Thursday, 14 November 2013

சிறு பருவத்துக் கனவுகள் என்னவெல்லாமாக இருக்கக் கூடும் என்று சொல்லி விளக்கிவிட முடியாது. ஒரு கட்டத்தில் எங்கள் எல்லாரையும் அழ அழ வைத்து முடிவெட்டும் எங்கள் வீட்டு நாவிதராக நான் ஆசைப்பட்டிருக்கிறேன்..

ஒரு சமயம் எங்கள் பள்ளி ஹாஸ்டலில் முதல் வகுப்புக்கு (first class hostel students)) (அவர்களுக்கு மட்டும்தான் வாராவாரம் அசைவம்) தயாராகும் ஞாயிற்றுக் கிழமை ஆட்டுக்கறிக்கு ஆட்டை அறுத்து கூறு போடும் முஸ்லிம் பெரியவராகவும் ஆசைப்பட்டிருக்கிறேன்.. (ஒரு விதத்தில் அதன் பின் ஒரு கோழிக்கறிக் கடையில் வேலைபார்த்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்டேன் என்றும் சொல்லலாம்.)

இவை தவிர எண்ணி முடியாத அல்லது எண்ண வேண்டாத ஆசைகள் என் பால்ய பிராயத்தில் உண்டுதான். இன்றைக்கும் என்றைக்கும் அன்றைக்கும் கூட சிறுவர்களின் பிரியம் வண்டிகளின் மீதுதான். அது இரு சக்கர வண்டியாகட்டும் நான்கு சக்கர வண்டியாகட்டும்.. இரண்டாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைககிறேன். நான் அத்தை வீட்டில்படிக்கப் போடப்பட்டு பள்ளிக்கு போய்க் கொண்டு இருந்தேன்..

எங்கள் வீட்டுக்கு ஆறாவதாக ஊர்க்கிணற்றுக்கு முன் உள்ள வீட்டில் ஒரு டாக்டர் இருந்தார். அவர் ஒரு டுபுடுபு வண்டி வைத்திருந்தார். (சிறுவர்களின் பாஷையில் என்ஃபீல்டு பைக்குகள் அப்போது டுபுடுபு வண்டிதான்). ஊரின் அனைத்து சிறுவர்களின் ஒரே ஆசை அந்த வண்டியில்ஏறி உட்காருவது என்பதுதான். வண்டிக்கான பாதுகாப்பு மிக மிக அதிகம். வாசலிலேயே திண்ணையில் உட்கார்ந்து டாக்டரின் தாயார் கண் கொத்திப்பாம்பாக வண்டியை கவனித்தபடி இருப்பார். எவனாவது வண்டியைத் தொட்டாலே வசவுகளால் பஸ்பமாக வேண்டியதுதான். கிழவிக்கு பயந்தே அவர் இருந்தால் எல்லோரும் நல்லபி ள்ளையாக அந்த வீட்டைக் கடந்து விடுவோம்.

என் கெட்ட நேரம்... ஒருநாள் அந்தகிழவி அவளுக்கான இடத்தில் இல்லை. தெருவில் நான் மட்டுமே.. அந்த பளபளப்பான வண்டி என்னை கண் சிமிட்டாமலே அழைத்தது. யாரும் இல்லாத தைரியம் எனினும் வண்டியில் ஏறி உட்காரும் துணிச்சல் எனக்கு இல்லை. வெகுநாள் ஆசை சத்தம்வருகிறதோ இல்லையோ.. அந்த வண்டியின் ஹாரனை ஒரே ஒரு முறை அடிக்க வேண்டும்என்பதுதான். யாரும் இல்லாத தைரியத்தில் அந்த ஹாரனை ஒரு முறை அழுத்தினேன். என் கெட்ட நேரம். அந்த ஹாரன் ஓங்கி ஒலித்தது.. மட்டுமல்ல.. அந்த ஹாரன் சுவிட்ச் அப்படியே ஸ்டக் ஆகி விட்டது.

எட்டு மணி சங்கைப்போல ஹாரன் உய்ய்ய்யென ஒலிக்கஆரம்பித்தது. நான் உடல்பதைத்து அதை நிறுத்த என்னவென்னவோ பிரயத்தனங்கள் செய்தேன். எல்லாமே வீணானதும் அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டேன்..

