Showing posts with label poetry. Show all posts
Showing posts with label poetry. Show all posts

Saturday, 10 December 2011

பூ வைத்தல்

அங்கே இங்கே ஓடாதே
மாடிப் படிகள் ஏறாதே 
அடுக்களை வேலைகள் 
அளவாய் செய்.
அதிகம் சுமைகள் 
தூக்காதே.
ஹார்லிக்ஸ் பூஸ்ட் 
குடித்துக்கொள்.
குங்குமப் பூவும்
சேர்த்துக் கொள்.
பையன் பிறந்தால் 
சொல்லி விடு.
என் அப்பா பேர் வைக்கலாம்.
பெண் பிறந்தால் 
கொன்று விடு.

அவள் கல்லறையில் 
பூ வைக்கலாம்.
(எனது நண்பர் லிசாவின் கவிதை இது. எனக்குப் பிடித்த கவிதை என்பதால் போஸ்ட் செய்து இருக்கிறேன்.)

Friday, 9 December 2011

மழை கேட்கக் கடவது...

தர்மம் செய்த 
ஐய்யாமார்களுக்கு 
அருகில் நிற்க கூச்சப்பட்டு 
நனைந்தபடி நிற்கும் 
பிச்சைக்காரக் கிழவிக்காகவும்...

ஊறிய ஈரத்துணியாக 
குப்பையில் செத்துக்கிடந்த 
ஐந்து பூனைக்குட்டிகளுக்காகவும்..

தெர்மாகோல் படகில் 
பள்ளி செல்வதாக 
பேப்பர் புகைப்படத்தில் 
வருடந்தோறும் புன்னகைக்கும் 
அறியா சிறுவர்களுக்காகவும்...

வீட்டுக்குள் தேங்கிய 
கழிவு நீருக்கு நேர்மேலே 
தொட்டிலில் தூங்கும்
சின்ன குழந்தைக்காகவும்...

இன்ன பிற 
பாவப்பட்ட சீவாத்திகளுக்காகவும்..

இந்த சென்னை மாநகரிலே
எப்போது பெய்தாலும் 
கொஞ்சமாய் பெய்யட்டும் 
மழை... 

Saturday, 3 December 2011

நீ பார்க்காதவை

நள்ளிரவில் பெய்த மழை

ஆளில்லாத் தெருவில் 
கண்ணாமூச்சி ஆடிய 
நாய்க் குட்டிகள்.

உச்சி வெயிலின் 
உக்கிரத்தை தப்பிக்க
ஓரடி நிழலில் 
தூங்கும் தாயின் 
முலையுறிஞ்சும்
குழந்தை.

அழுது கொண்டிருந்த 
சிறுமிக்கு கிடைத்த 
ஐந்து ரூபாய் நாணயம்.

மற்றும் 

என் காதல்.