நேற்று ஒரு பெரும் தொழிலதிபர் வீட்டுத் திருமண வரவேற்புக்கு எங்கள் இயக்குநருடன் போயிருந்தேன். உடன் போயிருந்தேனென்றாலும் எனக்கும் தனியாக அழைப்பு வைத்திருந்தார்கள்தான். எங்கள் இயக்குநரின் நண்பரின் காரில் போனோம். ITC சோழா என்று மிகப்பெரிய ஹோட்டலில் வரவேற்பு. பல முறை கிண்டி வழி சென்றிருந்தாலும் அந்த ஹோட்டலை நான் கவனித்ததே இல்லை. முக்கிய காரணம் அதைக் கடக்கும் பகுதியில் சிக்னலைக் கடந்து செல்லும் டிராஃபிக் பதற்றம் என்றே நினைக்கிறேன். எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய ஹோட்டல்.. எழு நட்சத்திர ஹோட்டல் என்றார்கள். மும்பை தாஜ்ஜைவிட பெரியது என்றார்கள். சந்தன வண்ண மார்பிள் கற்களால் இழைத்து இழைத்து கட்டி இருக்கிறார்கள். அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளில் ஒன்றைக் கட்டும் செலவிலேயே ஒரு சிறு குடும்பம் வாழ போதுமான ஒரு சிறு வீட்டை கட்டிவிடலாம் போல.. அத்தனை பணம்.
நகரும் படிக்கட்டுகள். ஆங்காங்கே நாம் தொலைந்து விடாமல் வழிகாட்ட கோட் சூட் அணிந்த பணியாளர்கள். இதைத்தவிர கூட்டமான கூட்டம். ஹோட்டலுக்குள் நுழைவதற்கு முன் வெளியிலேயே கார்களின் வரிசை துவங்கிவிட்டது. சரியாக உள்ளே நுழைந்து நாங்கள் காரை வாலட்டிடம் கொடுத்துவிட்டு இறங்க நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆனது. வரிசை முழுக்க ஃபேன்சி நம்பர் கொண்ட விலையுயர்ந்த கார்கள்தான். மணமகனின் தந்தை அத்தனை விஐபி. உள்ளே நுழைந்ததுமே எங்களை நாங்கள் பணிபுரிந்த முந்நாள் நிறுவனத்தின் சிஇஓ காத்திருக்க விடாமல் பத்தே நிமிடத்தில் மணமக்களருகில் அழைத்துச் சென்றுவிட்டார். அத்தொழிலதிபரின் பல்வேறு தொழில்களில் சீரியல் தயாரிக்கும் பிரிவின் சிஇஓ அவர். அந்தப் பிரிவின் முன்னாள் தொழிலாளன் நான்.
வரவேற்பு அரங்கம் அத்தனை பெரியது. எங்க ஊர் வெங்கடேஸ்வரா தியேட்டரை ரெண்டு தரம் உள்ளே வைக்கலாம். அத்தனை பெரியது. அந்த அரங்கம் நிறைய மனிதர்கள். அத்தனை பேரும் விஐபிக்கள். ஸ்டாலின், கமல், கனிமொழி, ஜிகே வாசன், அதர்வா என்று நான் அங்கிருந்த வரை வந்து போனார்கள். ஒரு ஓரமாக பெரும்பாலானோரால் கவனிக்கப்படாமல் ஆர்க்கெஸ்ட்ராவில் வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி அமரன், சுசித்ரா, மனோ என்று அவர்கள் பாட்டுக்கு நின்று பாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கமாக பஃபே சாப்பாட்டுக்கடை. வெரைட்டியான வெரைட்டி. எனக்கா பெரிய்ய ஏமாற்றம். அத்தனையும் சைவம். அசைவத்துக்கு இடமே இல்லை. அடப் பாவிகளா. இத்தனை செலவு செய்து கல்யாணம் வைப்பவர்கள் அசைவச் சாப்பாடு போட்டால் குறைந்தா போவார்கள் என்ற கடுப்பில் ஒரே ஒரு நானுக்கு என்னத்தையோ போட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வீடு வந்துதான் தோசை சாப்பிட்டேன். சாப்பிட்டு முடிந்து தொலைந்து போன மற்றவர்களை கண்டு பிடித்து ஒன்று சேர்த்து ஒரு வழியாக கீழே இறங்கினோம்.
வேலட்டிடம் வண்டி எண்ணைக் கொடுத்துவிட்டு நின்றதிலிருந்து வண்டி வெளியேறுவது வரை முப்பது நிமிடம் ஆனது. வீடு வந்து சேர பத்தரை..
அந்த அரங்கத்துக்கான வாடகை ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்றார்கள். யோவ் என்னோட படத்துக்கே பட்ஜெட் ஒரு கோடி ரூவாதான்ய்யா என சொல்லத் தோன்றியது..
வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் முதலில் தோன்றிய எண்ணம் நம்ம வீடு அந்த ஹோட்டல் பாத்ரூமை விட சின்னது என்பதுதான். என்ன செய்ய. வீரதீர சாகசமெல்லாம் செய்து காட்டி பெரும் புகழ் பெற்றாலும் கடைசியில் நாய் நக்கித்தானே குடிச்சாகணும்..