எழவெடுத்த கிழவி எங்கிருந்து பார்த்தாளோ தெரியாது. எங்கள் அத்தை வீட்டில் சென்றுவத்தி வைத்து விட்டாள். எங்கள் அத்தை என் அ ப்பாவுக்கு அக்கா - அடிப்பதிலும் கூட. அன்றைக்கு அடி பின்னி எடுத்துவிட்டாள்..

அன்று துவங்கியதா என்று தெரியாது.. இரு சக்கர வண்டிகளின்மீதான பிரியம் சாஸ்வதமாக மனதாழத்தில் இருந்தபடியே இருந்தது..

பின்னர் வளரிளம் பருவத்தில் நண்பர்கள் ஒவ்வொருவராக வண்டி வாங்கினார்கள். டிவிஎஸ் 50, யமாஹா, டிவிஎஸ் சுசுகி என்று எல்லா வண்டிகளிலும் நான் பின்சீட் பயணி மட்டுமானேன். ஒரு போதும் எந்த வண்டியையும் ஓட்டியவனில்லை. ஒரு முறையாவது காலை வைத்து அழுத்தாமல் தானாக ஓடும் ஒரு வண்டியை ஓட்ட வேண்டும் என்பது ஜெனமங்களின் கனாவாகத் தொடர்ந்தது..

முப்பத்தைந்து வயது வரைக்கும் சைக்கிள் தவிர வேறெதையும் ஓட்டி அறியாத ஒருவனுக்கு நண்பன் அருள் எழிலன் தனது டிவிஎஸ் சேம்ப்பை குறைந்த விலைக்கு அருளினான்.. முதன் முதலாக ஒரு தானியங்கி வண்டியை சென்னையின் தெருக்களில் ஓட்டும்போது நேர்ந்த புல்லரிப்பை என்னால் எந்த வார்த்தை கொண்டும் விளக்க முடியாது..

பல வருடங்களுக்கு அந்த வண்டியே எனது அடையாளமாக இருந்தது..

பின்னரும் பல வண்டிகள் ஓட்டி விட்டேன். பாலாவின் (பாலமுருகன்) புண்ணியத்ததில் இப்போது ஒரு டிவிஎஸ் ஸ்கூட்டி ப்ளஸ் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்.. ஆனாலும் சொந்தகாசில் வாங்கிய அந்த டிவிஎஸ் எக்செல்லை மறக்க முடியாது. அதனால்தான் இன்றளவும் அதை எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் அதை அப்படியே வைத்திருக்கிறேன்.. என் அடையாளத்தைப் பாதுகாப்பது போலத்தான் உணர்கிறேன்..

இந்தமுறை ஊருக்குப் போயிருந்தபோது பிரியத்துடன் அதன் மீதுஉட்கார்ந்து பார்த்ததோடுசரி.ஓட்டிப் பார்க்க முடியவில்லை.. ஆனாலும் அது ஒரு யட்சிணியைப் போல மனதுக்குள் என்னைப் பின்தொடர்ந்தபடிதான் இருக்கிறது. என் வேண்டுகோளுக்கு இணங்க அதை புகைப்படம் எடுத்துகொடுத்ந தம்பி பாலாஜிக்கும் நன்றிதான். வேறென்ன சொல்ல..
அண்ணனும் தங்கையுமாக எனது மொபைலில் இருந்து பாடிக் கொல்கிறார்கள்.. உலகத்தில் சிறந்த நட்பு பற்றிய படம் எது எனக் கேட்டால் நான் சலங்கை ஒலியைத்தான் சொல்வேன். அதில்தான் சரத்பாபு, கமலின் நட்பு அப்படி இருக்கும். எல்லாப் பாடலகளும் அவ்வளவு பிடிக்கும். அதிலும் வேதம் அணுவிலும் ஒரு நாதம் என்ற பாடல் மிகவும் ப்ரீதி.. ரிபீட் போட்டு மொபைலில் அவ்வப்போது கேட்பேன். எஸ்பிபியும் ஷைலஜாவும் ரொம்ப கவனமாகவும் இயைந்தும் பாடியிருப்பார்கள்..ஒவ்வொரு முறை கேட்கும்போதும் நான் கண் கலஙகுவது கட்டாயம் நடக்கும்..

