Friday, 7 February 2014

ஒரு நட்சத்திரம்
ஒரு வெளி
இரண்டுக்குமிடையில்
ஒப்பந்தங்களேதுமில்லை..

ஒரு பூ
ஒரு பூக்காரர்
இருவருக்குமிடையில்
பணம் தவிர
வேறெந்த பந்தமும் இல்லை..

ஓரச் சாலையில்
வெட்டப்பட்ட குழி
அதில் விழப்போகிறவர்
இவர்களுக்கிடையேயும்
எந்த தொடர்பும் இல்லை..

ஒரு முத்தம்
பதில் முத்தம்
இரண்டுக்குமிடையில் 
கட்டாயம் தொடர்பிருக்கிறது -
இரண்டும் வெவ்வேறல்ல..

ஓர் அழுகை
பெரும்பசிப் பொழுதில்
இடப்பட்ட சோறு
இரண்டுக்குமிடையில்
கட்டாயம் தொடர்பிருக்கிறது
இரண்டும் வெவ்வேறென்றாலும்..

நிபந்தனைகளின்றி
பகுதி பகுதியாகவோ
முழுமையாகவோ
என்னை உனக்குத் தருகிறேன்..

சோர்ந்த கைகளுடன்
நீந்திக் கரையேற முயன்ற
கைவிடப்பட்ட பொழுதுகளை
உனக்கு உண்ண அளிக்கிறேன்..

தா, தராதே என்று
நான் ஏதும் சொல்லவில்லை..

ஒன்றே ஒன்று மட்டும் செய்..

எப் போதெல்லாம்
ஒரு கண்ணீர்த்துளியை
சந்திக்கிறாயோ
அப்போதெல்லாம்
முடிந்தால்
ஒரு 
கண்ணீர்த்துளியை மட்டும்
பதிலுக்குத்
தா..

2 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கண்ணீர் துளியைக்காணும் போது சில நம்பிக்கைகளைக்கூட தரலாம் நண்பா!

    ReplyDelete