Saturday 28 December 2013

மன்னிப்பு என்பது
ஒரு பக்கம்
ஒற்றை இறகின்
எடையாயிருக்கலாம்
மறுபக்கம்
பருத்த இரும்பின்
எடையாயிருக்கலாம்..

அதே போலதான் கண்ணீரும்..

சொற்கள் எடையற்றவை
ஆயினும்
சாபங்கள்
பெரும் நிறையுடையவையாகும்..

ஆயிரம் வார்த்தைகளில்
முயன்றாலும்
முத்தங்களின் வெதுப்பை
புலப்படுத்த முடியுமா என்ன..?

மன்னிக்கவும் 
ஐயா..
இந்த மொழியை
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..
எனக்கு
மௌனமே போதுமானது..

Thursday 26 December 2013

அன்றைய வசூல்
ஐம்பது ரூபாய்
கொடுக்காததற்காக
அந்த
பூக்காரப் பெண்மணியின்
கற்பு பற்றிய சந்தேகங்களை
பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்
அந்த
கந்து வட்டிக்காரர்..

அண்ணே..
கொஞ்சம் பக்கத்துல 
வாங்கண்ணே
என்றழைத்து
அந்த தட்டை
துழாவி கண்டடைந்து
சத்தமெழுப்பாமல்
ஐந்து ரூபாய்
பிச்சை போட்டு விட்டுப்
போகிறார்
கண் தெரியாத பேனா விற்பவர்..

இரவு நேர
உணவுக்கடையின்
கழிவுகளை அப்புறப்படுத்தும சிறுவன்
கடைதாண்டி
மட்டையாகிக் கிடக்கும்
அவனது அப்பா போன்ற ஒருவனின்
வேட்டியை 
சரி செய்துவிட்டுப் போகிறான்..

தங்கியிருக்கும்
விடுதியின் கைப்பிடிச்
சுவர் தாண்டி
வேடிக்கை பார்க்கிறேன்..

உடல் சுருண்டு
குளிரை
வரவேற்பதாகவோ வெறுப்பதாகவோ
படுத்துக் கொண்டிருக்கிறது செவலை நாய்..

பிடித்தவன் என்றால்
வாலை ஆட்டும்..
பிடிக்காதவன் என்றால்
குலைக்கும் அல்லது கடிக்கும்..
இந்த எளிய நாயின்
நீதிகள் கூட இல்லாத நான்

.....
.....
.....

நாயாகவேனும் பிறந்திருக்கலாமோ..

Wednesday 18 December 2013

பதின்வயது சிறுவன்தான்
உங்க டேஸ்ட்டை சொல்லுங்க சார்..
ஃபிகரை நான் கொண்டு வறேன்
என்றான்..

நகரின்
அநாதை இரவுகளில்
அவன் பார்த்த 
புணர்வுகளில் கற்றுக் கொண்டவனாயிருக்கும்..

புன்னகையுடன் 
மறுக்குங்கால்
எதுனா காசு குடுத்துட்டு போ துரை
என்கிறான்..

சட்டைப் பையிலிருந்து
எடுத்த பணத்தை
நீட்டுகையில்
என் கை நடுங்குகிறது
அவன் கை பசித்திருக்கிறது..
கறுத்த வானம்
ஏற்பதில்லை
என் புகார்களை..

விலக்கி வைத்தாலும்
என் மனதருகிலேயே
ஒலிக்கின்றன அக்குரல்கள்..

இரவு
துயராலானது..

பகல்
வாதைகளாலானது..

தனித்திருத்தல்
யாருக்கு சுகம்..

விழித்திருத்தல் 
துயரம்..

ஒரு சாபத்தினாலேனும்
நான்
கல்லாலானால் என்ன..

Sunday 15 December 2013

பசியின் நிறம்..


செடியின் பசி
என்ன நிறமாயிருக்கக் கூடும்..?

ஒரு புலியின் பசியைவிட
ஒரு பூனைக்குட்டியின் பசி
மிகப் பெரியது என்பதை
எல்லோரும் அறிவீர்கள்தானே..?

அந்த சிறுவனின்
பசி 
இட்டிலிகளின் வண்ணத்தில்
இருக்கக் கூடுமோ..

எனக்குத் தெரிந்து
பசியை அறிந்தவனின் பசி
நெருப்பின் நிறத்தில் இருந்தது..

இன்னொருவனின் பசி
உணவை திரட்டி வந்தது..

