Friday 17 January 2014

மௌனமாய் தலைகுனிந்து
நடந்து போகிற
அவர்களெல்லோரும்
வயதானவர்களில்லை..

தவறான ஸ்வரத்தை
கீய்ச்சும் வயலினை
நாம்
எரிக்க முடியாது..

உதிரும் முருங்கைப்
பூக்களை
பொறுக்க விடாமல்
பிரம்போடு உட்கார்ந்திருக்கிறாள்
கிழவி..

வரிசையில் உட்கார்ந்திருக்கும்
எல்லோரும் பாடுகிறார்கள்
ஓர் ஒப்பாரிக் கவிதையை..

சொடுக்கும் சாட்டையின்
நுனியில் உட்கார்ந்திருக்கிறது
ஒரு வயிறு..

பசித்த எல்லோரையும்
அள்ளியெடுத்து அணைத்துக் கொள்கிறாள்
முது கிழவி..

தயவு செய்து 
இந்த
நாற்காலியில் உட்காருங்கள்..

உங்கள் தராசுகளில் நிறுத்து
என் 
பழைய பாவங்களை
எடுத்துக் கொண்டு செல்லுங்கள்..

இருந்து
நீர்த்து
எரிந்து
அணைந்து
உழன்று
அழுது என
இப்படியேதான் இருக்கிறேன் நான்..

No comments:

Post a Comment