என் மொபைலில் இருப்பது அதன் தெலுங்கு வெர்ஷன். வேதம் அணுவுலனொக நாதம் என்றுதான் பாலு பாடுகிறார். ஷைலு மாத்ரு தேவோ பவ.. எனத் துவங்கி ஆச்சார்ய தேவோ பவ என முடிக்கையில் ஒவ்வொரு முறையும் கண் கலங்கிவிடுகிறது. அதற்கு காரணம் பாடல் வரிகள் அல்ல. ஆசானும் அப்பனுமான கே. விஷ்வநாத் எடுத்த காட்சிகள் மனதுக்குள் வந்து திண்மமாக நிற்பதுதான்..

கடைசியாக பாலு பாடுகிறார் :
நாஷ்திஷ்ஜரா மரணஜம் பயம்
நாஷ்திஷ்ஜரா மரணஜம் பயம்..

என்று..

என்ன அர்த்தம்..? மரண பயத்தை அழித்துவிடு இறைவா என்றா..? தெலுங்கு அறைகுறையாக தெரியும். சமஸ்கிருதம் குறைகுறையாக தெரியும்.. ஆனாலும் இசை புரியும்..

அந்த வரிகளுக்குப் பின் அந்த கேரக்டர் செத்துவிடும். ஆகவே அதை மரண பயத்தை அழித்துவிடு இறைவா என்றே கொண்டு இதுநாள் வரை ஒவ்வொரு முறையும் கண் கலங்கி வருகிறேன்..

என்ன பொருளாக இருந்தால் என்ன..? எனக்கு புரிந்ததே எனது அர்த்தம்.. ஆகவே.. நாஷ்திஷ்ஜரா மரணஜம் பயம்..
ஒரு நாள் எப்படி வேண்டுமானாலும் இருக்கக் கூடும்.. ஆனால் மனம் ஒன்றுதான்.

நண்பர்களை தொந்தரவு செய்ய மனது இடம் கொடுக்கவில்லை. வெகு தொலைவு என்றால் மட்டும் எனது அசோசியேட் டைரக்டரான செல்வேந்திரனை வண்டியெடுத்து வரச் சொல்லிப் போகிறேன். இற்றை நிலையில் அவன் மட்டும்தான் available. பின்னால் உட்கார்ந்து போகையில் மரண பீதியை உண்டு பண்ணுகிறான். இருக்கும் இன்னொரு கையையாவது காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில் மிக மிக தேவை என்றால் மட்டுமே அவனை அழைத்துப் போகிறேன்.. மற்ற எல்லா நேரமும் நடைதான்.. வெகு நாட்களுக்குப் பின் தினமும் 7 முதல் 8 கிமீ நடக்கிறேன்..

நடைத்துணை என்று ஒன்று வேண்டுமல்லவா..? அதற்கு இருக்கவே இருக்கிறது நம்ம மொபைல்.. காலையில் இருந்து ஒரே பாடலை கதற்றிக் கொண்டு இருக்கிறது..(ரிப்பீட் போட்டால் கதறாதா என்ன)

மூன்றாம் பிறையில் இருந்து ஜேசுதாஸ் பாடுகிறார்..

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..

இப்போது ஹெட்ஃபோனில் கேட்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறது. அவர் பாடும்போது பின்னணியில் மெலிதாக ஒரு டார் ஷெனாய் ஒலிப்பது ஹெட்ஃபோனில் நன்றாகக் கேட்கிறது.. அது பாடலை முக்கியமான இடங்களிலெல்லாம் தொடர்ந்தபடியே இருக்கிறது. அது பாடலில் இருந்து ஒலிக்கவில்லை. பாடலுக்கு வெளியே இருந்து நமது இடதுகாதில ஒலிக்கிறது. அந்த பாடலை நாம் எப்படி பின்னாலேயே தொடர்ந்து முணுமுணுக்கிறோமோ அதே மாதிர் அதுவும் முணுமுணுக்கிறது.. உண்மையில் அது பாடலின் ஒரு பகுதியல்ல. அதுதான் ரசிகனின் குரல்..

