Thursday, 6 February 2014

வாரி அணைத்துக் கொள்கிறாள்
பேச்சின்றி.

தேம்பி வரும் மகனை..

பிணியுற்றால் சாபமிடுகிறாள்
தெய்வங்களை..

கேட்டுப் பெற்றாலும்
தானாக வந்தாலும்
இருகரம் ஏந்தி
பெற்றுக் கொள்கிறாள்
முத்தங்களை..

யௌவனத்தின் கோட்டைத்
தாண்டிப் போனவனை
மனமின்றிதான் கையசைத்து
வழியனுப்புகிறாள்..

ஆயினும்
நினைவுப் படுதாவில்
ஆடும் 
சிறுவனை, குழந்தையை
சதா நேரமும் 
கொஞ்சியபடிதான் இருக்கிறாள்..

இதோ இன்று
காதல் மனைவியுடன்
காலில் விழும் அவனை
அள்ளியெடுத்து 
முத்தமிடக் கூசி
திருநீறிட்ட விரலால்
உதடுகளை பதில் செய்கிறாள்..

என்றென்றும்
பேரனையோ, பேத்தியையோ
பிள்ளையெனவே முத்திடுவாள்
அந்த தாய்..

தடுத்து வைத்திருக்கும்
திரையின் மறைவில்
அதற்கும் அதற்கும் அப்பால்
பெருக்கெடுத்தோடும் 
பிரியமென்னும் நதியை
கண்டவர் பாக்கியவான்
காணாதவர்
என்போல
கவிதையெழுதி
சாகக் கடவதாக..

No comments:

Post a Comment