ஒரு வேளை 
இந்த 
பசிமட்டும் இல்லையெனில்
யாவருக்கும்
கண்ணீரின் 
நிறமோ சுவையோ
தெரியாமல்
போயிருக்கக் கூடும்..

ஆயினும்
எனக்கு ஒருவனைத் தெரியும்..

கொட்டிக்கிடக்கும்
கண்ணாடிக் கற்களினிடையில்
வைரத்தை அடையாளம் காணும்
பொற்கொல்லனைப் போல
கண்களில் பளிச்சிடும்
பசியை அடையாளம் காண
வரம் பெற்றவன் அவன்..

இடக்கையில் அளையும்
நீரில் தட்டுப்படும்
எல்லாப் பசியையும்
ஒரு முத்தத்தில் 
சொஸ்தப்படுத்துபவனாகக்கூட
அவன் இருக்கக் கூடும்..

தவிக்கும் உள்ளத்துககான
ஒரு கண்ணீர்த்துளியைப் போல
பசித்த எம் வயிற்றுக்கு
உணவினைத் தந்தாய்..
பிதாவே
நீ எனக்கு
அன்னையும் ஆனாய்..

பிதா, சுதன், பரிசுத்த ஆவி
மற்றும் என் 
உலர்ந்த வயிற்றின் பெயரால்
உன்னை
ஆசீர்வதிக்கிறேன்..

யாரேனும் ஆமென் சொல்லுங்கள்..

Wednesday 11 December 2013

ஓங்கிய கை
இறங்கும்முன்னே
பார்வையைத் திருப்பிக் கொண்டேன்..

பாவம்
குழந்தையல்லவா..
நெருப்பைப் போல்
பூத்திருந்தது மலர்..

மலர் எப்படியிருக்கும்
என்று கேட்டதும்
நெருப்பு
செத்துப் போனது..
குவிந்த விரல்களினுள்
சோற்றினைப் பொதித்து வைத்து
வாசல்
கட்டிலடி
கூடம் என்று
துரத்தியபடி இருந்தது
அம்மாவின் கை..

குழந்தை சொன்னது
அம்மா என்றால்
சோறு..
ஒரு மணு விறகு என்பது என்ன என்பது உங்களுக்குத் தெரியது.. மணு என்பது 10 கிலோ.. ஆனால் எங்க ஊரில் அதை ஒரு தூக்கு என்று சொல்வோம்..

இப்போது gas cylinder களும் induction stove களும் வந்துவிட்ட இந்த காலத்தில் விறகு என்பது அர்த்தம் இல்லாப் பொருளாகவே மக்களால் பார்க்கப்படுகிறது..

இன்றைய எனது சென்னை வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் வர தாமதமாகும் ஒரு நாளோ அல்லது ஒரு வாரமோ எங்கள் வீட்டின் சமநிலை குலைவது என்பது நான் கண்கூடாக காணும் ஒரு தண்டனைப் பருவமாக இருக்கிறது..

இது இப்படியிருக்க எனது சிறார் பருவம் விறகினாலானதாகவே இருந்தது.. அம்மா எப்போதும் கையிலிருக்கும் காசுக்குத் தக்கதாகவே விறகு வாங்கிவரச் சொல்லுவாள்.. ஒரு தூக்கு விறகு (10 கிலோ) அப்போது 5 ரூபாயாகஇருந்தது. ஏழரை ரூபாய் இருந்தால்ஒண்ணரை தூக்கு.. 50 ரூபாய் இருந்தால் பேரம் பேசி பதினோறு தூக்கு வாங்கிவிடலாம்..

வாங்கி வரும் விறகு உடனே பயன்படக் கூடியதாக இருக்க 10 சதத்துககும் குறைவான வாய்ப்புதான் உண்டு.. அது பெரும்பாலும் ஈர விறகாகததான் இருக்கும். கண் எரிய, மூச்சு முட்ட ஊதி ஊதி அம்மா சமைத்துக் கொடுப்பது எல்லாம் அவளது உயிர் மூச்சு என்பதை அறியாமலே நாங்கள் உண்போம்.. அதில் ஆயிரம் நொள்ளைநொட்டைகள் வேறு.. 