உனக்கே உயிரானேன் எந்நாளும்
எனை நீ மறவாதே..

என்கையில் அது எப்போதோ நம் அம்மா சொன்ன வாக்கியம் போலவும் இருக்கிறது.. டார் ஷெனாய் அதை உறுதி செய்கிறது. அம்மாக்களின் குரல்கள் டார் ஷெனாயை ஒத்துதான் இருக்கின்றன..

பாடல் காலத்தைத் தாண்டி முன் செல்கிறது. சில நேரம் அது காலமின்றி இருக்கிறது. சில நேரம் அது பலப்பல காலம் தாண்டி பின்சென்றபடியே இருக்கிறது..

ஏதோவொரு நெகிழ் இரவில் பிச்சி போலும் பிள்ளை போலுமான பேரழகுக் குழந்தைஒருத்தி நம் மடியில் எச்சில் வடியப் படுத்துறங்கும்போது அந்தப் பாடல் ஒலிப்பதாக மனச்சித்திரங்கள் புரண்டு புரண்டு ஜாலம் காட்டுகின்றன எப்போதும்.. ஶ்ரீதேவியோ கமலோ அன்றி அங்கே ஒரு மாயா ரசவாதத்தில் நாமும் நமக்குப் பிடித்த(நாம் ஶ்ரீதேவி போல அழகானவள் என்று பிம்பப்படுத்தி வைத்த) பெண்ணுமாக ஒருவரை ஒருவர் தாலாட்டிக்கிடக்கிறோம்..

ஒரு சரியான பிறழ் நொடியில் அங்கே பாடுலது ஏசுதாசா, கண்ணதாசனா, பாலுமகேந்திராவா, கமலா அல்லது நாமா என்ற விதிர்ப்பு ஏற்படுவது உண்மை..

நம் இறக்கைகளுள் பொத்தி கவர்ந்து சென்ற ஶ்ரீதேவியை காலம் இப்பவும் மெல்ல மெல்லதான் வயதாக்கி வருகிறது. கொஞ்சம்அடையாளம் மாறினாலும் அந்த தேவதை அதே புன்னகையைஇன்னமும் ஒளிர்த்தபடி இருக்கிறாள்.

இதோ என் மொபைலில் அன்றைக்கு நான் டீக்கடை டீக்கடையாகதேடிச்சென்ற நின்ற ரசித்தபாடல காலை முதல் ஒலித்தபடியே இருக்கிறது. அ து யாருடைய பாடலாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எப்போதும் சில தேவதைகளையும் சில வருடல்களையும் நினைவு படுத்தினால் போதுமில்லையா..?

அந்திப்பகல் உனைநான் பார்க்கிறேன்..
ஆண்டவனே இதைத்தான் கேட்கிறேன்..

ஆரிராரோ.. ஓ ஆரிரோ..
இன்று தமிழ் இந்துவிலும் தினமலத்திலும் வந்த இரு செய்திகள் என் கவனததைப் பெற்றன.. ஒன்று என் கவனத்தையும் மற்றது என் கண்டனத்தையும்..

இந்துவில் வந்தது :

ஏகே 47 துப்பாக்கியை கண்டுபிடித்த மிகையீல் கலாஷ்னிகோவ் பிறந்த நாள் இன்று.. கவிஞராக விரும்பிய அவர் ஒரு மெக்கானிக்காக வேலை செய்தார். செம்படையில் சேர்ந்து போரிலும் பங்குபெற்ற அவர்தான் உலகின் கொடூரமான ஆயுதமான ஏகே 47 - ஐ கண்டுபிடித்தார். அவர் 150 க்கும் மேற்பட்ட ஆயுதங்களை கண்டு பிடித்திருக்கும் அவர் ஆறு கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்..

அதில் ஏகே 47 மட்டுமே பெரும் புகழ் பெற்றுள்ளது..

