Wednesday 11 December 2013

அந்தப் பக்கம் நேற்று போயிருந்தேன்.. இதற்கு முன் கூட பல நாட்கள் அந்த வழியாக போயிருக்கிறேன்.. ஆனாலும் அந்த குடியிருப்புக்குள் போக வாய்த்ததே இல்லை.. நேற்று அதன் உள்ளே சென்று ஒருவரைப் பார்க்க நேர்ந்தது.. வீடுகளுக்கு வயதாகிவிட்டிருந்தது.. வயதானதும் மனிதர்கள் குள்ளமாவது போல வீடுகளும் உயரம் குறைந்து விடுகின்றன - வருடந்தோறும் உயர்ந்து வரும் சாலைகளுக்கு நன்றி.. நாங்கள் இருந்த அந்த ஃப்ளாட்டின் ஜன்னல்வழி கேபிள் வயர் உள்ளே நுழைந்திருந்தது.. இன்னொரு ஜன்னலின் கம்பியில் துணிக்கொடியின் ஒரு நுனி கட்டியிருந்தது.. மறுநுனி வீட்டுக்குள் எங்கோ கட்டப்பட்டிருக்கும்.. நாங்கள் இருந்தபோது அங்கே கொடி எதுவும் கிடையாது.. எல்லாம் தரையில்தான் கிடக்கும்..

துவக்கத் தொண்ணூறுகள்.. கல்லூரி முடித்து அப்போதுதான் உள்ளுக்குள் கனவுகள் காடு மாதிரி வளர்ந்திருந்த காலம்.. நண்பன் கிரிக்கு லயோலா கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. சிவா MSW முடித்துவிட்டு சமூக சேவை நிறுவனமொன்றில் வேலை பார்த்தபடி யூபிஎஸ்சி படிக்கலாம் என சென்னை வந்திருந்தான்.. அன்பழகனுக்கு மெடிக்கல் ஷாப்பில் வேலை.. (அவன் ஃபார்மசியில் டிப்ளமோ). கடைக்குட்டியாக செந்தில்.. அப்போதுதான் கல்லூரியில் முதல் வருடம்.. இங்கு சென்னை வந்தபின்தான் அறிமுகம்.. மொத்த கூட்டத்திலும் படிப்பிலும் இல்லாமல் வேலையும் இல்லாத கபோதி நான்தான்.. சினிமாவுக்குள் நுழையப் போகிறேனாம்.. எதோ என்னால் முடிந்த அளவு சிறு சிறு பத்திரிகைகளில் பார்ட் டைமராக வேலைக்கு சேர்ந்து சிறு தொகை சம்பாதித்து என் பங்காக போடுவேன்..

அவள் நிஜபெயர் வேறு.. நாங்கள் அவளை பேச்சி என்றுதான் கூப்பிடுவோம்.. கிட்டத்தட்ட அவளது உண்மைப் பெயரே மறந்துவிட்டது. (இன்றும்கூட சற்று யோசித்துதான் அவளது பெயரை நினைவுக்கு கொண்டுவர வேண்டி இருக்கிறது.) நர்சிங் முடித்திருந்தாள். எங்கள் எல்லோரையும் விட அவளுக்குதான் அப்போது சம்பளம் அதிகம். சாஸ்திரி பவனில் எதோ ஒரு ஆஸ்பத்திரியில் ஸ்டாஃப் நர்ஸ் என நினைக்கிறேன். (லேடி வெலிங்டன்னாக இருக்கலாம்) அவளுக்கு கிரி மேல் மாளாத காதல். சொல்லப் போனால் நாங்கள் அனைவரும் சென்னை போகிறோம் என்பதால்தான் மதுரையில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்திருந்தாள். முக்கியமாக கிரிக்காகதான் சென்னைக்கே வந்திருந்தாள்.. ஹாரிங்டன் ரோடில் ஒரு வுமன்ஸ் ஹாஸ்டலில் அவளது ஜாகை. 