விறகை அணைத்ததும் மிஞ்சும் கரியை சேமித்து குமுட்டி அடுப்பிலும் சமைப்பாள் அம்மா. அவளது வயிறையும் சேர்த்தால் ஆறு வயிறுகள் உண்ண வேண்டும் எங்கள் வீட்டில்.. அனைத்துமே பசித்த வயிறுகள்.. அதில் எங்கப்பா மட்டும் பசித்த வயிறும் கொடுக்கு நாக்குமாகஇருப்பார்.. சரியான நேரத்துக்கு சாப்பாடு வரவேண்டும்.. அவர் எதிர்பார்க்கும் ருசியோடும் அது இருக்க வேண்டும்..

இவற்றை எல்லாம் சமாளித்துதான் குடும்பம் நடத்தினாள் பாலாம்பாள்..

அப்போது அவளது நிலை மட்டும் இப்படி இல்லை.. சமூகத்தின் பெரும்பான்மைப் பெண்களின் நிலை அப்படித்தான் இருந்தது.. குடும்பத்தின் உணவு பங்கிடும் பொறுப்பு பெண்களிடமே அளிக்கப் பட்டிருந்தது.. அனைவருக்கும் வயிறார உணவிடாதவள் பெண்ணே அல்ல என்று அவளுக்குப் பயிற்றுவிக்கப் பட்டிருந்தது.. அது மட்டுமல்ல.. வயிறார சாப்பிடுபவள் பெண்ணே அல்ல என்பதும் அவளது மண்டையில் திணிக்கப் பட்டே இருந்தது.. (உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு.. இதை அவ்வை என்ற பெண்தான் எழுதினாளா இல்லை fake ID யில் வேறு யாரேனும எழுதியிருந்தார்களா..?)

சாப்பாடு நன்றாக இல்லை என்று தட்டை வீசி எறிதல், தட்டு நிறைய சோறிருக்க அதிலேயே கை கழுவுதல், மற்றும் அழுவது வரை திட்டுதல் என்று அப்பா அவரது சித்திரவதை முறைகளை கையாள, என்னால் இயன்ற வரை அப்பா மீதான கோபத்தை தணித்துக் கொள்ள உண்ணாவிரம் இருந்து அம்மாவை டார்ச்சர் செய்து எனது அவமானத்தை சமன் செய்து கொள்வேன்..

இவை யாவற்றிற்கும் மூல காரணம் பெண்தான் குடும்பத்தின் பசியை ஆற்ற வேண்டும்.. என்ன நடந்தாலும் சரி.. எப்படியாவது - கெஞ்சியாவது - பெண் தன் குடும்பத்தின் பசியைப் போக்கியாக வேண்டும் என்ற கோட்பாடுதான் அனைத்திற்கும் மூலம்..

பசியாற்றுதலுக்கு உணவு முக்கியம்.. உணவு தயாரித்தலுககு விறகு முக்கியம்.. அதனாலேயே பெண்களுக்கு அரிசி வாங்குதலும் விறகு வாங்குதலும் தம் வாழ்வின் முக்கியமான நிகழ்வாக அன்று இருந்தன..கொடுக்கிற காசுக்கு தகுந்த விறகுதான் கிடைக்கும்.. ஆனாலும் ஒவ்வொரு முறையும் விறகுக் கடைக்காரரிடம் சண்டை போட்டு அவள் கொடுக்கும் பணத்துக்கு கொஞ்சமாவது உலர்ந்த விறகை பெற்றுவிட அம்மா முயன்றபடியே இருப்பாள்..

அப்போதைய வாழ்வில் விறகு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது.. இன்றைய வாழ்க்கை முறையில் கேஸ் (gas) வந்தபிறகு விறகுக்கான தேவை முற்றிலும் இல்லை என்றே நான் நினைத்திருந்தேன்.. ஆனாலும் சென்ற முறை ஊருக்குச் சென்றபோது சுடுதண்ணி வைப்பதற்காகவாவது எல்லா வீட்டிலும் இன்னும் விறகடுப்பு உயிரோடு இருந்ததை நான் பார்த்தேன்.. விறகடுப்பு என்பது பெண்களின் மீதான கட்டுப்பாட்டின் குறியீடாக இன்று வரை அப்படியேதான் இருக்கிறது..

சென்னையில் தாவரங்களின் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.. இப்படியொரு கறும்பச்சையுடன் மரங்களையோ செடிகளையோ நான் ஊரில்கூட பார்த்ததில்லை..அதன்காரணம் சென்னை என்பது ஆறுகளின் வடிநிலப் பகுதி.. வண்டல்கள் சேர்ந்து நின்ற வயற்காடு.. எத்தனைதான் சாலைகளைப் போட்டு புதைத்தாலும் அந்தமண் உள்ளேருந்து மரங்களுக்கு தனது வளத்தை வாரி வாரி வழங்கியபடியேஇருக்கிறது..