தினமலத்தில் வந்தது:
டெங்கு கொசுக்களை ஒழிக்க தினமலம் விநோதமான ஐடியாவை கொடுத்துள்ளது. எங்கெங்கு எல்லாம் நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ அங்கெல்லாம் ஆயில் பந்துகளை அந்த நீரில் போடச் சொல்லி ஐடியா கொடுக்கிறது. அவற்றை எப்படி தயார் செய்ய வேண்டும் என்று தெரியுமா.. ஒரு துணிக்குள் மரத்தூளை அடைத்து கிரிக்கெட் பால் அளவுள்ள பந்துகளாக செய்து கொள்ள வேண்டும். அதை மெக்கானிக் கடைகளில் கிடைக்கும் வேஸ்ட் எஞ்சின் ஆயிலில் ஒரு நாள் முழுக்கஊறப் போட வேண்டும்.

பந்துகளில் ஆயில் நன்றாக ஊறிய பின்பு எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த ஆயில் பந்துகளைப் போட வேண்டுமாம்.. நிலத்தையும் நிலத்தடி நீரையும் பாழடிக்க இதைவிட எளிமையான வழி எதுவும் இல்லை.. உலக நாடுகளில் இந்த ஆயில் வேஸ்ட்டுகள் நிலத்தை பாழாக்காமல் இருக்க மில்லியன் கணக்கான டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சிகள் செய்தபடி இருக்க தினமலம் கொடுக்கும் ஐடியாவைப் பாருங்கள். ஆயில் பால்களால் கொசுவை அழிக்க முடியாவிட்டால அடுத்து ஆசிட் ஊற்றச் சொல்லுவார்கள் போல.. தேவையற்ற தண்ணீர் தேங்குவதை தடுத்தாலே ஒழியக் கூடிய பிரச்சினைக்கு தண்ணீரை தேங்க வைத்து நிலத்தைக் கெடுக்கும் ஐடியாவை கொடுக்க எப்புடி மனம் வருகிறதென்றே தெரியவில்லை..

இனம் நிலம் இரண்டுமே இவர்களுக்கு ஆகாதுதான் போல..
பிரிந்தவர்கள் வாழும்
பெருங்கொண்ட மண்ணில்தான்
வாழ்கிறோம் நாம்
பெரும் பிரியங்களுடன்..

அணைப்பின்போது
முதுகிலிறங்கும் கத்திகளை
அவ்வப்போது
பிடுங்கி 
எறிந்து கொண்டுதான் இருக்கிறோம்
பிரியங்களோடே..

வெளியெங்கும்
விரவிக் கிடக்கும்
அம்மலர்களின் வாசங்களை
சிலாகித்துப் பேசியபடியே
அச் செடிகளைத்
தேடியபடி இருக்கிறோம்
கொல்வதற்காக..

பிரியமெனும் பெரு நதி
அல்லது
பிரியமெனும் பெரும்பாம்பு
நம்மெல்லோருக்கும்
நடுவிலோடி
நம்மை
நடுக்கமுறச் செய்தபடியே
இருக்கிறது..

இப்போதும்
இக்கணத்திலும்
இதை எழுதும்போதும்
என்னிடம் நீ சொல்கிறாய் :
ஐ லவ் யு..
மொத்தத்தில் ஒரு நாளின் முடிவில் நாம் சந்தோஷமாக உறங்கப் போகிறோமா இல்லை துக்கவானாக உறங்கப் போகிறோமா என்பதுதான் உலகிலேயே ஆக முக்கியமான விஷயம் என்பது என்னுடைய அவதானிப்பு..

இன்றைய நாளின் சந்தோஷங்களை நான் உங்களுக்கு எப்படிப் புரியவைப்பேன் என்பது தெரியவில்லை..

ஒரு சாதாரண நாளில்தான் அந்த விபத்து நடந்தது. என்மீது மோதி என்னை விழச் செய்தவரை எனக்கு நினைவில் இல்லை. மெதுவாக அடுத்த லெஃப்ட் எது என்று தேடியபடி சென்ற நான் கீழே விழுந்தபோதுதான் தெரிந்தது யாரோ பின்னால் இருந்து மோதி என்னை விழுத்தாட்டி இருக்கிறார்கள் என்பது. எப்படியோ எழுந்து நின்று விட்டாலும் இரண்டு கைகளும் செயலிழந்து நின்றது ஒரு துயர் என்றால் விழுந்து கிடந்த ஸ்கூட்டியை தூக்கி விட ஆளில்லாமல் நின்றது அடுத்த துயர் என்றால் அந்த இடத்தில் இருந்து என்னை அழைத்துச் செல்வார்கள் என நான் நம்பி அழைக்கக் கூடிய நண்பர்களும் அசிஸ்டண்ட்டுகளும் ஊரிலில்லை என்பதுதான் பெருந்துயராக இருந்தது..