பிரச்சினை என்னவென்றால் கிரிக்கு அவள் மீது காதல் இல்லை.. அதற்கு பல காரணங்கள். அப்போது எங்கள் அனைவரிலும் அழகானவன் கிரிதான்.. ரேமண்ட் சூட்டிங்ஸ்க்கு வருகிற மாடல் மாதிரி இருப்பான். உடைகள் அணிவது அவ்வளவு ஸ்டைலாக இருக்கும்.. ஊரில் அவனை மானசீகமாக காதலிக்காத பெண்களே கிடையாது. மேலும் அவன் எங்கள் ஊர் அருகில் இருந்த கிராமத்தை சேர்ந்தவன். கிராமத்திலேயே பணக்கார குடும்பம் அவனது.. அப்போதே அவனது பங்கு 50 லட்சம் ரூபாய் தேறும் என்று நாங்கள் கணக்குப் போட்டு கிண்டலடிப்போம். அது உண்மையும் கூட.. பேச்சி அவனுக்கு நேரெதிர். குள்ளமாக ஒல்லியாக கறுப்பாக இருப்பாள். பல்லை தெற்றுப்பல் என்று சொல்லிவிட முடியாது.. ஆனால் பேசும்போது அது முன்புறமாக நீட்டிக் கொண்டிருப்பது போல தோற்றமளிக்கும். ஆனால் அவளது மனமும் மூளையும் அத்தனை அழகு.. எங்கள் எல்லோருக்கும் பிடித்த சினேகிதி அவள்.. சென்னையில் இருந்தவரை எங்களுக்கு அன்பு செய்தபடி கிரியிடம் காதலை சொன்னபடியே இருந்தாள் அவள்.. 

பேச்சிலர் ரூம்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாதது அல்ல.. அப்போது நான் குடிப்பதில்லை எனினும் சிகரெட் பழக்கம் மட்டும் உண்டு. ஆனால் கிரி, அன்பழகன், சிவா, செந்தில் நால்வருமே குடிப்பார்கள். குடியென்றால் பெரும் குடி ஒன்றும் இல்லை.. பீர்தான்.. கையில் பணம் இருந்து மறுநாள் விடுமுறையுமாக இருந்தால் உடனே தளும்பலோசையுடன் பீர்பாட்டில்கள் படியேறி அறைக்குள் வந்துவிடும். நான் வெஜ் ஓட்டலில் வாங்கினால் விலை கட்டுப்படியாகாது என்பதால் அறையிலேயே சமைப்போம்.. அதாவது சமையல் என்ற பெயரில் சம்திங் சம்திங்தான்.. அந்த சனியன்பிடித்தவன்கள் பீரை குடித்துவிட்டு தட்டில் நன்கு கழுவிய செருப்பை வைத்தால்கூட தின்றுவிடுவார்கள்.. தண்டனை எல்லாம் எனக்குதான்.. என்ன செய்வது நான்வெஜ் ஆயிற்றே.. எப்படியோ பெரும்பான்மை பங்கை நானே காலி செய்துவிடுவேன்.. இப்படி செலவழித்தால் அறையில் பணம் எங்கே இருக்க..? இருபது தேதி ஆகிவிட்டால் தத்தம் சிகரெட்டுகளை ஒளித்து வைப்பதுவும் அடுத்தவன் ஒளித்து வைத்த சிகரெட்டைத் திருடி புகைத்துவிடுவதுமாக மாதத்தின் கடைசி பத்து நாட்கள் வாழ்க்கையின் கடைசி பத்து நாட்கள் போல கழியும்.. எவனும் அடுத்தவனுக்கு தெரியாமல் ஒரு ரூபாய் கூட ஒளித்து வைக்க முடியாது.. திருடுவதில் நாங்கள் ஐவருமே சூப்பர் கில்லாடிகள்..

