Sunday 23 March 2014

நூல் பிரிந்து தொங்கும்
அரைப்பாவாடையும்
துளை மாறி பட்டன் போட்ட
ஆம்பிளைச் சட்டையும்
போட்டவள்தான்
அக்கா குட்டி
அழும் ஆடையில்லாத
தம்பி குட்டிக்கு
கண்துடைத்துவிட்டு
அவளது பிஸ்கெட்டில்
பாதியை பிய்த்துத் தருகிறாள்
கூடவே தன் புன்னகையையும்..
உங்களுக்கு நிறைய கவலைகள்
உங்கள் பர்சுகளில்
பணம் குறைந்திருக்கலாம்
உங்களது கேர்ள் ஃபிரண்ட்
சண்டையிட்டிருக்கலாம்
உங்களது இருசக்கர வாகனம்
கிளம்ப மறுத்திருக்கலாம்
இன்னும் இன்னும் சில பல காரணங்கள்
இருந்ததனால்
ஒரு ஓரத்தில் கிடக்கும்
என் விண்ணப்பத்தை
நீங்கள்
கவனிக்காமல் இருந்திருக்கலாம்.
உண்ட கையைக்
கழுவ நேரமில்லாமல்
பேப்பரில் துடைக்க விழையும் நீங்கள்
என் விண்ணப்பத்தில்
கைதுடைக்கும் முன்பாக
அதன்
கடைசி வரியை மட்டுமாவது
படியுங்கள் அய்யா..
அது சொல்கிறது :
எனக்கு
ரொம்பப் பசிக்கிறது சாமி..
நேற்று முதல்நாள்
வீடு திரும்பும் இரவில்
மிதமிஞ்சிய போதையால்
நிலைபிறழ்ந்த நண்பனை
எழுப்பவோ அல்லது
எழும்பாமல் படுக்கவைக்கவோ
போராடிய நண்பனைப் பார்த்தேன்.
கெட்ட வார்த்தைகளால்
அந்த போதை நண்பன்
உதவும் நண்பனை
செதுக்கி எடுத்ததைக்
கேட்டபடிதான் கடந்து போனேன்..
நேற்று காலையில்
பேப்பர் வாங்கப் போகையில்
அந்த குடிகார நண்பன் எழுந்து
அரக்கப் பரக்க
தன் சட்டைப் பை
பணத்தை தேடியபடி இருந்தான்.
எதுக்கு அவ்வளவு குடிக்கணும்
எதுக்கு இப்ப தவிக்கணும்
என்று நான் கேட்டபோது
ரொம்ப குடிக்கல சார்
யாவகம் எல்லாம்
நல்லாத்தான் இருந்திச்சு.
எவனோ ஒரு பரதேசி
ஃபிரண்டுன்ற மாதிரி
என்னை கொள்ளையடிச்சான்
அத்தனை போதையில
அதை தடுக்கமுடியாம
அவனை திட்டிக்கிட்டே இருந்தேன்
என்றான் அவன்..
களவும் கருணையும்
ஒருவடிவம் கொண்டது
எதற்காக என திகைத்து
அடுத்த சொல் பேசாது
வீடு திரும்பினேன்
நான் என்ற அயோக்கியன்..
ஆடும் ஊஞ்சலில்
ஒரு வயது போகிறது
ஒரு துக்கம் வருகிறது
குழிந்து ஏந்திய கைகளில் பெய்யாமல்
மழை
எல்லா இடத்திலும் பெய்கிறது
விரித்த கைகளுடன்
கனவில் பறக்கும் குழந்தை
விழித்தபின் அழக்கூடும்
இல்லாத பொற்காசுகளை
இல்லாத பைகளில் இருந்து
இல்லாத பிச்சைக்காரனுக்கு
அள்ளியள்ளி வழங்கிப் போகிறான்
மனம் பிறழ்ந்த பிச்சைக் காரன்
இருக்கிறதென்றோ இல்லையென்றோ
உறுதியாகச் சொல்ல முடியாது
அன்பை
எப்போதும் என் துழாவும் கரங்களுக்கு
சிக்கியே விடுகிறது ஒரு செடியோ மரமோ
பள்ளத்தில் வீழும் முன்பு
இந்த இக்கரையிலிருந்து
பள்ளத்தில் வீழாமல்
தினந்தோறும் பயந்தபடி இருக்கிறேன்
ஆயிரம் கரங்கள்
என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும்போதும்
பிள்ளைக்கறி
@@@@@
தெருக்களில் கூவிக் கூவி
விற்கிறான் சிறு வியாபாரி
அவனது கூடையில்
24 கனவுகள் இருக்கின்றன
வாங்குவோர் இல்லையெனினும்
தினந்தோறும் அவற்றை
துடைத்து முத்தமிட்டு
கூடைக்குள் வைக்கிறான் அவன்.