கிட்டத்தட்ட 15 வருட சென்னை வாழ்வில் யாருமற்று நின்ற கணம் அது.. சென்னை வாழ்வைப் போலவே விரிசல் விழுந்த எலும்புக் கையோடு நான் போன வேலையையும் முடித்துவிட்டு ஏழு கிலோ மீட்டர் தள்ளி இருந்த என் வீட்டுக்கு வண்டியை ஓட்டி வந்த போராட்ட தருணம் அது.. சோற்றுக்கு பஞ்சம் வந்ததுண்டு.. ஆனால் ஒரு நாளும் நம் தன்னம்பிக்கைக்கு பஞ்சம் வந்ததில்லை.. அந்த மன உறுதிதான் என்னை வலியைப் பொறுத்தபடி ஏழு கிலோ மீட்டர் வண்டியை ஓட்ட வைத்தது..

பின்னர் ஒரு பொது மருத்துவரைப் பார்த்து, வலி நிவாரணிகளை மறுத்து, நண்பன் தேவின் ஆலோசனையின் பேரில் வலி நிவாரணியை எடுத்து பின்னர் எலும்பு முறிவு நிபுணரைப் பார்த்து என வாதையுடன் கழிந்த இரண்டு நாட்கள் அவை..

இன்றைய முகநூல் ட்ரெண்டுக்குத் தக்கபடி மாவுக்கட்டோடு என் கையைப் படமெடுத்து நிலைத்தகவல் போட்டதில் மழையெனப் பொழிந்த அன்பை சேமித்து வைக்க என்னிடம் கொள்கலன்கள் இல்லாமல் போனது..

இடைப்பட்ட இந்த நாட்களில் என்னைவிட என் இடது கை பெரும் கவனிப்பைப் பெற்றுவிட்டது. நண்பரும் தம்பியுமான டி.வி.எஸ் சோமு திருப்பூரிலிருந்து இந்தக் கையைப் பார்ப்பதற்கென்றே வந்திருந்தார். என் நெகிழ்வினை வார்த்தைகளால் சொல்லமுடியாமல் புன்னகையால் கடக்க வேண்டி வந்தது. அதை விட கொடுமை கண்ணீரை மறைப்பது..

நான் இந்த சாலிகிராமம் காந்திநகருக்கு குடிவந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. பல வருடங்களுக்கு முன் குடி வந்த புதிதில் வீடு எப்படி இருக்கிறது என்று மட்டும் பார்க்க வந்த எனது சித்தப்பா இப்போது என் கையை பார்ப்பதற்காகவென்று வீட்டுக்கு வந்துவிட்டுப் போனார்..

நான் வழக்கமாக போகும் Bar ல் நான் வழக்கமாக உட்காரும் டேபிளில் எதிரே வந்து ஒரு முகம தெரியாத ஆசாமி வந்து உட்கார்ந்தார். ஏதும் பேசாமல் குடிக்கத் துவங்கியவர் முடித்து எழும்போது கையில் என்ன கட்டு என்று கேட்டார். நான் நடந்ததைச் சொன்னேன். நல்லவங்களுகுதான் இப்புடி நடக்குது என்று புலம்பியபடி எழுந்து சென்றார். (ங்கொங்ய்யால.. நான் நல்லவன்னு எப்பய்யா உஉங்ககிட்ட வந்து சொன்னேன்..?)

வழக்கமாக Bar ல் வந்து காசு வாங்கும் திருநங்கை என் கையைப் பார்த்துவிட்டு ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து என் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து என் கையில் ஐந்து ரூபாயைக் கொடுத்துச் சென்றார.

நாம் பயணம் செய்யும் பேருந்தில் திடுமென துணைக்கு பெண்கள் யாருமின்றி கைக்குழந்தையோடு ஒரு ஆண் ஏறினால் மொத்தப் பேருந்துக்கும் இரக்கம் ஊற்றெடுக்கும். அதே போலதான் கிட்டத்தட்ட எனது இடது கையை அனைவரும் அந்த அன்னையற்ற பிள்ளை போல் பார்த்துதான் பேரன்பு செலுத்தினார்கள்..