வேறு வழியே இல்லை.. இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்றால் பேச்சிதான் எங்களது ஒரே அடைக்கலம். அதிலும் இந்த பிக்காலிகள் பணம் கேட்க மட்டும் பேச்சியிடம் என்னைத்தான் அனுப்புவார்கள். கிரி அவளிடம் பணம் கேட்டு போய் நிற்க மாட்டான். அன்பழகனையும் செந்திலையும் பேச்சி நம்ப மாட்டாள். ஒன்று சிவா இல்லை என்றால் நான்தான் போக வேண்டும்.. வேலை இல்லாதவன் என்பதால் எப்போதுமே நான்தான் அங்கே செல்பவனாக இருப்பேன்.. லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் சொல்லிவிட்டு காம்பவுண்டுக்கு வெளியே மரத்தடியில் காத்திருந்தால் பர்சை இடுக்கிக் கொண்டு வேக வேகமாக பேச்சி வருவாள். சாதாரணமாக காசு கேட்டால் அந்த குடிகாரன்களுக்காக நீ பொய் சொல்லாத ஶ்ரீ என்றுவிடுவாள். அவளுக்காக முகத்தை பரிதாபமாக வைத்துக கொள்ள வேண்டும்.. முந்தாநாள் சாப்பிட்டது என்று பொய் சொல்ல வேண்டும். பசி என்று தெரிந்தால் பதறிவிடுவாள். பைத்தியக்காரன்களா.. சாப்பாட்டுக்கு இல்லை என்றால் உடனே வரவேண்டியதுதானேடா.. என்று சத்தம் போட்டுவிட்டு ஹாரிங்டன் ரோட்டுககு வெளியே மெயின் தெருவில் வந்து டீக்கடையில் பொறையும் டீயும் முதலில் வாங்கித் தருவாள்.. அப்புறம் கையில் இருப்பதை வழித்துக் கொடுத்து எவனையும் குடிக்க வேண்டாம் என்று சொல்லு.. என் அண்ணனும் அப்பாவும் குடியால் அத்தனை பாடு படுத்தி இருக்கிறார்கள். நீ குடிக்க மாட்டாய் என்று தெரியும் நீயாவது அவன்களுக்கு அட்வைஸ் பண்ணக் கூடாதா என்று அரைமணி நேரமாவது பேசி காதை அறுத்துவிட்டுதான் அனுப்புவாள்.. காசு கொடுக்கும் மகாராணி பேச்சைக் கேட்க மறுத்தால் முடியுமா.. காதில் ரத்தம் வடியததான் வீட்டுக்கு வருவேன்..

திடீரென் பேச்சி இரண்டு நாள் லீவு மூன்று நாள் லீவு என்றால் ஊருக்குப் போக மாட்டாள். ஹாஸ்டலில் இருந்துபையைத் தூக்கிக் கொண்டு நேராக எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவாள். வந்தவுடன் எல்லாரையும் திட்டியபடியே எங்களையும் வேலை வாங்கி, அவளும் கூட்டி பெருக்கி என்று வீட்டை முதலில் சுத்தப் படுத்துவாள்.பின்னர் மளிகைக்கடைக்கு என்னையோ சிவாவையோ கூட அழைத்துப போய் பத்து நாட்களுக்கான மளிகைப் பொருட்களை வாங்கி வருவாள்.. இதற்கு நடுவிலேயே அவளுக்கும் கிரிக்கும் சண்டை துவங்கி இருக்கும்.. இவள் மாங்கு மாங்கென்று சமைத்தபடியே அவனிடம் சண்டை போட்டு எங்களை திட்டி என்று அதகளம் பண்ணி சமைத்து முடிக்கையில் அழுது கொண்டேதான் முடிப்பாள். கிரி கோபம் தாங்காமல் அவளை கண்ட படி திட்டி இருப்பான்.. அதனால் வந்த அழுகை அது.. யார் சமாதானம் செய்தாலும் அந்த பைப்பை அடைக்க முடியாது. கிரியிடம் சமாதானப்படுத்தச் சொல்லி கேட்போம். அவன் முடியாது என்றுவிடுவான். எவ்வளவு பேசினாலும் அந்த சண்டை தீராது.. சரிதான் போங்கடா என்று நாங்கள் பாட்டுக்கு சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவோம்.. எல்லாம் வாங்கிப் போட்டு சமைத்தும் போட்டுவிட்டு அவள் எப்போதும் சாப்பிடாமல்தான் படுப்பாள் - அது மூன்று நாளானாலும் நான்கு நாளானாலும் அப்படிதான். வெறும் பால் மட்டும்தான் அவளது உணவாக இருக்கும்.. நாங்கள் எந்த குற்றவுணர்வும் இன்றி அவள் இருக்கும்மட்டும் சந்தோஷமாக திருப்தியாக சாப்புடுவோம்.. அவள் தூங்கும்போதும் நிம்மதியாகத் தூங்க முடியாது. அவளது பர்சை வயிற்றில் கட்டிகொண்டுதான் தூங்குவாள். வெளியே வைத்தால் விடிந்தபின் ஒரு பைசாகூட மிச்சமிருக்காது..

