவிகளின் தினம் என்கிறார்கள். பறவைகளின் பிரியரான குஷ்வந்த் சிங்கும் இன்றே இறந்து பட்டிருக்கிறார். இயற்கையின் பல்வேறு விநோதங்களில் இதுவும் ஒன்று. (குயில்களின் வாழ்வு குறித்து அவர் தன்னுடைய ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். அற்புதமான கட்டுரை அது. எந்த பத்திரிக்கை, என்ன தலைப்பு என்பதெல்லாம் தெரியாது. தேடி படித்துக் கொள்ளுங்கள்.)
சரி. நம்ம சிட்டுக்குருக்கு வருவோம். சிட்டுக்குருவிக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் அறிமுகம் பற்றிஎனக்கு நினைவில் இல்லை. நான் பிறந்ததிலிருந்து நான் பாட்டுக்கு நானும் அது பாட்டுக்கு அதுவுமாக தனித் தனியாக வாழ்ந்துதான் வந்தோம். முதன் முதலில் அது தன்னைக் கவனிக்க வைத்தது எப்படியென்றால் சிறு வயதில் அம்மா சில்வர் பாத்திரங்களை (எங்க ஊர்ப்பக்கம் எவர்சில்வர் பாத்திரத்தை சில்வர் பாத்திரம் என்றே அழைக்கிறோம்) நன்கு கழுவி உலரட்டும் என்று வெயிலில் கவிழ்த்தி இருப்பாள். இந்த சிட்டுக்குருவி என்ன செய்யும் என்றால் அது பாட்டுக்கு திரும்பத் திரும்ப வந்து பாத்திரத்தில் விகாரமாகத் தெரியும் தன் பிம்பத்தை விடாமல் கொத்திக் கொண்டே இருக்கும். எங்களுக்கு அதன் மூக்கு உடைந்துவிடாதோ என்று ஆச்சரியமாக இருக்கும. குருவியின் மேல் பாவப்பட்டு அம்மா பாத்திரத்தை எடுத்து உள்ளே வைக்கும் வரை அந்த பிரச்சினை தொடர்ந்தபடி இருக்கும்.
என் சின்னத் தம்பிக்கு குழந்தையிலிருந்தே மூச்சிழைப்புப் பிரச்சினை உண்டு. ஆஸ்த்துமா என்றில்லை. பிரைமரி காம்ப்ளெக்ஸ் என்றோ வேறெதுவோ டாக்டர்கள் சொன்னதாக நினைவு. அதுதான் எல்லா வியாதிக்கும் ஊரில் கைவைத்தியம் இருக்குமில்லையா.. (சில நேரம் கேன்சருக்கு கூட கைவைத்தியம் சொல்லி அதிர வைப்பார்கள் அந்த நேரத்து கிழவிகள்) அப்படி என் அம்மாவுக்கு ரெக்கமெண்ட் செய்ப்பட்டதுதான் சூட்டாங்குருவி. ஒன்றுமில்லை. சிட்டுக்குருவியைப் பிடித்து உரித்து உப்புத்தடவி நெருப்பிலே வேகவைத்து தின்பதுதான் சூட்டாங்குருவி. பார்ப்பன வீடு என்பதாலும், குழந்தை என்பதாலும் என் தம்பிக்கு அந்த கைவைத்தியம் மறுக்கப்பட்டது என்பது வேறு விஷயம். பின்னர் பலமுறை தீயில் வாட்டப்படும் சிட்டுக்குருவிகளையும் பார்த்து ரசித்திருக்கிறேன். பின்னர் கறி வகையறா தின்னப் பழகியபின் சூட்டாங்குருவிகளை பார்க்கும் அனுபவமோ உண்ணும் அனுபவமோ கிடைக்கவில்லை. ஒரு வேளை அப்படி வாய்த்திருந்தாலும் உண்டிருப்பேனா என்பது சந்தேகம்தான்.
பின்னர் வாசிப்பு அனுபவங்கள் பெருகப் பெருக விட்டுவிடுதலையாவதை அவன் சிட்டுக் குருவியோடு associate செய்து விட்டுப் போனதால் சிட்டுக்குருவி மீது தனி கவனம் வந்தது. அவ்வப்போது கிணற்று மேட்டில் கொஞ்சம் குருணை வைப்பது. வறுத்த கடலை உண்ணும்போது, அதிலிருக்கும் முக்குகளை எல்லாம் பொறுமையாக சேர்த்து வைத்து அவற்றையும் கிணற்றுக் கல்லில் வைப்பது என சிட்டுக்குருவிகளின் செஞ்சோற்றுக் கடனை கண்டபடி ஏற்றிவிட்டேன்.