வெகுவாகவளர்ந்த மரங்கள் மின் லயன்களுக்கு இடையூறாகஇருக்கும் என்று மழைக்காலத்துககு முன்பாகமின்கம்பிகளுக்குப்பக்கத்தில் இருக்கும் மரக் கிளைகளை மின் வாரியத்திலிருந்து வெட்டத் துவங்குவார்கள்.. 

சமீப ஒரு மாத காலமாக எங்கள் பகுதியில் மரக் கிளைகளை வெட்டி வெட்டிப் போட்டுகொண்டே போகிறார்கள் மின்வாரியதொழிலாளர்கள்.. வெட்டப்பட்ட கிளைகள் தெருவோரங்களில் வெயிலில் காய்ந்தபடியும் மழையில் அழுகியபடியும் கிடக்கின்றன.. இதுவேஎங்கள் ஊர் என்றால் போட்டி போட்டுக் கொண்டுவந்து அவற்றை அள்ளிச் சென்று அடுப்புக்கு பயன்படுத்தத் துவங்கி இருப்பார்கள்..

ஆனால் இது சென்னை அல்லவா.. அந்த கிளைகள் குவிந்திருக்கும் பகுதிக்கு அருகிருக்கும் வீட்டுக் காரர்கள் சென்னைகார்ப்பரேஷனுக்கு போன் செய்து அந்த குப்பையால் கொசு பெருகுவதாகவும் அதை உடனே அப்புறப்படுத்தும்படியும் போன் செய்தபடியே இருக்கிறார்கள்..

அந்த போன் செய்யும் அனைவர் வீட்லும் அந்த போன் செய்பவர்களுக்கு அருகில் இருந்தபடி, விறகடுப்பில் சமைத்த ஒரு கிழவி அந்த காய்ந்த கிளைகளெல்லாம் குப்பை லாரியில் அள்ளிச் செல்லப்பட்டு எவருக்கும் பயனற்று அழிக்கப் படப் போவதைப் பற்றிய கவலையில் தனது சிறு வயதில் அவ்வளவு உலர்ந்த விறகுகள் கிடைக்காதது பற்றிய கவலையோடு குப்பை லாரிகளைப் பார்த்தபடி இருக்கக் கூடும்..

நீர் மட்டுமல்ல.. எப்போதும் நெருப்பும் ஒரு சமூகத்துக்கு சம்பாதிக்க வேண்டிய விஷயமாகவே இருக்கிறது..

பிரியமான இரவு வணக்கங்கள்..
ஆம் ஆத்மியின் எதிர்பாராத வெற்றி நமது தமிழ்நாட்டு நண்பர்களிடமும் பெரிய எதிர்பார்ப்பையும் மாற்றத்தைப் பற்றி பெருங்கனவையும் உருவாக்கியிருப்பதை நான் காண்கிறேன்..

நிறைய நண்பர்கள் ஆம் ஆத்மி அரவிந்த் கேஜ்ரிவாலின் தமிழ் வடிவமாக உதயகுமாரண்ணனைப் பார்க்க வேறு துவங்கியிருக்கிறார்கள். அண்ணனை அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்புகள் வரத் துவங்கிவிட்டன.. அழைப்புகளின் தீவிரம் எந்த அளவு இருந்ததென்றால் தன்னால் ஏன் அரசியலுக்கு வர இயலாது என்று உதயகுமாரண்ணன் ஒரு விளக்கத்தை சொல்ல வேண்டிய அளவுக்கு அந்த அழைப்புகள் தீவிரமாக இருந்தன. அவருடைய விளக்கம் வெளிவந்த பின்னும் அதை மறுத்தபடி நண்பர்கள் அண்ணனை மறுபடி மறுபடி அழைத்தபடி உள்ளனர்..

அவர்கள்ஒப்பிடத் துவங்கி விட்டதனாலேயே நான் இங்கே வேற்றுமைகளை பட்டியலிட வேண்டி இருக்கிறது நண்பர்களே..