ஒரு கனவை வாழ்ந்தது போல இருக்கிறது. ஒரே வீட்டில் தங்கினாலும் அன்று அப்போது எந்த பாலியல் பேதங்களும் எங்களுக்குள் இருந்ததில்லை. பாலுறவுகள் நடந்ததில்லை.. நடந்தாலும் அது தவறென்று சொல்ல மாட்டேன். என்னமோ நடக்கவில்லை.. எல்லாமே நட்பாகத்தான் போனது.. அம்மாவுக்கு அடுத்து பேச்சியைத்தான் அவ்வளவு ஏமாற்றி இருக்கிறோம். நாங்கள் சொன்ன பொய்களை நம்பி பதற்றப்பட்டு உடனே நகையை கழற்றிக் கொடுப்பாள். அடகு வைத்துவிட்டு அவளிடம் ரசீதை மட்டும் கொடுத்துவிட்டு வந்தால் போதும். பணம் வரும்போது அவளே மீட்டுக் கொள்வாள். பொய்கள் எல்லாம் பணமாய் மாறி பணமெல்லாம் பீராய் மாறி நண்பர்களின் நாடி நரம்பெல்லாம் ஓடிக் கொண்டேதான் இருந்தது.. பேச்சியும் பலப்பல வருடங்கள் கிரியை காதலித்தபடியேதான் இருந்தாள். 

திசைக்கொன்றாக நண்பர்கள் பிரிந்தபின்னும் பேச்சி ஒரு நினைவைப் போல திரும்பத் திரும்ப கிரியைத் தேடி வந்தபடிதான் இருந்தாள். கிரிக்கு அவர்களது அந்தஸ்துக்கு தகுந்த இடத்தில் பெண் தேடி திருமணம் நடந்தபோது பயந்துகொண்டேதான் இருந்தான் - ஒரு வேளை மண்டபம் தேடி வந்து எதுவும் கலாட்டா பண்ணுவாளோ என்று. அவளுக்கு அவன் பத்திரிகை கொடுக்கவில்லை. ஆனாலும் தகவலை அவனுக்குத் தெரியாமல் நான் பேச்சியிடம் சொல்லித்தான் இருந்தேன் : பைத்தியக்காரி நடப்பது தெரியாமல் இன்னும் அவனை காதலித்தபடி இருந்தால் என்ன செய்வது.. கல்யாணத்துக்கு பேச்சி வரவில்லை. அப்புறம் நாங்கள் யாரும் பேச்சியைப் பார்க்கவும் இல்லை.. கிரியின் கல்யாண பார்ட்டியில் பேச்சியை நினைத்து நான் (அதற்குள் நானும் குடிக்கத் துவங்கி இருந்தேன்) அழுது அளப்பிரையைக் கொடுத்து இருக்கிறேன் (நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்தது). 

கிரி இப்போது பெரு மதிப்பு மிக்க பெரு வேலையில் இருக்கிறான். அன்பழகன் செந்தில் என்ன ஆனார்கள் என்பது தெரியாது. சிவா சின்ன வயதிலேயே இறந்து விட்டான். இம்மாபெரும் சென்னையில் இந்த நினைவுகளை தேக்கிபடி நாநொருவன்தான் இப்போது இருக்கிறேன்.. 35 வயது வரை பேச்சி கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை என்பது மட்டும் கேள்விப்பட்டேன். அப்புறம் சிங்கப்பூர் போய்விட்டாள் என்று கேள்விப்பட்டேன்.. இப்போது எங்ககே இருக்றறாள் என்பதுவும் தெரியாது..

வேலை முடிந்து திரும்பி வரும்போதும் அந்தவீட்டின் ஜன்னல் கம்பியைப் பார்த்தேன். மாற்றங்கள் ஏதுமில்லை.. அப்படியேதான் இருந்தது.. அன்று அவள் சித்விட்டுப் போன கண்ணீர்த்துளிகள் ஒன்றும் அப்படியே இருக்காது.. தெரியும்.. ஆனாலும் திரென நினைத்துப் பார்க்கும் இந்த நாளில் அவை இன்னமும் ஈரம் காயாமல் பிசுபிசுத்தபடிதான் இருக்கின்றன

பேச்சி.. நீ எங்கே இருக்கிறாய்..?

No comments:

Post a Comment