இவை தவிர எங்கள் வீட்டு கிணறு குருவிகளுக்கான பெருக்க குகையாகவும் ஜல சமாதியாகவும் ஒரே நேரத்தில் விளங்கியது. இனப்பெருக்க காலத்தில் சிட்டுக் குருவிகள் எல்லாம் எங்கள் கிணற்றில் கால்வைத்து ஏறுவதற்காக வைத்திருக்கும் பிடி பொந்துகளில் பஞ்சு நார் எல்லாவற்றையும் வைத்து கூடு கட்டி முட்டைகள் இட்டுவிடும். நாங்கள் பாட்டுக்கு கிணற்றில் நீர் இறைத்து அன்றாட வாழ்வைக் கழித்தபடி இருக்க குருவிகள் பாட்டுக்கு தம் குஞ்சுகளுக்கு இரை ஊட்டி வளர்த்தபடி இருக்கும். குஞ்சுகள் பெரிதாகி பறக்கத் துவங்கும்போதுதான் சிக்கல் உண்டாகும். நிறைய குருவிகள் கிணற்றில் விழுந்து இறந்து மிதக்கும். அபூர்வமாக சில நேரம் கொல்லைப் பக்கம் வரும்போது குருவிகள் பதற்றத்துடன் கீச் கீச்சென்று கத்தி இங்குமங்கும் அலைக்கழிவதைப் பார்த்து உள்ளே எட்டிப் பார்த்தால் குஞ்சொன்று நனைந்த இறகுகளைப் படபடத்து நீருக்குள் தவிப்பதைப் பார்ப்போம். நீரிறைக்கும் வாளியை கிணற்றுக்குள் விட்டு குருவிகளின் சடலமானாலும், குருவியே ஆனாலும் மீட்பதில் நான் கில்லாடி. இறந்த குருவியென்றால் மெத்தென்றிருக்கும் அதன் நனைந்த இறகுகளை ஒரு முறை வருடிவிட்டு கொல்லையிலேயே புதைப்பதோ அல்லது தூக்கி எறிந்து விடுவதோ உண்டு. உயிரோடு மீண்டது என்றால் நடுக்குற்று மெல்லிய கால்களில் நிற்க முடியாமல் தள்ளாடும் அதை எடுத்து எடுத்து வெயில் படும் இடத்தில் வைத்து உலர வைத்து விட்டுவிடுவேன். எப்போதென்று தெரியாத ஒரு பொ ழுதில் அது பறந்து போயிருக்கும்..
ஊர்விட்டு சென்னை வந்த பொழுதுகளில் எப்போதும் அதிகாலை கேட்கும் பறவைகளின் சத்தத்தல் குருவிகளின் சத்தம் மட்டும் இல்லாமல் என்னவோ போல இருக்கும். (இப்போதோ காலைகளில் பறவைச் சத்தங்களே இல்லை. மிஞ்சி இருக்கும் காகங்கள் வேண்டுமென்றால் பேருக்கு கொஞ்ச நேரம் கத்திவிட்டு ஓய்ந்து விடுகின்றன. அவற்றுக்கும் நாகரிகம் என்று எதாவது நோய் வந்துவிட்டதோ என்னமோ)
சென்னையின் பிரம்மச்சரிய நாட்களில் பெரும்பான்மை வாழ்ந்தது கங்கப்பா தெருவின் மொட்டை மாடி அறையில்தான். சத்திரம் மாதிரி இருக்கும். என் அறையில் என்ன விசேஷம் என்றால் அறைக்கு நேராக ஒரு நெட்டிலிங்க மரம் அடர்ந்து வளர்ந்திருக்கும். அதில் வந்து உட்காருவதற்காக என்று இல்லாமல் சில மைனாக்களும், கிளிகளும், தவறாமல் காகங்களும் வந்து செல்லும். எட்டிப் பார்த்தால் பிரசாத் ஸ்டூடியோவின் குப்பைகளுக்கு நடுவே உயிர் ஓடை போல ஒரு தாயக்கீரிப்பிள்ளையும், இரண்டு குட்டிகளும் வால் நுனியைத் தொடுத்துத் தொடுத்து நீரின் நகர்ச்சி போல ஓடும்..
சிட்டுக்குருவிகளை இழந்ததன் மூலம் சூழல் வட்டத்தல் முக்கியமான கண்ணியை நாம் இழந்துவிட்டோம்தான். நாளைப் பின்ன பழந்தமிழ்ப் பாடல்களில் சிட்டுக்குருவி என்ற பதத்தைப் பார்த்துவிட்டு நம் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சிட்டுக்குருவி என்றால் என்ன என்று கேட்டால் காட்டுவதற்கு மிருகக்காட்சி சாலைகளில் கூட சிட்டுக்குருவிகள் இருக்காது என்றே நினைக்கிறேன். சிட்டுககுருவிகளின் தினத்தை கொண்டாடுகிறோம். ஆனால் சிட்டுக்குருவிகளின் நினைவுதினத்தை எந்த நாள் என எப்படிக் குறிக்கப் போகிறோம என்றே தெரியவில்லை..
மலேஷியா வாசுதேவனின் குரலில் "உன் ஜோடியெங்க அதை கூட்டிக்கிட்டு, எங்க விட்டத்திலே வந்து கூடுகட்டு.. இது பொல்லாத வீடு.. கட்டு பொன்னான கூடு.." என்ற பாடலை சிட்டுக் குருவிகளுக்காகவும், ம. வாசுதேவனுக்காகவும் நினைவு கூருகிறேன்..
மெல்ல தொலைந்து கொண்டே இருக்கின்றன குருவிகள்..

No comments:

Post a Comment