அரவிந்த் கேஜ்ரிவால் என்பது ஊடகங்கள் கட்டமைத்த அன்னா ஹசாரேயின் பக்க விளைவுதானே அன்றி வேறெதுவும் இல்லை.. தற்போதைய ஊடகங்களின் வாழ்நாள் சந்தாதாரர்களான படித்த இளைஞர்களுக்கு ஊடகங்கள் விற்ற ஊழலற்ற இந்தியா என்ற உட்டோப்பியாவின் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் அன்னா ஹசாரே என்பது நாம் அறியாததல்ல.. என்னமோ லோக் பால் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என்பது போன்ற கார்ப்பரேட் பொய்களை நம்ப இங்கே ஒரு பெருங்கூட்டம் இருப்பதால்தான் இந்த இந்த சர்க்கஸ் சாத்தியமானது.. இங்கே என்ன நிகழ்ந்ததென்றால் மொபைலை விட அதன் ஆக்ஸசரி பெரிய ஹிட் ஆகி விட்டது..

அன்னாவே பொறாமையில் வெந்து போகிற அளவுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் முக்கியத்துவம் பெற்று விட்டார்..

ஆம் ஆத்மியின் வெற்றிக்கு பல காரணங்கள்.. காங்கிரஸ் மீதான மக்களின் வெறுப்பு.. அரவிந்த் செய்த பாசிட்டிவ் பப்ளிசிட்டி ஸ்டண்ட்டுகள்.. மத்தியதர குடும்பங்களின் நம்பிக்கை நாயகன் என்பது போன்ற தோற்றத்தை (ஊடகங்களின் உதவியோடு) நிறுவியது என்று பல காரணங்கள் இருந்தாலும் ஊடகங்களின் உதவி இன்றி இதில் அரை சதவீதம் கூட சாத்தியமாகி யிருக்காது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்..

இப்போது தமிழக நிலைமைக்கு வருவோம்.. இங்கேயும் கூட சசிபெருமாள் என்ற முதியவர் உண்ணாவிரதம் இருந்தார்.. அன்னா ஹசாரேவின் லோக்பால் ஆதரவு உண்ணாவிரதத்தை விட நூறு மடங்கு நியாயமான காரணத்தோடு உண்ணாவிரதம் இருந்தார்.. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மதுவை எதிர்த்து அவர் உண்ணாவிரம் இருந்தார்.. மனசாட்சி உள்ள ஊடகம் என்றால் அதை பெரிது படுத்தி இருக்க வேண்டும்.. ஆனால் என்ன நடந்தது..? எதோ வேலை வெட்டியில்லாத ஒரு பெரிசுவின் உண்ணாவிரதம் போல சித்தரிக்கப்பட்டு முகநூலில் மட்டும் அரைகுறை மனதுடன் விவாதிக்கப்பட்டு அந்த உண்ணாவிரதம் நான்சென்சாகி நசுக்கப் பட்டது..

சரி.. அதை விடுங்கள்.. அது தனி ஒரு மனிதனின் போராட்டம்.. ஈழத் தமிழர் படுகொலைகளின் போது தமிழர்களின் பக்கம் நிற்க வேண்டிய ஊடகங்கள் என்ன செய்தன..? அவரவர் அரசியலில் அவை கவனமாக இருந்து எவ்வளவு தூரம் அப் போராட்டத்தை பாமர மக்களிடம் இருந்து விலக்கி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலக்கி வைத்தன..

ஈகி முத்துகுமாரின் தற்கொடையின்போது சென்னையில் ஒரு சிறு கூட்டம் மட்டும் மனம் கொதித்து, மனம் வெதும்பி, உயிர் வெறுத்து, தூக்கம் துறந்து பிணத்தை வைத்து அழுது கொண்டிருந்தபோது அவனது சடலம் இருந்த கொளத்தூருக்கு வெளியே இருந்த ரெட்ஹில்ஸ் மெயின் ரோட்டில் கூட அந்தசோகம் எதிரொலிக்கவில்லையே..

கூடங்குளத்தில் ஒரு பெரிய கூட்டம் தனது வாழ்வாதாரத்துக்காக அமைதியான முறையில் இரு பெரும் ராட்சதர்களுக்கு எதிராக அறப் போராட்டத்தை இன்று வரை நடத்திக் கொண்டிருக்கையில் மனசாட்சியற்ற தமிழன் இன்னமும் கரண்ட் வராததற்கு கூடங்குளம் அணுவுலைதான் காரணம் என்று நம்பிக் கொண்டு இருப்பதற்கு யார் காரணம்..?

