Wednesday, 11 December 2013

ஆம் ஆத்மியின் எதிர்பாராத வெற்றி நமது தமிழ்நாட்டு நண்பர்களிடமும் பெரிய எதிர்பார்ப்பையும் மாற்றத்தைப் பற்றி பெருங்கனவையும் உருவாக்கியிருப்பதை நான் காண்கிறேன்..

நிறைய நண்பர்கள் ஆம் ஆத்மி அரவிந்த் கேஜ்ரிவாலின் தமிழ் வடிவமாக உதயகுமாரண்ணனைப் பார்க்க வேறு துவங்கியிருக்கிறார்கள். அண்ணனை அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்புகள் வரத் துவங்கிவிட்டன.. அழைப்புகளின் தீவிரம் எந்த அளவு இருந்ததென்றால் தன்னால் ஏன் அரசியலுக்கு வர இயலாது என்று உதயகுமாரண்ணன் ஒரு விளக்கத்தை சொல்ல வேண்டிய அளவுக்கு அந்த அழைப்புகள் தீவிரமாக இருந்தன. அவருடைய விளக்கம் வெளிவந்த பின்னும் அதை மறுத்தபடி நண்பர்கள் அண்ணனை மறுபடி மறுபடி அழைத்தபடி உள்ளனர்..

அவர்கள்ஒப்பிடத் துவங்கி விட்டதனாலேயே நான் இங்கே வேற்றுமைகளை பட்டியலிட வேண்டி இருக்கிறது நண்பர்களே..

அரவிந்த் கேஜ்ரிவால் என்பது ஊடகங்கள் கட்டமைத்த அன்னா ஹசாரேயின் பக்க விளைவுதானே அன்றி வேறெதுவும் இல்லை.. தற்போதைய ஊடகங்களின் வாழ்நாள் சந்தாதாரர்களான படித்த இளைஞர்களுக்கு ஊடகங்கள் விற்ற ஊழலற்ற இந்தியா என்ற உட்டோப்பியாவின் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் அன்னா ஹசாரே என்பது நாம் அறியாததல்ல.. என்னமோ லோக் பால் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என்பது போன்ற கார்ப்பரேட் பொய்களை நம்ப இங்கே ஒரு பெருங்கூட்டம் இருப்பதால்தான் இந்த இந்த சர்க்கஸ் சாத்தியமானது.. இங்கே என்ன நிகழ்ந்ததென்றால் மொபைலை விட அதன் ஆக்ஸசரி பெரிய ஹிட் ஆகி விட்டது..

அன்னாவே பொறாமையில் வெந்து போகிற அளவுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் முக்கியத்துவம் பெற்று விட்டார்..

ஆம் ஆத்மியின் வெற்றிக்கு பல காரணங்கள்.. காங்கிரஸ் மீதான மக்களின் வெறுப்பு.. அரவிந்த் செய்த பாசிட்டிவ் பப்ளிசிட்டி ஸ்டண்ட்டுகள்.. மத்தியதர குடும்பங்களின் நம்பிக்கை நாயகன் என்பது போன்ற தோற்றத்தை (ஊடகங்களின் உதவியோடு) நிறுவியது என்று பல காரணங்கள் இருந்தாலும் ஊடகங்களின் உதவி இன்றி இதில் அரை சதவீதம் கூட சாத்தியமாகி யிருக்காது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்..

இப்போது தமிழக நிலைமைக்கு வருவோம்.. இங்கேயும் கூட சசிபெருமாள் என்ற முதியவர் உண்ணாவிரதம் இருந்தார்.. அன்னா ஹசாரேவின் லோக்பால் ஆதரவு உண்ணாவிரதத்தை விட நூறு மடங்கு நியாயமான காரணத்தோடு உண்ணாவிரதம் இருந்தார்.. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மதுவை எதிர்த்து அவர் உண்ணாவிரம் இருந்தார்.. மனசாட்சி உள்ள ஊடகம் என்றால் அதை பெரிது படுத்தி இருக்க வேண்டும்.. ஆனால் என்ன நடந்தது..? எதோ வேலை வெட்டியில்லாத ஒரு பெரிசுவின் உண்ணாவிரதம் போல சித்தரிக்கப்பட்டு முகநூலில் மட்டும் அரைகுறை மனதுடன் விவாதிக்கப்பட்டு அந்த உண்ணாவிரதம் நான்சென்சாகி நசுக்கப் பட்டது..

சரி.. அதை விடுங்கள்.. அது தனி ஒரு மனிதனின் போராட்டம்.. ஈழத் தமிழர் படுகொலைகளின் போது தமிழர்களின் பக்கம் நிற்க வேண்டிய ஊடகங்கள் என்ன செய்தன..? அவரவர் அரசியலில் அவை கவனமாக இருந்து எவ்வளவு தூரம் அப் போராட்டத்தை பாமர மக்களிடம் இருந்து விலக்கி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலக்கி வைத்தன..

ஈகி முத்துகுமாரின் தற்கொடையின்போது சென்னையில் ஒரு சிறு கூட்டம் மட்டும் மனம் கொதித்து, மனம் வெதும்பி, உயிர் வெறுத்து, தூக்கம் துறந்து பிணத்தை வைத்து அழுது கொண்டிருந்தபோது அவனது சடலம் இருந்த கொளத்தூருக்கு வெளியே இருந்த ரெட்ஹில்ஸ் மெயின் ரோட்டில் கூட அந்தசோகம் எதிரொலிக்கவில்லையே..

