Wednesday, 11 December 2013

நான் இந்த திரையுலகுக்கு வருவதற்கு முன்னால் ஒரு டியூஷன் வாத்தியார், ஓர் இன்ஸ்டால்மெண்ட் வசூலாளன், கோழிக்கறிக் கடையில் 
ஓர் ஊழியன், டீக்கடை ஊழியன் மற்றும் பிரிண்டிங் பிரஸ்ஸில் ஓர் 
ஊழியன் என்பன போன்ற பல வேலைகளில் இருந்தவன். அதில் முக்கியமானது திருமண மற்றும் சடங்குகளை படம் பிடிக்கும் வீடியோ மற்றும் போட்டோகிராபர்..

எனது போட்டோகிராபர் வாழ்க்கையில் சுவாரசியங்களுக்குப் பஞ்சமே இல்லை. மண மகளை மாற்றி போட்டோ எடுத்தது.. குடும்பத்தில் எவனெவனுக்கு இடையில் சண்டை என தெரியாமல் எதிரிகளை ஒன்றாக நிறுத்தி போட்டோ எடுக்க முயன்றது.. என்று என் கைவசம் ஏராளமான நினைவுகள் உள்ளன..

நேற்று நான் நண்பன் ஃபிராங்க்கிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு சம்பவத்தை விவரித்தேன். இதை பதிவாகப் போடுங்கள் என்று அவன் சொன்னதன் பேரில் பதிகிறேன்..

ஒரு ஃபங்க்‌ஷன்.. வத்தலகுண்டு பக்கத்தில் ஒரு கிராமம்.. முதல் நாள் இரவு பெண்ணழைப்பின்போதே குடும்பச் சண்டைகள் களை கட்டின.. அறிவாள்களும், குறுவாள்களும் புகுந்து விளையாடின. உயிர்பயத்துடனே கழிந்தது பெண்ணழைப்பு.. மறுநாள் பத்தரை டூ பன்னெண்டு முகூர்த்தம்..

லேட்டாக எழுந்து நிதானமாக வந்து விழாவை கவர் பண்ண ஆரம்பித்தோம். அழகிய விவசாயியின் வீடு. ஆடு, மாடு, கோழி, புறா என்று வளர்த்த வழக்கம் தவிர ஒரு பெரிய (கிட்டத்தட்ட சராசரி ரூமில் பாதி அளவு இருக்கும்) பெட்டியில் லவ் பேர்ட்ஸ் வளர்த்தார்கள். கிட்டத்தட்ட 200 பறவைகள் இருக்கும்.. திருமண ஃபங்க்‌ஷன் என்பதால் அந்த லவ் பேர்ட்சை கொஞ்சம் வீடியோ எடுத்து மண மகன் மற்றும் மணமகளை கம்பைன்டு ஷாட்டாகவும் கொஞ்சம் வீடியோ எடுக்க நேரம் இருந்தது..

மணமக்களை மண்டபத்துக்கு அழைக்கும் நேரம் வந்தது.. அனைவரும் ரெடி.. முக்கியமாக நாங்கள்.. வேட்டுப் போட்டுதான் மணமக்களை அழைத்துப் போவார்கள் என்று தெரியும். எனக்கு வெடிச் சத்தம் என்றாலே அலர்ஜி. இருப்பினும் தொழிலாயிற்றே..நானும் தயாரானேன்..

இரு தரப்பு கூட்டமும் வந்தது. முந்தைய நாள் இரவின் வன்மம் இருவ்ருக்கிடையிலும் இருந்தது. யார் போடுகிற வேட்டு அதிக சத்தம் என்பதே அங்கு தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயமாக இருந்தது. எங்கள் பகுதியில் அவுட்டு என்று ஒரு வெடி உண்டு. திரியில்லாத வெடி அது. சப்தமும் சேதமும் அதிகமுள்ளது -உண்மையில் அது வெடிகுண்டின் எளிமையான வடிவம். இரு தரப்பும் தத்தம் வலிமையைப் பறைசாற்ற அவுட்டுகளைப் போட்டு அக்கம்பக்கத்தினரின் காதுகளை அவுட்டாக்க முயன்றனர். மணமக்கள் காரில் ஏறிப் போனார்கள். வீடியோ மற்றும் போட்டோ கிராபர்களுக்கான கார் வருவதற்கு முன் மொத்த வீடும் மண்டபத்துக்கு கிளம்பி விட்டது.

யாரும்இல்லாத வீட்டில் காருக்காக காத்திருந்தபோது மௌனம் காதை செவிடாக்கியது. சும்மா இருக்கும் நேரத்தில் அந்த லவ் பேர்ட்ஸின் பறவைக் கூண்டைப் போய் வேடிக்கை பார்த்தபோதுதான் தெரிந்தது இருந்த 200 பறவைகளில் கிட்டத்தட்ட 100 க்கும் மேல் வெடிச்சத்தத்தில் பயந்து செத்தே போயிருந்தன.. அந்த கூண்டின் தரைமுழுக்க கிடந்த பறவைகளின் சடலங்கள் இலையுதிர் காலத்து இலைகளை விட அடர்த்தியாக இருந்தன..

தீபாவளி முடிந்தும் வெடிச் சத்தங்கள் தொடர்கின்றன..

தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக முதல் வெடி வெடித்தபோது முடங்கியவன் நேற்றுதான் வெளியே வந்தான் - எங்கள் செல்ல நாய் சின்னாவை சொல்கிறேன்..

இந்த ஒரு வாரமாக சாப்பிடவில்லை. சரியாக உறங்கவில்லை.. நேற்றுதான் சற்று இயல்பானான். இன்றுதான் சாப்பிட ஆரம்பித்தான். சட்டெனமாலையில் வெடிச் சத்தங்கள்கேட்டதும் மறுபடி எங்கள் படுக்கையறையின் பீரோவுக்குப் பின்னால் சென்று பதுங்கிவிட்டான்..

அநேகமாக நாளை வெடிச்சத்தங்கள் இருக்காது. நாளை முதல் வழக்கம்போல சாப்புட ஆரம்பித்து விடுவான்.எனது ஒரே ஆறுதல் என்னவென்றால் அந்த லவ் பேர்ட்சைப் போல மெல்லிய மனம் படைத்தவன் இல்லைஅவன்.. எத்தனை பெரிய வெடிச்சத்தம் கேட்டாலும் நடுங்கியபடியாவது உயிரோடுதான் இருப்பான் அவன்..

ஐ ஹேட் தீபாவளி..

No comments:

Post a Comment