முல்லைப் பெரியாறு பிரச்சினை.. காவிரிப் பிரச்சினை என்று தமிழனின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எல்லாம் தமிழகம் முழுவதும் பரவிவிடாமல் பார்த்துக் கொண்டது யார்..?

எல்லாம் இந்த தமிழ்சமூகம் நம்பி பார்த்தபடி ரசித்துக கொண்டிருக்கும் ஊடகங்கள்தான்..

இன்றைய சமூகமே ஊடகங்களால் கட்டமைக்கப் பட்டதுதான்.. அப்படி இன்றி தமிழனுக்க தன்மானமும் விழிப்புணர்வும் மட்டும் இருந்திருந்தால் அவ்வளவு பெரிய துரோகத்துக்கும்,ஊழலுக்கும் பிறகும் தமிழகத்தில் (தோற்றிருந்தாலும் )திமுக வால் இவ்வளவு ஓட்டு வாங்கி இருக்க முடியாது.. கூடங்குளம் விவகாரத்திலும் ஈழ விவகாரத்திலும் மணிக்கொரு பல்ட்டி அடித்த ஜெவின் கட்சி நிச்சயம் ஒரு வோட்டு கூட வாங்கியிருக்க இயலாது..

கதாநாயக வழிபாடும், ஊடக சப்போர்ட்டும் இன்றி இந்த சமூகத்தில் யாருமே உருவாக இயலாது என்பதுதான் இன்றைய நிலை..

ஊடகங்கள் அனைத்துமே கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.. அல்லது பெரும் பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.. இப்படி இருக்கும் ஊடகங்கள் உதயகுமாரண்ணனுக்கு நிச்சயம் சப்போர்ட் பண்ண மாடடவே மாட்டார்கள்.. அவர்களின் உதவியின்றி நிச்சயமாக ஆம் ஆத்மி போன்ற பெரு வெற்றியை பெறவே இயலாது.. 

இவர்களது சப்போர்ட் இருந்தால் ஒரு வேளை நாளையே வைகுண்ட ராஜன் கூட பெரிய தியாகியாக நம் மீது திணிக்கப் பட்டால்ஆச்சரியம் இல்லை..

ஆக இந்த நண்பர்கள் கனவு காண்பது மாதிரி உதயகுமாரண்ணன் அரசியலுக்கு வந்தால் உடனடி மாற்றம் நிகழும் என்பது நடக்காது என்றே நான் நம்புகிறேன்.. அதற்கு தீர்க்கமான திட்டமிடலும் ஊடகங்களுக்கெதிரான சரியான வியூகங்களும் மிக மிக அவசியமாக தேவைப்படுகிறது..

இப்போதைக்கு நம் கையில் இருக்கும் மிகப் பெரிய எளிய மனிதனின் ஊடகம் முகநூல்தான்.. இப்போதைக்கு தமிழ்சமூகத்தில் இதனது தாக்கம் மிக மிக குறைவுதான்.. இன்னும் லட்சக் கணக்கில் இளைஞர்கள் முகநூலுக்கு வர வேண்டும்.. முகநூலின் வலிமை பெருகும்போது மட்டுமே உதயகுமாரணண்ணன் போன்ற நமது ஹீரோக்களின் வெற்றி சாத்தியப்படும் என்று நான் நம்புகிறேன்..

ஆகவே அண்ணனை அரசியலுக்கு அழைக்கும் முன் அதற்கான சூழலை ஏற்படுத்துவோம்.. இளைஞர்களை ஏராளமாக இந்தமேடைக்கு கொண்டு வருவோம்.. அதன் பின்னர் நம் கனவுகளை சாத்தியப் படுத்துவோம் என்றே எனக்கு சொல்லத் தோன்றுகிறது..

உண்மையில் நமது வெற்றி என்பது இல்லாமலில்லை.. 

என்ன.. சற்று தொலைவில் இருக்கிறது அவ்வளவுதான்.. அதை நோக்கிய நமது திட்டங்கள் இன்றிலிருந்தே துவங்கட்டும்..

இன்றே துவங்கினாலதான் நாளை அல்ல எனினும் நாளை மறுநாளாவது நமக்கே நமக்கான தமிழகம் மலரும் என்று உறுதியாக நம்புகிறேன்..

நம்புவோம்.. அதை நோக்கி நடப்போம் நண்பர்களே.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?