கூடங்குளத்தில் ஒரு பெரிய கூட்டம் தனது வாழ்வாதாரத்துக்காக அமைதியான முறையில் இரு பெரும் ராட்சதர்களுக்கு எதிராக அறப் போராட்டத்தை இன்று வரை நடத்திக் கொண்டிருக்கையில் மனசாட்சியற்ற தமிழன் இன்னமும் கரண்ட் வராததற்கு கூடங்குளம் அணுவுலைதான் காரணம் என்று நம்பிக் கொண்டு இருப்பதற்கு யார் காரணம்..?

முல்லைப் பெரியாறு பிரச்சினை.. காவிரிப் பிரச்சினை என்று தமிழனின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எல்லாம் தமிழகம் முழுவதும் பரவிவிடாமல் பார்த்துக் கொண்டது யார்..?

எல்லாம் இந்த தமிழ்சமூகம் நம்பி பார்த்தபடி ரசித்துக கொண்டிருக்கும் ஊடகங்கள்தான்..

இன்றைய சமூகமே ஊடகங்களால் கட்டமைக்கப் பட்டதுதான்.. அப்படி இன்றி தமிழனுக்க தன்மானமும் விழிப்புணர்வும் மட்டும் இருந்திருந்தால் அவ்வளவு பெரிய துரோகத்துக்கும்,ஊழலுக்கும் பிறகும் தமிழகத்தில் (தோற்றிருந்தாலும் )திமுக வால் இவ்வளவு ஓட்டு வாங்கி இருக்க முடியாது.. கூடங்குளம் விவகாரத்திலும் ஈழ விவகாரத்திலும் மணிக்கொரு பல்ட்டி அடித்த ஜெவின் கட்சி நிச்சயம் ஒரு வோட்டு கூட வாங்கியிருக்க இயலாது..

கதாநாயக வழிபாடும், ஊடக சப்போர்ட்டும் இன்றி இந்த சமூகத்தில் யாருமே உருவாக இயலாது என்பதுதான் இன்றைய நிலை..

ஊடகங்கள் அனைத்துமே கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.. அல்லது பெரும் பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.. இப்படி இருக்கும் ஊடகங்கள் உதயகுமாரண்ணனுக்கு நிச்சயம் சப்போர்ட் பண்ண மாடடவே மாட்டார்கள்.. அவர்களின் உதவியின்றி நிச்சயமாக ஆம் ஆத்மி போன்ற பெரு வெற்றியை பெறவே இயலாது.. 

இவர்களது சப்போர்ட் இருந்தால் ஒரு வேளை நாளையே வைகுண்ட ராஜன் கூட பெரிய தியாகியாக நம் மீது திணிக்கப் பட்டால்ஆச்சரியம் இல்லை..

ஆக இந்த நண்பர்கள் கனவு காண்பது மாதிரி உதயகுமாரண்ணன் அரசியலுக்கு வந்தால் உடனடி மாற்றம் நிகழும் என்பது நடக்காது என்றே நான் நம்புகிறேன்.. அதற்கு தீர்க்கமான திட்டமிடலும் ஊடகங்களுக்கெதிரான சரியான வியூகங்களும் மிக மிக அவசியமாக தேவைப்படுகிறது..

இப்போதைக்கு நம் கையில் இருக்கும் மிகப் பெரிய எளிய மனிதனின் ஊடகம் முகநூல்தான்.. இப்போதைக்கு தமிழ்சமூகத்தில் இதனது தாக்கம் மிக மிக குறைவுதான்.. இன்னும் லட்சக் கணக்கில் இளைஞர்கள் முகநூலுக்கு வர வேண்டும்.. முகநூலின் வலிமை பெருகும்போது மட்டுமே உதயகுமாரணண்ணன் போன்ற நமது ஹீரோக்களின் வெற்றி சாத்தியப்படும் என்று நான் நம்புகிறேன்..

ஆகவே அண்ணனை அரசியலுக்கு அழைக்கும் முன் அதற்கான சூழலை ஏற்படுத்துவோம்.. இளைஞர்களை ஏராளமாக இந்தமேடைக்கு கொண்டு வருவோம்.. அதன் பின்னர் நம் கனவுகளை சாத்தியப் படுத்துவோம் என்றே எனக்கு சொல்லத் தோன்றுகிறது..

உண்மையில் நமது வெற்றி என்பது இல்லாமலில்லை.. 

என்ன.. சற்று தொலைவில் இருக்கிறது அவ்வளவுதான்.. அதை நோக்கிய நமது திட்டங்கள் இன்றிலிருந்தே துவங்கட்டும்..

இன்றே துவங்கினாலதான் நாளை அல்ல எனினும் நாளை மறுநாளாவது நமக்கே நமக்கான தமிழகம் மலரும் என்று உறுதியாக நம்புகிறேன்..

நம்புவோம்.. அதை நோக்கி நடப்போம் நண்பர்களே.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?

No comments:

Post a Comment