இன்று காலையில் 14 நாள் தண்ணீர் படாமல் பாதுகாத்த இடது கையில் அழுக்கும் , குளியாமையும் சேர்ந்து நாற்றம் வருவது போல உணர்வு ஏற்பட மாவுக்கட்டை சற்றே நகர்த்தி நீர் படாத இடங்களை சோப்புத் தண்ணீரால் கொஞ்சம் துடைக்கலாம் என்று முயன்றதில் மாவுக்கட்டு கழன்று கீழே விழுந்து விட்டது..

இதற்கிடையே தேவ் தனது நண்பரான இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனைக்கு போகும்படி சொல்லி இருந்தார். அலைச்சல்களுக்குப் பின் அந்த மருத்துவரை சந்தித்தால் அவரும் நமது முகநூல் நண்பர்தான்.. Ragu Pathy. பிரியம் மாறாமல் தனது சக ஆர்த்தோவிடம் என்னை அழைத்துச் சென்று ரகுபதி காட்ட அந்த ஆர்த்தோ என் எலும்பு நன்றாக கூட ஆரம்பித்துவிட்ட தகவலைச் சொல்லி ஒரே ஒரு grip bandage ஐ மட்டும் போட்டு அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைத்தார்..

எத்தனையோ கடந்து வந்துவிட்டேன்.. ஆனால் என் மீது காட்டப்படும் இத்தனை பிரியங்களை நான் என்ன செய்வது என்பது புரியவில்லை.. தாகித்தவன் இரு கை ஏந்தி மழையைப் பருகுவது போல பிரியத்தைப் பருகியபடியே இருக்கிறேன்.. ஒரு நாளும் திருப்பித் தர முடியாத அளவுக்கு எதற்காக இந்த மனிதர்கள் எனக்கு இப்பிரியங்களைப் பரிசளிக்கிறாரகள் என்பது எனக்கு எந்நாளும் புரியவே புரியாது என நினைக்கிறேன்..

அன்புள்ளவர்களைப் பற்றி சொல்லத் துவங்கும்போது கூட அய்யன் வள்ளுவன் முதலில் அன்பிலார் எல்லாம் என்றுதான் துவங்கி இருக்கிறான்.. ஆனால் இத்தனை அன்புடையாரும் சேர்ந்து என் என்பை சரி செய்ய என்ன புண்ணியம் செய்தேன் என்றுதான் தெரியவில்லை..

நெகிழ்வுகள் இருந்தபடியே இருக்க என்னிடம் வந்து சேகரமாகி இருக்கும் இந்த தாளமுடியாத பிரியங்களை யாரிடமாவது தந்தாலே போதுமென்று இருக்கிறது எனக்கு..

நிச்சயம் பிரியங்கள் பொல்லாச் சுமைதான் நண்பர்களே..
 
வீச்சென்ற ஒரு கதறலில்
உங்கள்
பதற்றத்தைப் பெறும்
தெருநாய்க் குட்டி
முறிந்த காலின்
வலியையும் மீறி
பரிவுடன் தூக்கும்
உங்கள் புறங்கையை
தன் மென் நாக்கால்
நக்குகிறது..

என்றென்றும்
புன்னகைக்காத நீங்கள்
உணவு நன்றாக இருப்பதாக
சொன்ன ஒரு சொல்லுக்கு
பல மாதங்கள் கழித்து
புன்னகைக்கிறார்
உங்கள் மனைவி..

தேவைக்கு அதிகமென
நினைத்து நீங்கள்
கொடுத்த டிப்சுக்காக
நீங்கள் திருப்திப்படும் அளவுக்கு
வளைந்து வணக்கம் வைக்கிறார்
மதுச்சாலை சேவகர்..

அவரவர் கடமைக்காக
ஊதியம் தாண்டி
பரிசில்கள் அளித்த மகாராஜா
நிம்மதியாக உறங்கப் போகிறார்..

அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்
அன்பே சிவம்..