விலை எப்படி
என்று கேட்பவர்களிடம்
ஒரே ஒரு தடவை
இந்த கனவுகளை கையில் வைத்து
அவற்றின் களங்கமற்ற கண்களை
பார்த்து விலைகேளுங்கள் என்றே
கெஞ்சுகிறான் அவன்..
பேச நேரமில்லாது
அதிவர்ண விளக்குகள் மின்னும்
கடைகளில் சென்று
பொம்மைகள் வாங்குவோரிடம்
இவன் சொல்ல விரும்புவதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
இவையெல்லாம்
வெறும் கனவுகள் அல்ல
என் பிள்ளைகள்..
இப்படியாகக் கழிகின்றன
என்
எல்லாப் பொழுதுகளும்..
வைத்துவிட்டுப் போன புன்னகைகள்
திரும்பி வரும்முன்னே
நசுங்கிக் கிடக்கின்றன..
வந்து பார்க்கையில்
செடிரோஜாப் பூக்கள்
பாதிதான் இருக்கின்றன.
பொக்கிஷமான கண்ணீர்த்துளியை
யாரேனும்
சாக்கடையில் வீசிவிட்டுப்
போயிருக்கிறார்கள்.
தேடிச் சேர்த்த
கூழாங்கற்களை
கட்டிடம் கட்டப்
பயன்படுத்தி விட்டார்கள்.
என்ன மயிரு புன்னகை
இன்னொருக்க சிரிச்சிட்டாப் போச்சு
என்ன மயிரு ரோசாப்பூ
நாளைக்கு பூக்காமலா போகும்
என்ன மயிரு கல்லு
அதென்ன வைரமா
என்று சொல்லும் உங்களிடம்
என்ன பதில் சொல்ல
அந்தப் புன்னகை
இறந்தவனின் கடைசிப் புன்னகையென்றும்
அந்த ரோஜா
அச்செடி எனக்காகப் பூத்ததென்றும்
அந்த கூழாங்கற்களை
இறக்குமுன் அந்நதி
எனக்குத் தந்ததென்றும்
எப்படி விளக்க முடியும் உங்களிடம்
உங்கள் கேள்விகள் எளிமையானவை
என் பதில்களால் உங்களைக் கொல்ல
நான் விரும்பவில்லை.
நேற்று ஒரு பெரும் தொழிலதிபர் வீட்டுத் திருமண வரவேற்புக்கு எங்கள் இயக்குநருடன் போயிருந்தேன். உடன் போயிருந்தேனென்றாலும் எனக்கும் தனியாக அழைப்பு வைத்திருந்தார்கள்தான். எங்கள் இயக்குநரின் நண்பரின் காரில் போனோம். ITC சோழா என்று மிகப்பெரிய ஹோட்டலில் வரவேற்பு. பல முறை கிண்டி வழி சென்றிருந்தாலும் அந்த ஹோட்டலை நான் கவனித்ததே இல்லை. முக்கிய காரணம் அதைக் கடக்கும் பகுதியில் சிக்னலைக் கடந்து செல்லும் டிராஃபிக் பதற்றம் என்றே நினைக்கிறேன். எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய ஹோட்டல்.. எழு நட்சத்திர ஹோட்டல் என்றார்கள். மும்பை தாஜ்ஜைவிட பெரியது என்றார்கள். சந்தன வண்ண மார்பிள் கற்களால் இழைத்து இழைத்து கட்டி இருக்கிறார்கள். அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளில் ஒன்றைக் கட்டும் செலவிலேயே ஒரு சிறு குடும்பம் வாழ போதுமான ஒரு சிறு வீட்டை கட்டிவிடலாம் போல.. அத்தனை பணம்.
