Sunday, 23 March 2014

உணவுண்ணும் போதும்
ஒரு பொருளை எடுத்து வழங்கும்போதும்
எந்த விரல்களுடனும்
ஒட்டாமல் நிற்கிறது அந்த விரல்..
வழங்கும்போது
தான் உயர்வென்று
அறிவிக்காமல் அறிவிப்பதே
அதன் தனிமைதான்..
எஸ்தரக்காவை
இரு வீட்டாரும் புறக்கணிக்கையில்
அந்த சுட்டு விரல் போலதான் இருந்தாள்..
அது திரும்புவதுமில்லை
விரும்புவதுமில்லை..
திருட்டில் உடன்பாடில்லாத
உடன் திருடன் போல
கண்ணை மூடியபடி
தனித்தே இருக்கிறது..
மொத்தக் கையினின்றும்
தனியொரு விரலை தனித்தெடுத்து
வழிபடவோ, முத்தமிடவோ
முடியாதென்பதாலேயே
என் பிரார்த்தனைகளை
அவ்வப்போது கொன்றபடி இருக்கிறேன்..
சுட்டும் போதோ
மிரட்டும்போதோ
மூக்கு நோண்டும்போதோ
தன் பணியைச் செவ்வனே செய்யும் அது
உழைக்கையில் ஒரு காலும்
உடன் வந்ததில்லை..
வாணாள் முழுக்க
பிரியங்களைத் தேடுமொருவன்
அன்பர்களிடத்தெல்லாம்
சுட்டுவிரலைத் தேடித்தேடி
தோல்வியில் களைத்து
இரவோடு கரைந்துதான் போகிறான்..
ஒன்றா அவனுக்கான விரலை
கண்டுபிடித்துக கொடுங்கள்
அல்லது
சுட்டு விரலிடம்
மற்ற விரல்களோடு
அன்பு பாராட்டச் சொல்லுங்கள்..
விரல்களின் தனிமையில்
திகைத்து நிற்கிறான் அவன்..
சுமக்க முடியாமல் சுமந்துதான்
அந்த சொல்லை
வீட்டுக்கு கொணர்ந்தேன்..
தரையில் கிடந்தால்
அப்படியே கிடக்கும்..
முதுகில் சுமந்தால்
நடு முதுகில் நெளிந்து அருவெறுப்பூட்டும்
அத்தனை சிரமங்களைக் கடந்துதான்
இது என் வீடு சேர்ந்திருக்கிறது.
நான் விரும்பியதல்ல இது..
என்னைப் பற்றி
மற்றவர்கள் நினைக்க விரும்பியதுமல்ல..
நான் மறுக்க நினைத்ததையும்
மறக்க நினைத்ததையும்
ஒன்றாக்கி குற்றச்சாட்டாக சுமந்திருக்கிறது
இந்த ஒற்றைச் சொல்..
விட்டு வந்திருந்தாலும்
என்னை ஏலத்தில் விட்டிருக்கும்
வீட்டில் வைக்கும்போதில்
அமையாது துர்நாற்றத்தை
பரப்புகிறது அது..
சொற்களைச் சுமக்கச் சபிக்கப்பட்டவர்கள்
தம் சுமையை அறிவார்கள்..
சொற்களை சுமக்கச் சபிப்பவர்கள்
சொற்களாலேயே சாகக் கடவது..
தேயும்
வளராது
வெளியிலெடுக்கையில்
தேன் சொட்டும்.
பிடுங்கினால்
கண்ணீர் ஓடும்.
அது 
நிலாவல்ல
சின்னஞ்சிறு
தேன் வண்ண
லாலி பாப்..
வெண்ணுரை பொங்க
பாறைகளில் மோதி
சுழித்தோடும் சிற்றாற்றில்
மிதந்தலையும் இலை போல
இச்சாலையில் அலைக்கழிகிறது
சின்னஞ்சிறு ஒற்றைச் செருப்பு..
கடைசி தருணத்தில்
அதை நோக்கி நீண்ட
பிஞ்சு விரல்கள்
என் நினைவுக்கு வருகின்றன..
அழாதே என்று
கண்துடைத்து விடுகிறாள்
அக்கா, தங்கைக்கு
இருவரும் கொஞ்ச நேரம்
அருகிருக்கும் வீட்டு சன்னலில்
மலர்ந்திருந்த
இரும்புத் தாமரையைப் பார்க்கிறார்கள்..
போலாமா
என்கிறாள் அக்கா..
மலங்க விழிக்கிறாள்
தங்கை
போலாம் என்று
தங்கையைத் தூக்கிக் கொண்டு
நடக்கிறாள்
அக்கா..
நீங்கள் ஒரு
சன்னலைக் கடக்கிறீர்கள்
- பிண வாசம் வீசுகிறது..
தேடித் தேடிஒரு
ஆறுதல் சொல்லைக்
கண்டடைகிறீர்கள்
அது
மரண தருவாயிலிருக்கிறது..
துயரங்களை
உதிர்த்துவிட
ஓர் ஆற்றினைத் தேடுகிறீர்கள்
அது
உங்களுக்குள்தான் இருக்கிறது..
உணவு தேடி
நீங்கள்
புகும் வனத்தின்
முதல் பரிமாறலே
ஒரு தட்டு நிறைய புன்னகைதான்..
அந்த உயரத்துக்கு
மண்டியிட்டு நீங்கள்
அணைத்தீர்கள் என்றால்
பிதா, சுதன், பரிசுத்த ஆவி
இவையனைத்தையும் விட
நீங்கள்
தூய்மையானவர்தான் சகோதரா..
நாம் நினைத்த வாசமுள்ள
ரோஜாப் பூக்களோ
தாமரைப் பூக்களோ
அல்லது
நம் செவ்வந்திப் பூக்களோ
நம் தலையில் உதிர்வதில்லை..
நமக்கு வாய்த்ததெல்லாம்
எறும்புகள் ஊறும்,
தேனும் கசக்கும்
வேப்பம் பூக்கள்தான்..
யாரேனும்
யாரேனும்
வேப்பம்பூக்களுக்கும்
வாசனையைச் சேர்ப்பீர்களாக..