நகரும் படிக்கட்டுகள். ஆங்காங்கே நாம் தொலைந்து விடாமல் வழிகாட்ட கோட் சூட் அணிந்த பணியாளர்கள். இதைத்தவிர கூட்டமான கூட்டம். ஹோட்டலுக்குள் நுழைவதற்கு முன் வெளியிலேயே கார்களின் வரிசை துவங்கிவிட்டது. சரியாக உள்ளே நுழைந்து நாங்கள் காரை வாலட்டிடம் கொடுத்துவிட்டு இறங்க நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆனது. வரிசை முழுக்க ஃபேன்சி நம்பர் கொண்ட விலையுயர்ந்த கார்கள்தான். மணமகனின் தந்தை அத்தனை விஐபி. உள்ளே நுழைந்ததுமே எங்களை நாங்கள் பணிபுரிந்த முந்நாள் நிறுவனத்தின் சிஇஓ காத்திருக்க விடாமல் பத்தே நிமிடத்தில் மணமக்களருகில் அழைத்துச் சென்றுவிட்டார். அத்தொழிலதிபரின் பல்வேறு தொழில்களில் சீரியல் தயாரிக்கும் பிரிவின் சிஇஓ அவர். அந்தப் பிரிவின் முன்னாள் தொழிலாளன் நான்.
வரவேற்பு அரங்கம் அத்தனை பெரியது. எங்க ஊர் வெங்கடேஸ்வரா தியேட்டரை ரெண்டு தரம் உள்ளே வைக்கலாம். அத்தனை பெரியது. அந்த அரங்கம் நிறைய மனிதர்கள். அத்தனை பேரும் விஐபிக்கள். ஸ்டாலின், கமல், கனிமொழி, ஜிகே வாசன், அதர்வா என்று நான் அங்கிருந்த வரை வந்து போனார்கள். ஒரு ஓரமாக பெரும்பாலானோரால் கவனிக்கப்படாமல் ஆர்க்கெஸ்ட்ராவில் வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி அமரன், சுசித்ரா, மனோ என்று அவர்கள் பாட்டுக்கு நின்று பாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கமாக பஃபே சாப்பாட்டுக்கடை. வெரைட்டியான வெரைட்டி. எனக்கா பெரிய்ய ஏமாற்றம். அத்தனையும் சைவம். அசைவத்துக்கு இடமே இல்லை. அடப் பாவிகளா. இத்தனை செலவு செய்து கல்யாணம் வைப்பவர்கள் அசைவச் சாப்பாடு போட்டால் குறைந்தா போவார்கள் என்ற கடுப்பில் ஒரே ஒரு நானுக்கு என்னத்தையோ போட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வீடு வந்துதான் தோசை சாப்பிட்டேன். சாப்பிட்டு முடிந்து தொலைந்து போன மற்றவர்களை கண்டு பிடித்து ஒன்று சேர்த்து ஒரு வழியாக கீழே இறங்கினோம்.
வேலட்டிடம் வண்டி எண்ணைக் கொடுத்துவிட்டு நின்றதிலிருந்து வண்டி வெளியேறுவது வரை முப்பது நிமிடம் ஆனது. வீடு வந்து சேர பத்தரை..
அந்த அரங்கத்துக்கான வாடகை ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்றார்கள். யோவ் என்னோட படத்துக்கே பட்ஜெட் ஒரு கோடி ரூவாதான்ய்யா என சொல்லத் தோன்றியது..
வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் முதலில் தோன்றிய எண்ணம் நம்ம வீடு அந்த ஹோட்டல் பாத்ரூமை விட சின்னது என்பதுதான். என்ன செய்ய. வீரதீர சாகசமெல்லாம் செய்து காட்டி பெரும் புகழ் பெற்றாலும் கடைசியில் நாய் நக்கித்தானே குடிச்சாகணும்..